BMW Dash: குடிபோதையில் ஓட்டிய சிவசேனா பிரமுகர் மகன்; சீறிய பி.எம்.டபிள்யூ கார் மோதி பெண் உயிரிழப்பு!

மும்பை ஒர்லி கோலிவாடா பகுதியைச் சேர்ந்த காவேரியும், அவரின் கணவர் பிரதிக்கும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் தென்மும்பை சசூன்டாக் பகுதிக்கு காலையில் மீன் வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அங்கு படகுகளில் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். எனவே அங்கு குறைந்த விலையில் மீன் கிடைக்கும் என்று கருதி அங்கு மீன் வாங்க சென்றனர். அவர்கள் மீன் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்நேரம் அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது பின்புறத்தில் பி.எம்.டபிள்.யூ கார் ஒன்று மோதியது. இதில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் இருவரும் உடனே நாயர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.

விபத்தில் இறந்த பெண்

அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் இடித்த காரை சிவசேனா தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரது மகன் மிஹிர் ஓட்டினார் என்று தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் காரை பறிமுதல் செய்துள்ளனர். அவர் அதிகாலையில் குடிபோதையில் கார் ஓட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது தந்தை முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் பால்கர் மாவட்ட துணை தலைவராக இருக்கிறார். மிஹிர் (24) சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரது மொபைல் போன் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தற்போது கார் ராஜேஷ் ஷாவுக்கு சொந்தமானது எனபதால் அவரும், அவரது டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் மிஹிரை தேடி வருகின்றனர்.

மிஹிர்

போலீஸாரின் விசாரணையில் மிஹிர் நேற்று நள்ளிரவில் இருந்து காலை வரை ஜுகு பகுதியில் உள்ள பார் ஒன்றில் மது அருந்தியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. வீட்டிற்கு வரும்போது டிரைவர்தான் கார் ஓட்டியிருக்கிறார். மிஹிர் டிரைவரிடம் காரை நீண்ட தூரம் ஓட்டிச்செல்லும்படி கேட்டுக்கொண்டார். உடனே டிரைவர் காரை மும்பை ஒர்லியை நோக்கி ஓட்டி வந்தார். ஒர்லிக்கு வந்தபோது காரை தான் ஓட்டுகிறேன் என்று மிஹிர் தெரிவித்தார். வேறு வழியில்லாமல் மிஹிர் காரை ஓட்ட டிரைவர் சம்மதித்தார். மிஹிர் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டியபோது மீன் வாங்கிக்கொண்டு வந்த தம்பதியின் இரு சக்கர வாகனம் மீது வேகமாக மோதிக்கொண்டது. கார் மோதிய வேகத்தில் காவேரி காரின் முன்பகுதியில் தூக்கிவீசப்பட்டார்.

அவர் மீது கார் ஏறிச்சென்றது. இதில் காயம் அடைந்த கணவர் பிரதிக் மற்றும் காவேரி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் காவேரி இறந்து போனார். கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றதோடு, காரில் இருந்த நம்பர் பிளேட்டை அகற்றி ஆதாரங்களையும் அழிக்க பார்த்துள்ளார் மிஹிர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் விபத்தை ஏற்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், விபத்து துரதிஷ்டவசமானது என்றும், கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்

கடந்த மாதம் புனேயில் குடிபோதையில் 17 வயது மைனர் ஓட்டிய கார் இரு சக்கர வாகனத்தின்மீது மோதிக்கொண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவமும் இது போன்று காலையில்தான் நடந்தது. ஆதித்ய தாக்கரே உடனே புறப்பட்டுச்சென்று காவேரியின் கணவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு குற்றவாளியை உடனே கைது செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.