Inspirational Story: ஒரு வருடத்துக்கு ராஜா, பதவிக்காலம் முடிந்ததும் என்ன ஆவார்? -கதை சொல்லும் பாடம்!

`நீங்கள் பிஸியாக ஏதேதோ திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறதோ, அதன் பெயர்தான் வாழ்க்கை.’ - இசைக்கலைஞரும், `பீட்டில்ஸ்’ இசைக்குழுவை உருவாக்கியவருமான ஜான் லென்னோன் (John Lennon).

`அந்தந்த கணத்தை வாழ்ந்துவிட வேண்டும்’ என்பார்கள் சிலர். மறுப்பதற்கில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவித்துத் தீரத்தான் வேண்டும். அதேநேரத்தில், எதிர்காலம் என்ற ஒன்றை யோசிக்காமல் இருப்பதும் நல்லதல்ல. இன்றே வாழ்க்கை முடிந்து தீர்ந்துவிடும் என்பதுபோல, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடித்தீர்ப்பவர்களைப் பார்த்திருப்போம். அது வாழ்க்கை அல்ல. நாளை என்று ஒன்று உண்டு. அதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையில்தான்... பறவைகள் கூடடைகின்றன; வயலில் நடவு செய்கிறார்கள்; அதிகாலைக்கு அலாரம் வைத்து அடுத்த நாளுக்கான பணிகளுக்குத் திட்டமிடுகிறோம். திட்டமிடல் இல்லாமல், இன்றைக்கு எதுவும் சாத்தியமில்லை. நம்பிக்கையோடு, எதிர்காலத்தைத் திட்டமிட்டு எதிர்கொள்பவர்கள்தான் சாதிக்கிறார்கள்.

Motivation Story: ஒரு வருடத்துக்கு ராஜா

அது ஒரு பெரிய நகரம். ஊரே அன்றைக்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசல்களில் பெரிய பெரிய வண்ணக் கோலங்கள். தெருவெங்கும் தோரணங்கள். ஆங்காங்கே ஆடல், பாடல்கள். அன்றைக்கு, வெளியூரிலிருந்து தன் சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தான் ஒருவன். அதுவரை அவன் அந்த ஊருக்கு வந்ததில்லை. அதனால் கோட்டைக் கதவருகே அவனை அழைத்துப்போகக் காத்திருந்தார் அவனுடைய சித்தப்பா.

ஊருக்குள் நுழைந்ததும், ``இன்னிக்கி உங்க ஊர்ல என்ன விசேஷம் சித்தப்பா... திருவிழாவா?’’ என்று கேட்டான் அவன்.

``திருவிழால்லாம் இல்லை. வா, சொல்றேன்.’’

இருவரும் வீட்டுக் கதைகளைப் பேசியபடி நடந்தார்கள். திடீரென்று சாலையின் இருபுறமும் மக்கள் அணிதிரளத் தொடங்கினார்கள். யாரோ, ``ராஜா வந்துக்கிட்டிருக்கார்’’ என்றார்கள். தூரத்தில் ஒரு யானைமீது ராஜா ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார்.

``என்ன சித்தப்பா... உங்க ஊர்க்காரங்களுக்கு ராஜாவை அவ்வளவு பிடிக்குமா... இப்பிடித் திரண்டு நிக்கிறாங்களே..?’’

``அதெல்லாம் இல்லை. எங்க ராஜாவுக்கு இன்னியோட பதவிக்காலம் முடியுது.’’

Motivation Story: ஒரு வருடத்துக்கு ராஜா

``பதவிக்காலமா... ராஜாவுக்கெல்லாம் பதவிக்காலம்னு ஒண்ணு இருக்கா என்ன... சாகுறவரைக்கும் அவரே இருக்கலாமே?’’

``அதுதான் எங்க ஊர்ல இல்லை. ஒரு ராஜா ஒரு வருஷத்துக்குத்தான் பதவியில இருக்கலாம். அதுக்கு ஒத்துக்கிட்டாத்தான் அவர் ராஜாவாகவே முடியும்.’’

