Bear Grylls: உயிர் காக்க உதவிய டிவி நிகழ்ச்சி - பியர் கிரில்ஸ் வீடியோ மூலம் உயிர் பிழைத்த இளைஞர்கள்!

பியர் கிரில்ஸின் நிகழ்ச்சி மூலம் இரண்டு இளைஞர்கள் உயிர் தப்பியிருக்கின்றனர்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மிகப் பிரபலமான நிகழ்ச்சி மேன் vs வைல்ட் (Man vs Wild). இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். இவர் காடுகள், மலைகள், பனிப் பிரதேசங்கள் போன்ற பகுதிகளில் பயணித்து கடுமையான சூழல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்நிகழ்ச்சி. பிரிட்டனில் வெற்றிகரமாக ஓடிய இந்நிகழ்ச்சி டப்பிங் செய்யப்பட்டு இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் பகிர்ந்த சில விஷயங்கள் இரண்டு இளைஞர்களின் உயிரையே காப்பாற்றியுள்ளது.

பியர் கிரில்ஸ் - மோடி

பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளினி கேத்தரின் ஃபார்ஸ்டர் என்பவரின் மகன்களான மேத்யூ (22), ஆண்ட்ரு (18) என்ற இளைஞர்கள் இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலைக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் இருவரும் வழியை மறந்து தவித்திருக்கின்றனர்.

பிறகு அந்த இளைஞர்கள் உயிர் தப்பிக்கவும், வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை உயிர் வாழவும் என்ன செய்யலாம் என யோசித்திருக்கின்றனர். உடனே இதுபோன்ற சாகசங்களின் போது பியர் கிரில்ஸ் என்ன செய்வார் என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

அதன்படி அந்த இளைஞர்கள் இருவரும் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் (Man vs Wild) பார்த்ததைப் போல மலை நீரைச் சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரம் உயிர் வாழ்ந்துள்ளனர். பின்பு மீட்புக் குழுவினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேத்யூ , ஆண்ட்ரு

பியர் கிரில்ஸின் இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஜினிகாந்த், ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.