முதலீட்டில் உங்கள் பணம் பாதுகாப்பாக வளர வேண்டுமா..? இந்த 3 தவறுகளை செய்யாதீங்க..!

சம்பாதிக்கும் அனைவரும், அவர்கள் மற்றும் குடும்பத்தினரின் எதிர் கால தேவைகளுக்கு வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து முதலீடு (Investment) செய்து வர வேண்டும். இப்படி முதலீடு செய்யும் போது மூன்று விஷயங்களை முக்கியமாக தவிர்க்க வேண்டும்.

1 அதிக வட்டி வருமானத்துக்கு ஆசைப்படக் கூடாது..!

சில நிறுவனங்கள் மாதத்துக்கு 5% வட்டி வருமானம் தருகிறோம் என ஆசை வார்த்தை காட்டி பொதுமக்களிடம் இருந்து பணம் திரட்டுகிறார்கள். மாதம் 5% வட்டி என்றால் ஆண்டுக்கு 60% வருமானம் ஆகும். எந்தத் தொழிலில் இந்த அளவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என யோசித்து பார்க்க வேண்டும். இந்தக் கேள்வியை டெபாசிட் திரட்டும் நிறுவனத்தின் ஏஜென்ட்கள் மற்றும் அதிகாரிகளிடமும் கேட்க வேண்டும்.

வட்டி வருமானம்

இது போன்ற அதிக வட்டி தருகிறோம் என்கிற நிறுவனங்கள் பொன்ஸி என்கிற மோசடி நிறுவனங்களாக தான் இருக்க முடியும். அதாவது, ஒருவர் செய்யும் முதலீடு அல்லது மற்றவரின் முதலீட்டுப் பணத்தை வருமானம் என சொல்லி குறிப்பிட்ட காலத்துக்கு கொடுத்துவிட்டு, பின்னர் கோடிக் கணக்கில் மோசடி செய்துவிட்டு எஸ்கேப் ஆவதுதான் இந்த நிறுவனங்களின் மெகா திட்டமாக இருக்கும்.

இந்த விஷயத்தில் பொதுமக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வருமானம் தருகிறது என்றாலே உஷாராகி விட வேண்டும் என்கிறது ஆர்.பி.ஐ.

2 புரியாத முதலீட்டுத் திட்டங்களில் பணம் போட வேண்டாம்..!

நீங்கள் முதலீடு செய்யப் போகும் திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் பணத்தை எதில் முதலீடு செய்யப் போகிறார்கள், அந்தத் திட்டங்களிலிருந்து உங்களுக்கு எப்படி வருமானம் வருகிறது என்பதை அறிந்துக் கொள்வது மிக அவசியமாகும். புரியாத முதலீடுகளில் பணத்தை போட்டால் மோசம் போவது உறுதியாகும்.

ரிஸ்க்

அதே நேரத்தில், ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வது அவசியமாகும். முதலீட்டின் மதிப்பு குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்துக்கு உட்படுவது ரிஸ்க் எனப்படும். ஆனால், இந்த ரிஸ்க் குறிப்பிட்ட நீண்ட காலத்துக்கு பிறகு இல்லாமல் போய்விடும். உதாரணத்துக்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எடுத்துக் கொண்டால் குறுகிய காலத்தில் அது அதிக ரிஸ்க்கானதுதான். காரணம், பங்குச் சந்தையின் செயல்பாடு குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதாகும். ஆனால், ஐந்தாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட ஆண்டுக்கு சுமார் 13-15 சதவிகித வருமானம் கொடுக்க வல்லவையாக உள்ளன. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நிதி மேலாளர்கள் நிர்வகித்து வருவதால் அதிக வருமானம் கொடுக்கவே அதிக வாய்ப்புள்ளது எனலாம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் பணத்தை எந்த நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு செய்கின்றன என்பதை முதலீட்டாளர்களுக்கு பொது வெளியில் அறிவிக்கின்றன.

சொத்துப் பிரிவுகள்

3 ஒரே திட்டத்தில் மொத்தப் பணத்தையும் போடக் கூடாது..!

முக்கிய சொத்துப் பிரிவுகள் என எடுத்துக் கொண்டால், பங்குச் சந்தை சார்ந்தது (நிறுவனப் பங்குகள். பங்குச் சந்தை சார்ந்தது), கடன் சந்தை சார்ந்தது (ஃபிக்ஸட் டெபாசிட்கள், கடன் பத்திரங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள்), தங்கம் (தங்க நகை, தங்க நாணயம், டிஜிட்டல் கோல்டு - கோல்டு இ.டி.எஃப், கோல்டு ஃபண்ட், கோல்டு பாண்டு), ரியல் எஸ்டேட் (மனை, வீடு, வர்த்தக கட்டடம், ரெய்ட்) போன்றவையாகும்.

நம்மில் சிலர் இந்தச் சொத்து பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் அவரின் மொத்தப் பணத்தையும் போட்டு விடுகிறார்கள். அது அதிக ரிஸ்க்கானது ஆகும்.

பொதுவாக, பெண்களை எடுத்துக் கொண்டால் தங்க நகையாக வாங்கி குவித்து விடுகிறார்கள். நகையாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி. எல்லாம் சேர்ந்து நகையின் மதிப்பில் 15-20% சென்று விடுகிறது. அடுத்து தங்கத்தின் விலை எப்போதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் என சொல்ல முடியாது. இந்தியாவில் தொடர்ந்து 3, 5 ஆண்டுகள் தங்கத்தின் விலை ஏறாமல் கூட இருந்திருக்கிறது. இதே போல் பங்குச் சந்தையும் தொடர்ந்து சில ஆண்டுகள் இறக்கத்திலேயே இருந்திருப்பதை காண முடிகிறது. பொதுவாக, தங்கத்தின் விலை ஏற்றத்திலிருக்கும் போது பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும்.

கட்டுரையாளர்: ஆர்.வெங்கடேஷ்

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை எடுத்துக் கொண்டால் கடந்த 6,7 ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் 6.5-7% வருமானத்தை தான் கொடுத்திருக்கிறது. இந்த வருமானம் விலைவாசி (பணவீக்க விகிதம்) அளவுக்குத்கான் இருக்கிறது. அடுத்து ரியல் எஸ்டேட் துறையும் சில ஆண்டுகள் தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதை காண முடிகிறது. 2008 உலக நிதி நெருக்கடி, 2020 கோவிட் 19 பாதிப்புக்கு பிறகு சில ஆண்டுகள் மந்த நிலையில் காணப்பட்டது.

அந்த வகையில் ஒருவரின் முதலீட்டுக் கலவை எப்போதும் லாபகரமாக இருக்க நாம் மேலே குறிப்பிட்ட முக்கிய சொத்து பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது அவசியமாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.