``ஒரு வருஷம் கழிச்சு...’’

``அந்த ராஜாவைப் பக்கத்துல இருக்குற தீவுல கொண்டுபோய் விட்டுடுவோம்.’’

``தனியாவா?’’

``ஆமா.’’

சற்று தூரத்தில் யானைமீது பதவிக்காலம் முடிந்த ராஜா வந்துகொண்டிருந்தார். அவர் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது.

``நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லையென்றால், உங்கள் பாதையும் எங்கேயோ போய்த்தான் முடியும்.’’ - முன்னாள் அமெரிக்க பேஸ்பால் வீரர் யோகி பெர்ரா (Yogi Berra).

சர்வ அலங்காரத்துடன் யானையில் ஊரை வலம்வந்த அரசரை மக்கள் வாழ்த்து சொல்லி வழியனுப்பினார்கள். அவர்மேல் மலர்கள் தூவினார்கள். ராஜாவின் முகம்தான் கலங்கிப்போய் இருண்டிருந்தது. அவரைக் காவலர்கள் சூழ ஒரு பெரிய படகில் ஏற்றினார்கள். சற்று தூரத்திலிருந்த ஒரு சிறு தீவுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அவரைத் தீவில் இறக்கி விட்டுவிட்டு, உடனே படகைத் திருப்பினார்கள். ராஜா ஏக்கத்தோடு கடலில் விரையும் படகைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

திரும்பிக்கொண்டிருக்கும்போது படகிலிருந்த மந்திரி, வழியில் ஒரு சிறு கப்பலைப் பார்த்தார். அது முற்றிலுமாக மூழ்கிப்போயிருந்தது. `வரும்போது இதை நாம் கவனிக்கவில்லையே...’ என்று யோசித்தார். மூழ்கிய கப்பலிலிருந்து உடைந்து, மிதந்துகொண்டிருந்த ஒரு பெரிய கட்டையின்மேல் ஓர் இளைஞன் குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்தான். அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினார்கள். மந்திரி அவனைப் பற்றி விசாரித்தார். ஓர் அரசனாகக்கூடிய அத்தனை களையும் லட்சணமும் அவனிடமிருந்தன. மந்திரி, தங்கள் நகரத்தைப் பற்றி, அரசர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியெல்லாம் விவரமாகச் சொன்னார். பிறகு, ``எங்க நாட்டுக்கு ராஜாவாகிறாயா?’’ என்று கேட்டார். அவன் சற்று நேரம் யோசித்தான். அவனுக்கும் நெருங்கிய சொந்தம் என்று யாரும் இல்லை. ஒப்புக்கொண்டான்.

Motivation Story: ஒரு வருடத்துக்கு ராஜா

பதவியேற்கும்போதே, `நான் ஒரு வருஷத்துக்குத்தான் ராஜா’ என்ற உறுதிமொழியை வாங்கிக்கொண்டுதான் அவனுக்கு மகுடம் சூட்டினார் மந்திரி. பதவியேற்று மூன்று நாள்கள் ஆகியிருந்தன. மந்திரியை அழைத்தான் அந்த இளம் ராஜா. ``ஒவ்வொரு வருஷமும் ராஜாக்களைக் கொண்டு போய் விடுறீங்களே... அந்தத் தீவை நான் பார்க்கணும். கூட்டிட்டுப் போவீங்களா?’’ என்று கேட்டான். கேட்பது ராஜாவாயிற்றே... ஒப்புக்கொண்டார் மந்திரி.

படைகளோடு அந்தத் தீவுக்குப் போனான் ராஜா. சில காவலர்களை மட்டும் அழைத்துக்கொண்டு தீவுக்குள் நுழைந்தான். கொஞ்சம் தூரம்கூட நடக்க முடியவில்லை. துர்நாற்றம் காற்றில் கலந்து வந்தது. சற்று தூரத்தில் ஏதோ ஒரு விலங்கு கடித்துப்போட்டிருந்த ஒரு பிணம் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில் மற்றொன்று... இன்னும் தூரத்தில் ஓர் எலும்புக்கூடு. அங்கிருக்கும் பிணங்களெல்லாம் தனக்கு முன்பு அந்த நகரத்துக்கு ராஜாவாக இருந்தவர்கள் என்பது அவனுக்குப் புரிந்துபோனது. படகுக்குத் திரும்பினான் இளம் ராஜா.

