கண்டித்ததால் ஆத்திரம்; 11-ம் வகுப்பு மாணவரால் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்... அஸ்ஸாமில் அதிர்ச்சி!
அஸ்ஸாம் மாநிலம், சிவசாகர் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில், 11-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதாகும் ஆசிரியர் பெஜவாடா, வேதியியல் பாடம் கற்பித்து வந்துள்ளார். அதோடு அப்பள்ளியில் நிர்வாக பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். வேதியியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற 11-ம் வகுப்பு மாணவர் ஒருவரை, பெஜவாடா கண்டித்துள்ளார். அதோடு பெற்றோரைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வருமாறும் கூறியுள்ளார்.
அன்று மாலை அம்மாணவர் சாதாரண உடையில் வகுப்புக்கு வந்துள்ளார். ஆசிரியர் அவரை வெளியேறும்படிக் கூறியுள்ளார். திடீரென்று, மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெஜவாடாவைக் குத்தியுள்ளார். பலமுறை குத்தியதில் ஆசிரியர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இச்சம்பவத்தைக் கண்ணால் பார்த்த சக மாணவர் ஒருவர் கூறுகையில், ``ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறக் கூறியதால் ஆத்திரமடைந்த அவர், கத்தியை எடுத்து ஆசிரியரின் தலையில் சரமாரியாகக் குத்தினார். அவர் கத்தியை எடுத்துச் சென்றது எங்களுக்குத் தெரியாது. எங்கள் ஆசிரியர் தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்” என்றார். அம்மாணவன் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

