`சல்மானை அல்ல; பாலிவுட்டை டார்கெட் செய்து துப்பாக்கிச்சூடு நடந்தது - குற்றப்பத்திரிகையில் தகவல்!
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின்மீது மர்ம நபர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திச் சென்றனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களும் பிடிபட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சாகர் பால், விகாஷ் குப்தா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அனுஜ் என்பவர் கடந்த மே ஒன்றாம் தேதி போலீஸ் காவலில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து எஞ்சிய 5 பேர் மீதும் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 1,736 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், டிஜிட்டல், தொழில் நுட்ப ஆதாரங்கள் மற்றும் 46 பேரின் சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர் அர்பாஸ் கான் ஆகியோரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இத்துப்பாக்கிச்சூட்டில் சிறையில் இருக்கும் டெல்லி மாஃபியா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் நீதிபதி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி குஜராத் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதோடு குற்றவாளிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், ஹெல்மெட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோயும், விக்கி குப்தாவும் பேசிக்கொண்ட ஆடியோவும் சிக்கி இருக்கிறது.
குற்றப்பத்திரிகையில், லாரன்ஸ் கூட்டாளிகள் தாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது என்பதை தெரிவிக்கவே சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதோடு சல்மான் கானுக்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்றும், ஒரு வித பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மும்பையில் தற்போது எந்த வித மாஃபியாவும் செல்வாக்குடன் இல்லை என்பதால் அந்த இடத்தை நிரப்பவேண்டும் என்பதற்காகவும்,

பாலிவுட் பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்கவேண்டும் என்பதற்காகவும், பாலிவுட் பிரமுகர்கள் மத்தியில் ஒரு வித பயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸார் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். தங்களது செல்வாக்கை நிரூபிக்க மேலும் ஒரு பாலிவுட் நடிகர் வீட்டையும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் கண்காணித்துள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்கு பழிவாங்கவே லாரன்ஸ் பிஷ்னோய் தனது கூட்டாளிகள் மூலம் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் குற்றப்பத்திரிகையில் வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


