Virat Kohli: `ரோஹித்துக்கு ஒரு நியாயம், கோலிக்கு ஒரு நியாயமா? - ஏமாற்றப்பட்டாரா விராட் கோலி?

"உலகக்கோப்பையை வென்றுவிட்டோம். அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சாம்பியன்ஸ் டிராபியையும் ரோஹித் தலைமையில் வெல்வோம் என நம்பிக்கை இருக்கிறது" எனத் தீர்க்கமாகப் பேசியிருக்கிறார் பிசிசிஐ யின் செயலாளர் ஜெய் ஷா.

Rohit & Virat
இதன் மூலம் ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோஹித்தான் கேப்டனாக தொடரப்போகிறார் என்பதை ஜெய் ஷா உறுதிப்படுத்தியிருக்கிறார். இதில் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், இதன் மூலம் கோலிக்கு ஒரு நியாயம் ரோஹித்துக்கு ஒரு நியாயமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
Virat & Rohit

2017 லிலிருந்து விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மூன்று ஃபார்மேட்டுக்கும் முழுமையாகச் செயல்பட்டு வந்தார். 2021 கடைசியில் நிலைமை மாறியது. கோலியிடமிருந்த கேப்டன் பதவி ரோஹித்திடம் வந்து சேர்ந்தது. முழுமையாக மூன்று ஃபார்மேட்களையும் ரோஹித்தே தலைமையேற்று வழிநடத்தினார். சமீபத்தில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போதே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக ரோஹித் சர்மா அறிவித்துவிட்டார். ஆக, டி20 போட்டிகளில் இனி அவர் ஆடப்போவதில்லை.

ரோஹித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்துவார் எனத் தெரிகிறது. இப்படியொரு சமயத்தில்தான் ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித்தே கேப்டனாகத் தொடர்வார் என்பதை ஜெய் ஷா உறுதி செய்திருக்கிறார். இங்கேதான் கோலிக்கு அநீதி இழைக்கப்பட்டதோ எனும் கேள்வி எழுகிறது.

என்னவெனில், 2021 டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடந்திருந்தது. அந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாகவே விராட் கோலி இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து உலகக்கோப்பை முடிந்தவுடன் விலகுகிறேன் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

"பணிச்சுமையை குறைத்துக் கொண்டு ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக கவனம் செலுத்தப் போகிறேன்" என விராட் கோலி காரணம் கூறியிருந்தார்.
Ganguly - Kohli

அந்த உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி அடைந்தது. பிசிசிஐ ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலியை தூக்கி எறிந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கேப்டனாக இருக்க வேண்டிய நிலை. அவரே முன்வந்து டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். ரோஹித் மூன்று ஃபார்மேட்களுக்கும் கேப்டன் ஆனார்.

அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "நாங்கள் கோலியை டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள் என எவ்வளவோ சொன்னோம். ஆனால் அவர் விலகிவிட்டார். ஓடிஐக்கும் டி20 க்கும் இரண்டு கேப்டன்களை வைத்துக் கொண்டு செயல்பட முடியாது. அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்" என கோலியின் ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியை பறித்தது குறித்து விளக்கமளித்தார்.

Jay Shah & Rohit

இங்கேதான் கேள்வி எழுகிறது. டி20க்கு ரோஹித்தும் ஓடிஐக்கு கோலியும் கேப்டனாக இருப்பது சரியாக இருக்காதெனில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக்கும் ஓடிஐ போட்டிகளுக்கு ரோஹித்தும் கேப்டனாக இருக்கப்போவது மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்? இது உலகக்கோப்பையை வென்றதற்காக ரோஹித்துக்கு வழங்கப்படும் சலுகையா?

கோலியிடம் உலகக்கோப்பை மட்டும்தான் இல்லாமல் இருந்ததே தவிர மற்றபடி அவரின் கேப்டன்சியும் இந்தியாவுக்குப் பலமாகத்தான் இருந்தது. எப்படித் தொடர் முழுவதும் நன்றாக ஆடிவிட்டு 2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மட்டும் இந்தியா சொதப்பியதோ அப்படித்தான் விராட் கோலியின் தலைமையின் கீழும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

India
கேப்டனாக இந்திய அணிக்கு ஒரு ஆக்ரோஷ உணர்வை கோலிதான் ஊட்டியிருந்தார். குறிப்பாக பௌலிங்கில் வலிமையானதொரு டெஸ்ட் அணியை அவரே உருவாக்கியிருந்தாரப். அப்படிப்பட்டவரை சப்பைக்கட்டு கட்டி முறையான மரியாதை கூட கொடுக்காமல் கேப்டன் பதவியிலிருந்து விலக்கியதுதான் வேதனையான விஷயம்.

பிசிசிஐ செய்வது சரியா என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.