Gautam Gambhir: இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் கம்பீர்; அதிகாரபூர்வமாக அறிவித்த பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது பிசிசிஐ.
இந்திய அணியின் பயிற்சியாளராகக் கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். அவரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பையோடு நிறைவடைந்தது. உலகக்கோப்பையை வென்ற கையோடு டிராவிட் இந்திய அணியிலிருந்து விடைபெற்றார். டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் ஐ.பி.எல் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே புதிய பயிற்சியாளர்களுக்கான தேர்வை பிசிசிஐ தொடங்கியது.
கவுதம் கம்பீரை ஆலோசகராகக் கொண்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடந்து முடிந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு சாம்பியனாகியிருந்தது. இதனால் பிசிசிஐ, கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்ய விரும்புவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. கவுதம் கம்பீரும் இதற்கு மறுப்பு தெரிவிக்காமலேயே இருந்தார். உலகக்கோப்பை முடிந்தபிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பிசிசிஐ செயலாளர் கம்பீரை புதிய பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் ஜெய் ஷா.
அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், "கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக வரவேற்பதில் பெருமைகொள்கிறேன். நவீன கிரிக்கெட் வேகமாகப் பரிணமித்து வருகிறது. கவுதம் கம்பீர் அதை அருகிலிருந்து பார்த்திருக்கிறார். அவருடைய கரியரில் பல்வேறு கதாபாத்திரங்களில் கடினமாக உழைத்து மேதைமை அடைந்திருக்கிறார். அவரால்தான் இந்தச் சமயத்தில் இந்திய கிரிக்கெட்டை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ
— Jay Shah (@JayShah) July 9, 2024
அவருடைய அனுபவமும் இந்திய அணி சார்ந்த அவரின் தொலைநோக்குப் பார்வையும்தான் அவரை இந்தப் பணிக்கு முழுமையான தகுதியடையவராக பார்க்க வைத்தது. புதிய பயணத்தைத் தொடங்கவிருக்கும் கம்பீருக்கு பிசிசிஐயின் ஆதரவு முழுமையாக இருக்கும்" எனக் கூறியிருக்கிறார்.
எதிர்பார்த்தபடியே கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக்கப்பட்டிருப்பதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


