``பதின்பருவ இசைவு உறவில் தவறாகப் பயன்படுத்தப்படும் போக்சோ சட்டம் - அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதின் வயதினர் சிலரின் விருப்பத்தின் பேரில் நடக்கும் உறவுகள் விவகாரத்தில், போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் காதல் வயப்படும்போது, சிலருக்கு இசைவு உறவும் நடக்கிறது. ஆனால், அவர்களின் பெற்றோர்களால் அது பாலியல் கொடுமைக்கான போக்சோ வழக்கின் கீழ் புகாராகப் பதிவு செய்யப்படுகிறது. பெற்றோர் கொடுக்கும் நெருக்கடியால், இருவரின் ஒப்புதலுடன் நடக்கும் உறவுகளைக்கூட சில பதின் வயதுப் பெண்கள், பாலியல் வன்கொடுமை என காவல் துறையினரிடம் தெரிவிக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இது போன்ற பல போக்சோ வழக்குகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்த இளம்பெண்ணை காதலித்து, வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். ஆனால், மைனர் பெண்ணான தன் மகளை கடத்திச் சென்று சதீஷ் கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அப்பெண்ணின் தந்தை போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சதீஷை கைது செய்து விசாரித்து வந்தனர். அப்பெண், தனக்கு 18 வயதாகிவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதனை அவரின் தந்தை மறுத்தார். இதையடுத்து, சதீஷ் தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இளம்பெண்ணின் வயது என்னவென்று கண்டுபிடிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்த போது, அப்பெண்ணிற்கு 18 வயது என்று தெரிய வந்தது.
இவ்வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜரான சதீஷின் வழக்கறிஞர், ’சம்பந்தப்பட்ட பெண்ணும், என் மனுதாரரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அப்பெண்ணிற்கு 18 வயது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். எனவே, என் மனுதாரர் மீது தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் இருவரும் வீட்டை விட்டுச் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன், ’இளம் வயதினர் ஒருவரை ஒருவர் காதலித்து, இசைவால் கொள்ளும் உறவு விவகாரத்தில் போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கட்டாய உறவு மற்றும் விருப்பப்பட்டு உறவு ஆகியவற்றை வேறுபடுத்துவதில் சவால்கள் உள்ளது. இதற்கு ஒரு நுணுக்கமான அணுகுமுறை, மற்றும் கவனமான நீதித்துறை பரிசீலனை தேவைப்படுகிறது.
போக்சோ சட்டம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுப்படுத்தப்படுவதில் இருந்து காப்பாற்றவே கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டம் இரு இளம் வயதினர் விருப்பப்பட்டு உறவு கொள்ளும் போது அவர்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் வயது தொடர்பான பரிசோதனை அறிக்கையில் அவரின் உண்மையான பிறந்த தேதியை கணிக்க முடியாது. ஒன்று அல்லது இரண்டு வயது முன்பு, அல்லது பின்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்பெண் விவகாரத்தில் அவருக்கு 18 வயது என்று அறிக்கை கூறுகிறது’ என்பதை நீதிபதி சுட்டிக்காட்டி, சதீஷிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம், பதின் பருவ காதலால் விருப்ப உறவில் ஈடுபட்ட பலர், போக்சோ வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

