`இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்றுதான் கூறினார் - ராகுல் பேச்சுக்கு சங்கராச்சாரியார் ஆதரவு!
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசுகையில், சிவன் போன்ற இந்து கடவுள்களின் புகைப்படங்களை காட்டி இந்துக்கள் வன்முறையாளர்கள் என்பதுபோல் பேசினார். உடனே இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி பேசிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமித் ஷாவும் குற்றம்சாட்டினர். அதோடு ராகுல் காந்தியின் உரையின் குறிப்பிட்ட பகுதியை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் பிர்லா நீக்கினார்.
ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஜோதிர் மடத்தின் 46-வது சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தியின் உரையை முழுமையாக கேட்டோம். அதில் இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்பதை அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராகுல் காந்தியின் உரையின் குறிப்பிட்ட பகுதியை எடுத்து பரப்பி வருகின்றனர். ராகுல் காந்தி அறிக்கையின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் முன்வைப்பது தவறானது மற்றும் நெறிமுறையற்றது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் தனது சகோதரர் ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டார். பா.ஜ.க-வையும், பா.ஜ.க தலைவர்களையும் குறிவைத்துத்தான் ராகுல் காந்தி பேசினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


