6 மாதங்கள் `லிவிங் டுகெதர்’ உறவு; விட்டுச் சென்ற தமிழக இளைஞர்... வலைவீசி தேடும் ஆந்திர காதலி!
ஆந்திராவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மனுவில் அவர், ``நான், ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள். இன்ஜினீயரிங் படித்துவிட்டு, பெங்களூருவில் தங்கி, அங்குள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலைச் செய்து வந்தேன். என்னைப் போன்றே தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோபிநாத் என்ற 32 வயது இளைஞனும், பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைச் செய்துகொண்டிருந்தார். பெங்களூருவில் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. போனில் பேசி நட்பை வளர்த்துக்கொண்டோம்.
பிறகு, அது காதலாக மாறியது. இதையடுத்து, ஒரே வீட்டில் `லிவிங் டுகெதர்’ உறவில் 6 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். திருமணம் மீறிய உறவு முறையிலும் நெருக்கமாக இருந்தோம். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக கோபிநாத் கூறியதால், அவர் விருப்பத்துக்கு இடம் கொடுத்தேன். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியிலுள்ள நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, மேல்விஷாரத்துக்கு வந்துவிட்டார் கோபிநாத். ஆனாலும், அடிக்கடி என்னை வேலூர் வரவழைத்து தனியார் லாட்ஜிக்கு அழைத்துச் சென்று நெருக்கமாக இருந்தார்.
இப்போது, திடீரென அவருக்கு வெளிநாட்டில் மணப்பெண் பார்த்து, அவரது பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபற்றி எனக்குத் தெரிந்தவுடன் ராமநாதபுரத்துக்குச் சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தேன். 2 முறை தற்கொலைச் செய்துகொள்ளவும் முயன்றிருக்கிறேன். போலீஸார் கைது நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்ததால், கோபிநாத் என்னை திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உத்தரவாதம் தந்தார். இதையடுத்து, கடந்த 6-ம் தேதி காலை என்னை அழைத்துக்கொண்டு வேலூர் சத்துவாச்சாரி பகுதிக்கு வந்தார்.

`இங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்ளலாம். நான் இங்கிருந்து தினமும் மேல்விஷாரத்துக்கு வேலைக்குச் செல்கிறேன்’ என்று சொன்னார். வாடகை வீட்டையும் பார்த்து குடித்தனம் சென்றுவிட்டோம். அன்று மாலை, வெளியே சென்று வருவதாகக் கூறிய காதலன் கோபிநாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவரது உறவினர்களுக்குப் போன் செய்து கேட்டாலும், அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே, எனது காதலன் கோபிநாத்தை கண்டுபிடித்து என்னுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆந்திர இளம்பெண்ணின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். காவல்துறையினரோ, ஏற்கெனவே ராமநாதபுரத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்திருப்பதால், அங்கேயே சென்று மீண்டும் புகார் தெரிவிக்கச் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