`எப்போதும் ஒரு திட்டத்தோடு இருங்கள். எதிர்பாராமல் இங்கே எதுவும் நிகழ்வதில்லை.’ -  அமெரிக்க கால்பந்து பயிற்சியாளர் சக் நாக்ஸ் (Chuck Knox).

அடுத்த நாள் நல்ல பலசாலிகளான 100 வீரர்களைத் தேர்ந்தெடுத்தான் ராஜா. அவர்களை அந்தத் தீவுக்கு அனுப்பி, அதைச் சுத்தம் செய்யச் சொன்னான். இறந்துகிடந்த விலங்குகள், மனிதர்களின் உடல்களை அப்புறப்படுத்தச் சொன்னான். பாதைக்குத் தடையாக இருக்கும் மரக்கிளைகள், செடி கொடிகளை வெட்டிப்போடச் சொன்னான். தீவுக்குள் ஒரு பாதை அமைக்கச் சொன்னான். மாதத்துக்கு ஒரு நாள் தீவில் வேலை எப்படி நடக்கிறது என்று பார்ப்பதற்காகச் சென்றான். முதல் மாதத்தில், தீவு சுத்தமாகி ஒரு பாதை உருவாகியிருந்தது. இரண்டாவது மாதம், தீவில் ஆங்காங்கே சிறு சிறு உணவுப் பயிர்களையும், காய்கறிச் செடிகளையும், பழம் கொடுக்கும் மர வகைகளையும் வளர்க்கச் சொன்னான். ஒவ்வொரு முறை தீவுக்குப் போகும்போதும், தான் செல்லும் படகில் கோழிகள், வாத்துகள், சிறு பறவைகள், ஆடுகள், மாடுகள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல ராஜா தவறவில்லை. அதேநேரத்தில், ராஜாவாக இருக்கும்போது அவனுக்குக் கிடைத்த பரிசுகளையும், ஆபரணங்களையும், பொற்காசுகளையும் தீவில் பத்திரப்படுத்தி வைத்தான் அந்த இளம் ராஜா.

Motivation Story: ஒரு வருடத்துக்கு ராஜா

மூன்றாவது மாதம், தன் பணியாளர்களை அழைத்து சிறு குடில்களையும், சில வீடுகளையும் அமைக்கச் சொன்னான். சில மாதங்களிலேயே அந்தத் தீவு ஒரு நந்தவனமாக, சொர்க்கபூமியாகிவிட்டது. ஒன்பது மாதங்கள் முடிந்திருந்தபோது, அந்தத் தீவு மனிதர்கள் வசிக்கக்கூடிய நல் நிலமாக மாறியிருந்தது.  

இளவயது ராஜா, மந்திரியை அழைத்தான். ``ஒரு வருஷம்தானே எல்லாரும் இங்கே ராஜாவா இருக்க முடியும்... எனக்கு ஒன்பது மாசமே போதும். என்னைக் கொண்டுபோய் தீவுல விட்டுடுங்களேன்...’’ என்றான்.

``இங்கே யாரா இருந்தாலும் ஒரே சட்டம்தான். ஒரு வருஷம் கழிச்சுத்தான் நீங்க அந்தத் தீவுக்குப் போக முடியும்.’’

ஒரு வருடம் முடிந்தது. யானை மீதேறி குதூகலமும் சிரிப்புமாகத் தீவுக்குப் புறப்பட்டான் அந்த ராஜா. அதுவரை அழுது வடிந்த முகத்தோடு மட்டுமே கிளம்பிப்போன ராஜாக்களைப் பார்த்திருந்த நகர மக்கள், அவனை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்! 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.