உங்கள் நிதி நிலை மேம்பட கட்டாயம் கடைபிடிக்க பிடிக்க வேண்டிய விஷயங்கள்..!
ஒருவரின் நிதி (Finance) நிலை மேம்பாட்டு இருந்தால்தான் அவர் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். இதற்கு கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
1 வரவுக்குள் செலவு
ஒருவர் எப்போதும் அவரது வருமானத்துக்குள்தான் செலவு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப அவர் செலவுகளை செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஓர் உயரமான நிலைக்கு வரும் வரைக்கும் செலவுகளை குறைவாக வைத்துக் கொள்வது நல்லது.
2 பட்ஜெட் போட்டு வாழவும்..!
சம்பளத்தை அவசிய செலவு, ஆசைக்கான செலவு மற்றும் சேமிப்பு என முறை 50%, 20% மற்றும் 30% என பிரித்து பட்ஜெட் (Budget) போட்டுக் கொள்ள வேண்டும். சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால வாழ்க்கை வளமானதாக அமையும். உதாரணமாக, மாதச் சம்பளம் ரூ.30,000 வாங்கும் போது அதில் 30% ரூ.9,000 சேமித்து வந்த நிலையில், சம்பளம் ரூ.40,000 ஆக உயரும் போது அதில் 40% ரூ.16,000 சேமிக்க வேண்டும். இப்படி எவ்வளவு அதிக சதவிகிதம் சேமிக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாக சேமித்தால், பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணச் செலவுகளை சுலபமாக சமாளிக்க முடியும்.
3 கிரெடிட் கார்டு கடன்கள்
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை வாங்காமல் இருப்பது நல்லது. காரணம், இதற்கான வட்டி, வட்டியில்லா காலமான சுமார் 50 நாள்களை கடந்துவிட்டால் ஆண்டு வட்டி 36-45% ஆகும்.
ஒருவருக்கு கிரெடிட் கார்டு கடன் இருந்தால் அதனை விரைந்து அடைத்துவிட வேண்டும். இல்லை என்றால் அது பெரும் கடன் சிக்கலில் கொண்டு வந்து விட்டு விடும்.

4 பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் முதலீடு..!
சிலர் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பணத்தை வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் போட்டு வைத்திருக்கிறார்கள். நாட்டில் விலைவாசி உயர்வு என்கிற பணவீக்க விகிதம் (Inflation) சுமார் 7 சதவிகிதமாக இருக்கும் நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் ஆண்டு வட்டி வருமானமும் 7 சதவிகிதம் என்றால் லாபம் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டிக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரிக் கட்ட வேண்டும். 30% வரி வரம்பில் வந்த 7% வருமானம் என்பது வரிக் கட்டியது போக 4.9% குறைந்துவிடும்.
அந்த வகையில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் மற்றும் குறைவான வருமான வரிக் கட்டும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள் (Equity Shares) மற்றும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund) திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகும்.
பங்குச் சந்தை முதலீடு அதிக ரிஸ்க்கானது. மேலும், அது பற்றி நல்ல விவரம் தெரிந்தவர்களுக்கு தான் அது ஏற்றதாகும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் சுமார் 30 முதல் 80 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதாலும் ஃபண்டை நிர்வகிக்க நிதி மேலாளர் ஒருவர் இருப்பதாலும் ரிஸ்க் குறைவாக இருக்கிறது. மேலும், அதிக வருமானமும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணத்தை பல்வேறு சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் பிரிவின் டாப் 5 ஃபண்ட்கள் கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 28-34%, 25-35% மற்றும் 17-21% வருமானம் கொடுத்துள்ளது. இந்த அளவுக்கு அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் 13-15% வருமானம் கிடைத்தாலே சிறப்பு தானே?
5 பணி ஓய்வுக் கால முதலீடு..!
நம்மில் பலரும் பணி ஓய்வுக் காலத்துக்கு என தனியே முதலீடு செய்வதில்லை. இதனால், 58, 60 வயதுக்கு பிறகும் வயதான காலத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. இல்லை என்றால் சாப்பாடு உள்ளிட்ட செலவுகளுக்கு பிள்ளைகளை சார்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையை தவிர்க்க இளம் வயதில் ரிட்டயர்மென்ட் செலவுக்கு முதலீடு செய்து வருவது அவசியமாகும். இளம் வயதில் முதலீட்டை ஆரம்பித்துவிட்டால், சிறிய தொகையை சேர்த்தாலே போதும். உதாரணத்துக்கு 25 வயது முதல் மாதம் ரூ.2,000 வீதம் 60 வயது வரைக்கும் 35 ஆண்டுகள் ஒருவர் முதலீடு செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். இவர் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம். இவர் மொத்தம் 8.4 லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்திருப்பார். இவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 13% வருமானம் கிடைத்தால் 60 வயதில் ரூ.1.7 கோடி சேர்ந்திருக்கும். இதுவே 40 வயதில் மாதம் ரூ.10,000 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம். மொத்தம் செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.24 லட்சமாக இருக்கும். 60 வயதில் கிடைக்கும் ரூ.1.1 கோடியாகதான் இருக்கும்.

6. ஆயுள், மருத்துவக் காப்பீடு..!
பலரும் வேலைக்குச் சேரும் போது எடுக்கும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் கவரேஜ் தொகையை அதிகரிக்காமல் இருக்கிறார்கள். குடும்பம் பெரிதாகும் போது, வருமானம் கூடும் போது ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டை அதிகரிப்பது அவசியமாகும்.
ஆயுள் காப்பீட்டை ஆண்டு சம்பளத்தை போல் சுமார் 15 மடங்கும் மருத்துவக் காப்பீட்டை மாதச் சம்பளத்தை போல் கிட்டத்தட்ட 10 மடங்கும் எடுத்துக்கொள்வது நல்லது.
ஒருவர் மேற்கண்ட 6 விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்கும் போது அவரின் நிதி வாழ்க்கை சிறந்ததாக இருக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

