Bangalore Airport: காதலன் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல்; இளம்பெண்ணின் செயலால் அலறிய அதிகாரிகள்!

விமான நிலையங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாக இருக்கிறது. சில நேரங்களில் அடுத்தவர்களை பழிவாங்க இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கம். பெங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து மும்பை செல்லும் மிர் ராசா மெஹ்தி என்பவரின் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார். அதோடு அந்த நபர் தனது காதலன் என்றும் குறிப்பிட்டார். உடனே விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மிர் ராசாவை பிடித்துச்சென்று அவரது பேக்கை சோதனை செய்தனர். ஆனால் பேக்கில் எதுவும் இல்லை. இதனால் போன் அழைப்பு வெறும் புரளி என்று தெரிய வந்தது.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்த பெண்ணின் பெயர் இந்திரா ராஜ்விர் என்றும், அவரும், மிர் ராசாவும் பெங்களூருவில் பணியாற்றுவதாகவும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் மும்பை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். விமான நிலையத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே மிர் ராசா கிளம்பி விமானத்தில் ஏறுவதற்காக சென்றார். இதனால் கோபம் அடைந்த மிர் ராசாவின் காதலி, மும்பை செல்வதை தடுக்க அவரது பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து இந்திராவை பிடித்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திரா புனேயை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.