Fact Check: `1300 கிலோ தங்கம், NEET, கேதான் தேசாய் - தீயாய் பரவும் செய்தி உண்மையா?

சமூக வலைதளங்களில் வரம்பற்று பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை பெரும்பாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. கண நேரத்தில் அந்த தகவலை தன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் ஃபார்வர்டு செய்துவிடுபவர்கள் பலர். சில நேரங்களில், தொடர் சங்கிலியை போல், நாம் அனுப்பிய ஃபார்வேர்டு நமக்கே வந்து சேர்வதும் நடப்பது உண்டு. அப்படி, கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போதுவரை மீண்டும் மீண்டும் வைரலாகி வரும் ஒரு தகவலின் உண்மைத் தன்மையை, விகடன் Fact Check செய்தது.

அந்த ஃபார்வர்டு செய்தி... கீழே.

// கேதான் தேசாய் - இந்த பெயரை மறந்திருக்க மாட்டீர்கள்! ஆம், அவர்தான் வாஜ்பாய் காலத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு, அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியை அலங்கரித்தவர்.

கேதான் தேசாய்

சி.பி.ஐ, வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் சோதனை நடத்திய பாேது பறிமுதல் செய்யப்பட்டது எவ்வளவு தெரியுமா?

மயக்கம் போட்டு விடாதீர்கள். 1300 கிலோ தங்கம். அது மட்டுமல்ல, 850 கோடி ரூபாய் ரொக்கம்!!!

திருப்பதி ஏழுமலையானுக்கும், இவருக்கும் இந்த விசயத்தில் போட்டி கூட!!!

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீரா?

கறைபடாத கைகள், என வெளியே வந்துவிட்டார்.

இந்த(அ)ப்பாவி தான், தற்பாேது மோடியின், அரசாங்கத்திலும்

’நீட்’ தொடர்பான முக்கிய முடிவெடுக்கும் இடத்தி்ல் இருப்பவர்!!!

’குஜராத் மெடிக்கல்’ கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார்.

தற்போது உலக மருத்துவ சங்க தலைவரும் கூட!!!

’NEET’ க்கும் நம்ம நாட்டுக்கும் உள்ள தொடர்பு இப்போ புரியுமே!!!?

எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும்?????

இப்ப எல்லோரும் ஒரு தடவை சத்தமா சொல்லுங்கோ.....

மோடிக்கு ஊழல் பிடிக்காது.//

- இது தான் அந்த செய்தி.

பரவிய வதந்திகளும், உண்மை சரிபார்ப்பும்!

குஜராத் மாநிலத்தின் மரோலி கிராமத்தை சேர்ந்த கேதன் தேசாய், இளங்கலை மருத்துவத்தை அடுத்து, 1983-ம் ஆண்டு முதுநிலை மருத்துவத்தில் சிறுநீரக அறுவை சிகிச்சைப் பிரிவில் பட்டம் பெற்றார். பின், அஹமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். பதவி உயர்வு பெற்று, துறைத் தலைவராக அந்த கல்லூரியிலேயே 2010-ம் ஆண்டு வரை பணியாற்றினர்.

இதனிடையே, 1993-ம் ஆண்டு முதல் குஜராத் மருத்துவ கவுன்சிலின் தலைவராக பதவி வகித்த தேசாய், கடந்த 1990-ம் ஆண்டு முதல் இந்திய மருத்துவ கவுன்சிலின் (MCI) வாழ்நாள் உறுப்பினரானார். 1996-ம் ஆண்டு முதல் 2001 வரை அதன் தலைவராகவும் பதவி வகித்தார். அதன் பின், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தலைவராக கடந்த 2001 முதல் 2002 பொறுப்பு வகித்துள்ளார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் அகடமிக் கமிட்டி தலைவராகவும் 1999-ம் ஆண்டு பதவி வகித்துள்ளார். இவ்வாறு, மருத்துவ துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த கேதன் தேசாய், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் (1999 முதல் 2004 வரை), மருத்துவக் கல்லூரிகளுக்கு, அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில் தலைவர் பதவி வகித்தார் என்பது உண்மையே.

இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தலைவராகப் பணியாற்றிய போது, பஞ்சாபில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேசாய் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், 22 ஏப்ரல் 2010 அன்று மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அவரை கைது செய்தது. அப்போது, அவரது வீட்டில் நடத்திய ஆய்வில், 1.5 கிலோ தங்கமும், 80 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டது.

ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஃபார்வேர்டு தகவலில் உள்ளது போல், 1300 கிலோ தங்கமும், 850 கோடி ரொக்கமும் கேதன் தேசாய் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ற தகவல் தவறானது. நீட் சர்ச்சைகள் செய்தியாகும் சூழல்களில் எல்லாம், கேதன் தேசாய் பற்றிய இந்த ஃபார்வேர்டு, 2022-ம் ஆண்டு முதல் பரபரவெனப் பகிரப்பட்டு வருகிறது.

மோடியின் ஆட்சிக் காலத்தில் நீட் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பவராக தேசாய் திகழ்கிறார் என்பது தவறான தகவல். காரணம், 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் தான் தேசாய், இந்தியா மருத்துவத் துறையின் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அதன் பின், குஜராத் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினராக மட்டுமே இருந்து வருகிறார்.

NEET

ஆனால், 2009-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் எனவும், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தகுதித் தேர்வு மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்பி, நீட் தேர்வு அமலாக காரணமாக இருந்தவர்களில் இவர் முதன்மையானவர்.

நீட் தேர்வு அமலான காலகட்டத்தில், உலக மருத்துவ சங்கத்தின் தலைவராக 2016 - 2017-ம் ஆண்டுகளில் பதவி வகித்துள்ளார். இதனை, இந்திய மருத்துவ சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவர் குறித்தான தகவலின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அந்தக் காலகட்டத்தில் செய்தியாளரகளிடம் பேசிய தேசாய், ’நீட் தேர்வு அமலுக்குப் பின்னர், நல்ல மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில், அனைத்து எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கும் எக்ஸிட் தேர்வை கட்டாயமாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

மொத்தத்தில், அந்த ஃபார்வேர்டில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொய். என்றாலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தேசாய், மருத்துவ துறையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார் என்பது உண்மை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.