ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரிக்கையும், காவல்துறை செயல்பாடும்!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்:
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை 5-ம் தேதி மாலை 7.30 மணியளவில் பெரம்பூரில் தனது வீட்டுக்கு அருகே நிற்கும்போது மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை சிகிச்சைக்காக கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள் கொலையாளிகளைக் கைதுசெய்யச் சொல்லி மருத்துவமனையின் முன்பாக போராட்டம் நடத்தினர். இந்த கொலைக் குற்றம் தொடர்பாக எட்டு பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில். காவல்துறை சார்பில் அவர்களைக் கைது செய்தோம் என்று தெரிவித்தனர். அதேபோல, இந்த கொலைக் குற்றம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மேலும், இந்த கொலைக் குற்றம் தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்திருக்கிறது சென்னை காவல்துறை.
பழிக்குப் பழி!
இந்த கொலை தொடர்பாக தற்போது வரை கைது செய்யப்பட்ட 11 பேரில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலுவும் ஒருவர். இந்த கொலைக்கான காரணம் குறித்து நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள. "கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷை கொலை செய்ததற்குப் பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை நிகழ்ந்திருக்கிறது. ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஆம்ஸ்ட்ராங் எங்கே செல்கிறார் என்ன செய்கிறார் என்று நோட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பாக ஐந்து முறை முயற்சி செய்தும் கொலை திட்டத்தை போதிய ஆள்கள் இல்லாததினால் நிறைவேற்ற முடியவில்லை. கடைசியாக வேறு ஒரு பஞ்சாயத்து என்று சொல்லி ஆள்களை அழைத்துவந்து ஆறாவது முயற்சியில் கொலை செய்திருப்பதும்" தெரியவந்திருக்கிறது.
கொலை நடந்த சமயத்தில் உடனிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி கொலை நடந்தது தொடர்பாகப் பேசும்போது, "சம்பவம் நடந்த அன்று ஆம்ஸ்ட்ராங் அருகில் பாலாஜி என்பவர் பேசிக்கொண்டிருந்தார். அந்த இடத்துக்கு உணவு டெலிவெரி செய்வதுபோல வந்த நபர்கள் பாலாஜிக்கு டெலிவரி வந்திருக்கிறது என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் பாலாஜியை அருகில் கட்டுமானம் நடந்த இடத்திலிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினார்கள். சத்தம் கேட்டு அங்கு நான் வரும்போது என்னையும் அவர்கள் வெட்டினார்கள். வெட்டியதுடன் ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்துக்குச் செல்லும்போதே அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்ததை விவரித்தார்.
மாற்றப்பட்ட ஆணையர்:
கொலை சம்பவம் நடைபெற்ற ஒருசில மணிநேரத்திலேயே கொலை தொடர்பாகக் குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. ஆனால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதேபோல, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லியிருந்தார். அதே நேரத்தில் சரணடைந்தவர்களைத் தாண்டி இந்த கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்று சொல்கிறது சென்னை காவல்துறை. அதேபோல, இந்த சம்பவம் தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "உளவுத்துறையிலிருந்து எந்த தகவலும் வரவில்லை" என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் சென்னை காவல் ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இனி இந்த வழக்கு குறித்த விசாரணை விரிவடையும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எப்படிச் செல்கிறது விசாரணை!
இந்த வழக்கு விசாரணை எந்த பாதையில் பயணிக்கிறது என்பது தொடர்பாகச் சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "கொலை நடந்த தகவல் தெரிந்ததுமே அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி கொலைக் குற்றத்தில் ஈடுபட்டது யார் யார் என்ற விவரங்களை விரைவாக எடுத்துவிட்டோம். கொலைக் குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட எட்டு பேரைச் சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்திலேயே கைது செய்துவிட்டோம். அடுத்ததாகக் கொலைக்கு உடந்தையாக மணிவண்ணன் அழைத்துவந்த மூன்று நபர்களும் கைதாகியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளோம். முதற்கட்ட விசாரணையில் இரண்டு தரப்புக்கு நடுவிலிருந்த முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கிறது. இதில் வேறெந்த அரசியல் காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த கொலை நடப்பதற்கு முன்பாக ஐந்து முறை கொலை செய்ய முயற்சியும் நடந்திருக்கிறது. ஆறாவது முறையில் பலரையும் கூட்டுச் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 11 பேரைத் தாண்டி தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி படையினர் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறோம். கொலை நடந்த சமயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் டவர் லோகேஷன். அவர்கள் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார்கள். அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. விசாரணை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. கண்டிப்பாக இந்த கொலையில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களும் விரைவிலேயே கைது செய்யப்படுவார்கள்" என்றார்கள் விரிவாக.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


