வேலூர் IFS மோசடி: `என் குழந்தைகளைக் கைவிட்டு விடாதீர்கள்’ - பறிப்போன மேலும் ஓர் உயிர்!
வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டுச் செயல்பட்ட `ஐ.எஃப்.எஸ்‘ நிதி நிறுவனம் (International Finance Services) `பங்குச் சந்தையில் போடுகிறோம்; ஆண்டுக்கு 24% வட்டி வருமானம் தருகிறோம்‘ என்கிற குயுக்தியான திட்டம் மூலமாக பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடியை மோசடி செய்து, சரியாக 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை, இயக்குநர்களாக இருந்து நடத்திவந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேதநாராயணன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதால், அவர்கள் ‘தேடப்படும் குற்றவாளிகள்’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். நால்வரும் சரணடைய ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. `புயல்’ பாய்ச்சலாக தீவிரப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த மெகா மோசடி வழக்கில், மத்திய - மாநில அரசுகளின் அதிகார புலனாய்வு அமைப்புகள் மெத்தனம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப் பிரிவின் விசாரணைகள் தடதடத்துக்கொண்டிருக்கின்றன. இந்த 2 ஆண்டுகளில், ஐ.எஃப்.எஸ் மோசடி தொடர்பாக எந்தவிதமான அப்டேட்டுகளையும் விசாரணை அமைப்புகள் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான் ஏஜென்ட் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துக்கொடுத்த பலரும் விபரீத முடிவுகளுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தொடர் தற்கொலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் மோசடி வளைக்குள் சிக்கி பாதிக்கப்பட்ட முகிலன் என்பவரும் தனது உயிரை இன்று மாய்த்துக்கொண்டிருக்கிறார்.
வேலூர், சத்துவாச்சாரி வள்ளலார் டபுள் ரோடு பகுதியில் நடத்திவந்த தனது அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தொங்கியிருக்கிறார் முகிலன். ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஆண்டுக்கு 24% வட்டி வருமானம் தருவதாக சொன்னதை நம்பி, பலரிடம் ரூ.1 கோடிக்கு மேலான தொகையை கடனாக வாங்கி, ஜெகதீசன் என்ற ஏஜென்ட் மூலமாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் முகிலன். மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த சகோதரர்கள் தப்பி ஓடிவிட்டதால், கடன் கொடுத்த பலரும் மிரட்டி வந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே, விபரீத முடிவை எடுத்திருக்கிறார் முகிலன். தற்கொலைக்கு முன்பு முகிலன் எழுதிய கடிதத்தையும் சத்துவாச்சாரி போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர்.

கடிதத்தில், ``அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு... இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைக்கும்போது, நான் உயிரோடு இருக்க மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். என் மனைவி மிகவும் நல்லவள். என்னுடைய பிள்ளைகள் விவரமறியாத கன்றுக்குட்டிகள். இந்த 3 பேரையும் தனியாக விட்டுப்போகிறேன், நெஞ்சமெல்லாம் பதறுகிறது. மனைவி, குழந்தைகளைக் கைவிட்டு விடாதீர்கள். நான் யாரையும் ஏமாற்றவில்லை. நம்ப வைத்து துரோகம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். எப்படியாவது பணத்தை மீட்டு செட்டில் செய்துவிடலாம் என்று நேற்று வரை நம்பிக்கைக்கொண்டிருந்தேன். நான் இறந்த பிறகாவது, இந்த அரசாங்கம் பணத்தை மீட்டு அவர்களிடம் கொடுக்கட்டும். எனக்கு இந்த உலகத்தில் வாழ அசிங்கமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. எனக்குவந்த கொலை மிரட்டல்களை சொல்லக்கூட எனக்கு மனமில்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து, முகிலனின் உடலைக் கைப்பற்றிய சத்துவாச்சாரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

