Doctor Vikatan: மாதம் ஒருமுறை பேதி மருந்து எடுப்பது சரியானதா?
Doctor Vikatan: என் கிராமத்து உறவினர் ஒருவர், மாதம் ஒருமுறை வீட்டிலுள்ள அனைவருக்கும் பேதி மாத்திரை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இது வயிறு மற்றும் குடல் பகுதியைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்கிறார். அன்றைய தினம் உணவு எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கிறார். இது எந்த அளவுக்குச் சரியானது? குடலைச் சுத்தப்படுத்த வேறு ஏதேனும் வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பேதி என்பது குடல் மற்றும் வயிற்றுப்பகுதியைச் சுத்தப்படுத்துகிற ஒரு விஷயம்தான். ஆனால், எந்த வயதில், யார், எவ்வளவு, எத்தனை நாள்களுக்கொரு முறை எடுக்கிறார் என்பது இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
சித்த மருத்துவத்தில் இதற்கென பிரத்யேக மருந்துகள் உள்ளன. மருத்துவரின் பரிந்துரையோடு அவற்றை எடுத்துக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் வீட்டிலேயே இயற்கையான பொருள்களைக் கொண்டு இதற்கான மருந்தைத் தயாரித்துப் பயன்படுத்துவார்கள். தவிர, வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்தது. அதையெல்லாம் அளவோடு எடுத்துக்கொள்வதில் பிரச்னையல்ல. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மாதம் ஒருநாள் தவறாமல் இதைச் செய்வது நிச்சயம் சரியானதல்ல.
அடிக்கடி பேதிக்கு மாத்திரை எடுப்பது நல்லதல்ல. நான்கு மாதங்களுக்கொரு முறை இதை எடுத்துக்கொள்ளலாம் என்கிறது சித்த மருத்துவம். ஆனால், ஆறு மாதங்களுக்கொரு முறை எடுப்பது சிறப்பு. நீங்கள் குறிப்பிடுவது போல மாதம் ஒருமுறை எடுப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

உங்கள் உறவினர் எந்த மாதிரியான மாத்திரையை எடுத்துக்கொள்கிறார் என்ற விவரம் இல்லை. மருத்துவர் அறிவுரையின்படி எடுத்தாலுமே, மாதம் ஒருமுறை பேதிக்கு மாத்திரை எடுப்பது கொஞ்சம் அதிகமானதுதான். இப்படிச் செய்வதன் மூலம், குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துபோக வாய்ப்புகள் மிக அதிகம். தவிர, அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதன் மூலம் உடலில் நீரிழிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கும் இப்படிச் செய்கிறார் என்றால், அது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். பெரியவர்களுக்கும் ஆறு மாதங்களுக்கொரு முறை பேதி மருந்து கொடுப்பதுதான் நல்லது.
அந்தக் காலத்தில் வாரம் ஒருமுறை இரவில் விளக்கெண்ணெய் குடிக்கும் வழக்கமும் இருந்தது. குறிப்பாக, அசைவ உணவுகள் சாப்பிடும் நாள்களில் இப்படிச் செய்வார்கள். நீர்மோர் நிறைய குடிக்கலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். மலச்சிக்கல் இன்றி, சரியாக மலம் வெளியேறும்படி பார்த்துக்கொண்டாலே, உடலின் கழிவுகள் நீங்கிவிடும். வாரம் ஒருமுறை சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், குடலில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும். இப்போது வரும் சுண்டைக்காயில், அந்தக் காலத்துக் காய்களைப் போல அவ்வளவு கசப்பு இருப்பதில்லை. ஆனாலும், குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அத்துடன் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். இவற்றையெல்லாம் பின்பற்றினாலே குடல் சுத்தமாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


