`ரூ.25,000-ஐ தையல் கடைகாரரிடம் கொடுத்துடுங்க- லஞ்சம் வாங்கிய VAO.. மஃப்ட்டியில் மடக்கிய விஜிலென்ஸ்!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நிலத்தை சர்வே செய்து கொடுக்க லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. உட்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், "காரியாப்பட்டி தாலுகா கீழஉப்பிலிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் நக்கீரன் (வயது 55). இவர், அப்பகுதியில் குத்தகை நிலத்தில் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், தான் குத்தகை பெற்றிருக்கும் நிலத்தினை சர்வே செய்து கொடுப்பதற்கு வேண்டி நக்கீரன், அப்பகுதியில் டி.கடமன்குளத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியிருக்கிறார். அப்போது அவரை சந்தித்த, கிராம நிர்வாக அலுவலரான செல்வராஜ், நிலத்தை சர்வே செய்து கொடுப்பதற்கு 30 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நக்கீரன், தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று தெரிவித்திருக்கிறார். உடனே சிறிது யோசித்துவிட்டு 25 ஆயிரம் ரூபாய் தந்தால் நிலத்தை சர்வே செய்து தருவதாக வி.ஏ.ஓ செல்வராஜ் கூறியிருக்கிறார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத நக்கீரன், வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும்படி நக்கீரனிடம் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். அதன்படி, டி.கடமன்குளம் கிராம நிர்வாக அலுவலதத்துக்கு இன்று சென்ற நக்கீரன், வி.ஏ.ஓ செல்வராஜை சந்தித்து பேசினார். அப்போது, கொண்டுவந்திருக்கும் ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணத்தை அதேப் பகுதியில் தையல்கடை நடத்திவரும் மோகன்தாஸிடம் கொடுத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
வி.ஏ.ஓ செல்வராஜ் சொன்ன தகவலின்படி, ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணத்தை டெய்லர் மோகன்தாஸ் பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பூமிநாதன், சால்வன் துரை மற்றும் போலீஸார் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, மோகன்தாஸ் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் நிலத்தை அளந்து தருவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக வி.ஏ.ஓ செல்வராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மோகன்தாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


