`அருமையான திட்டம்தான்... ஆனா, அதிகாரிகள்தான் மானிய பசுந்தாள் உர விதைகள் வழங்குவதில் குளறுபடி...

2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி அந்தந்த மாவட்ட வேளாண் வட்டார உதவி இயக்குநர்கள் இத்திட்டத்தில் பலனடைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தக்கைபூண்டு

குறிப்பாக ஆடிப்பட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் இந்த விதைகளை விதைத்து 45 நாள்கள் வளர்த்து பூ வந்தவுடன் மடக்கி உழவு செய்து மட்க விட வேண்டும். இப்படி செய்தால் அந்த மண் சத்து மிக்கதாகவும் அதிக நுண்ணுயிர்கள் கொண்ட வளமிக்க நிலமாகவும் மாறும். தொடர்ந்து பசுந்தாள் உர விதைகளை பயிரிடுவதன் மூலம் மண்ணில் கரிம சத்து அதிகரித்து மகசூலும் அதிகரிக்கும். இதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் 50 சதவிகித மானிய விலையில் 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவை முறையாக வழங்கப்படுவதில்லை என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்டம், தூசி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எஸ்.நரசிம்மன்.

எஸ்.நரசிம்மன்

"கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றேன். ஆடிப்பட்டத்தில் நாத்து விட்டு நெல் நெடவு செய்வேன். நாத்து விடும்போதே பசுந்தாள் உரப்பயிர்களையும் விதைத்து மடக்கி உழுது நெல் நடவுக்கு நிலத்தை தயார் செஞ்சுடுவோம். சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர விதைகள் 1 கிலோ 100 அல்லது 110 ரூபாய்க்கு விக்குது. இந்த முற மானியத்துல 50 ரூபாய்க்கு கொடுக்கிறதா சொன்னாங்க. நான் போய் வெண்பாக்கம் வேளாண் வட்டார அலுவலர்கிட்ட கேட்டேன். அவர் இந்த வேளாண் வட்டாரத்துக்கு வரலைனு சொன்னார். திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கிட்ட இதுசம்பந்தமா கேக்கலாம்னு தொடர்பு கொண்டேன் போனை எடுக்கவே இல்லை.

எங்க கிராமத்துல இருந்து காஞ்சிபுரம் 10 கிலோ மீட்டர்தான். காஞ்சிபுரத்துல போய் கேட்டா, நீங்க திருவண்ணாமலை மாவட்டம். அதனால இங்க வாங்க முடியாதுனு சொல்லிட்டாங்க. முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்த தொடங்கி வெச்சு 1 மாசம் ஆகுது. இயற்கை விவசாயம் பரவலாகும்னு நல்ல நோக்கத்துல தொடங்கி வெச்ச இத்திட்டம், அதிகாரிகளோட குளறுபடிகளால விவசாயிகளுக்கு போய் சேராம இருக்கு. குறிப்பா ரசாயன விவசாயம் செய்ற விவசாயிகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதா இருக்கும். இன்னும் எங்களுக்கு விதை வழங்கும் கம்பெனில இருந்து விதைகள் வரலன்னு அதிகாரிகள் சொல்றாங்க. வெளியில எங்கோ விதைகள விக்குறாங்களோனு அதிகாரிகள் மேல சந்தேகமா இருக்கு. பயிர் வெச்ச பிறகு விதைகளை விவசாயிகளுக்கு விதைகள கொடுக்கிறதுனால எந்தப் பலனும் இல்ல. இதுசம்பந்தமா முதல்வர் தனி செல்லுக்கும் புகார் அனுப்பியிருக்கேன். அரசு நடவடிக்கை எடுக்கும்னு எதிர்பார்க்கிறேன்" என்றார்.

தக்கைபூண்டு

காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி தனபாலிடம் பேசியபோது, "எங்க உத்தரமேரூர் வேளாண் வட்டாரத்துல 10 டன் பசுந்தாள் உர விதைகள இருக்கிறதா மெசேஜ் போட்டிருக்காங்க.

தனபால்

இயற்கை விவசாயத்துக்காகவும், வளமிழந்த மண்ணை வளமாக்குறதுக்காகவும் இந்த விதைகள் 50 சதவிகித மானிய விலையில் கொடுக்கப்படுது. வேளாண் அதிகாரிகள் அவங்களோட தொடர்புல உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வாட்ஸ்அப் குரூப்புல தகவல் போட்டுடுறாங்க. இது எல்லா விவசாயிகளுக்கும் சேர வேண்டிய திட்டம்.

பசுந்தாள் உர விதைகள் எல்லா விவசாயிகளுக்கும் சேர வேண்டியதை உறுதிப்படுத்தணும். அதேபோல வேளாண் அலுவலர்கள் நேரடியாக விவசாயிகள சந்திக்கணும். ஆனா, பெரும்பான்மையான வேளாண் அலுவலர்கள் ரிமோட்லதான் செயல்படுறாங்க. அதேபோல அரசு சார்புல பாரம்பர்ய நெல் விதைகள் கொடுக்கப்படுது. அதுவும் இதே மாதிரிதான். தெரிந்த விவசாயிகள் மட்டும்தான் பயனடையறாங்க. எல்லா விவசாயிகளும் பயனடைஞ்சாதான் திட்டத்துக்கான வெற்றி கிடைக்கும்" என்றார்.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, "நான் விக்கிரவாண்டி தேர்தல் பணிகள்ல இருக்கிறேன். விரிவா ஒரு மேசேஜ் போடுங்க. பாத்துட்டு நடவடிக்கை எடுக்கிறேன்" என்றவர், என்ன நினைத்தாரோ, "சரி சொல்லுங்க... எந்த வட்டாரம்" என்றவரிடம் வெண்பாக்கம் வட்டாரம் என்று தெரிவித்தவுடன் "நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.