Bhole Baba: ரூ.100 கோடி சொத்து, Five Star ரக ஆசிரமங்கள்... 15 கமாண்டோக்கள் - போலே பாபா பின்னணி
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த மத நிகழ்ச்சியில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மத நிகழ்ச்சிக்கு சாமியார் போலே பாபா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரது காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு ஓடியபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி பட்டியலில் சாமியார் போலே பாபாவின் பெயரை சேர்க்கவில்லை. மதுக்கர் என்பவர் பெயரை மட்டும் சேர்த்து இருக்கின்றனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறாவிட்டாலும் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். போலே பாபா தலைமறைவாகிவிட்டார். ஹரியானா, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களில் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
போலீஸார் போலே பாபாவின் ஆசிரமத்தில் ரெய்டு நடத்திய போது, ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வு செய்த போது சாமியாருக்கு 24 ஆடம்பர ஆசிரமங்கள் இருப்பது தெரிய வந்தது. அதோடு ஏராளமான சொகுசு கார்கள், பாதுகாப்புக்கு தனியார் செக்யூரிட்டி கார்டு என சாமியார் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மைன்புரியில் ஐந்து நட்சத்திர ஆசிரமம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தில்தான் போலே பாபா தங்கி இருக்கிறார். ஆசிரமத்தில் அவருக்கும், அவரது மனைவிக்காகவும் 6 பெரிய அறைகள் இருக்கிறது.
ஆசிரம மெயின் கேட்டில் நன்கொடை கொடுத்தவர்கள் 200 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதில் குறைந்த பட்சம் 10 ஆயிரமும், அதிக பட்சமாக ரூ.2.5 லட்சமும் நன்கொடை வழங்கி இருந்தனர். இந்த ஆசிரமத்தின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆசிரமங்களை போலே பாபாவிற்கு வேண்டப்பட்டவர்கள் டிரஸ்ட் மூலம் நிர்வகித்து வருகின்றனர்.
ஆசிரமம் மற்றும் அது இருக்கும் நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். எப்போதும் வெள்ளை ஆடை அணியும் போலே பாபா, எந்த மத நிகழ்ச்சிக்கு சென்றாலும் 20 வாகனங்கள் புடைசூழ 15 கமாண்டோவுடன் செல்வது வழக்கம். கார்களுக்கு முன்பு 15 கமாண்டோ படையினர் சாமியார் வாகனங்களுக்கு முன்பு புல்லட்டில் வழியை சரி செய்து கொண்டே செல்வது வழக்கம்.

வெள்ளை டொயோட்டா காரில் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் சாமியார் தனது நிகழ்ச்சியை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஆசிரமங்களில் 8 பேர் சம்பளம் இல்லாமல் தன்னார்வலர்களாக வேலை செய்கின்றனர். கான்பூரில் மிகப்பெரிய ஆசிரமம் இருக்கிறது.
ஹத்ராஸ் சம்பவத்திற்கு முன்பு அப்பகுதி போலீஸார் ஆசிரமத்தில் இருந்துதான் இலவச டிபன் வாங்கிச் செல்வார்கள் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். ஏதாவது பிரச்னை என்றால் போலீஸார் ஆசிரமத்திற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எடாவாஹ் என்ற இடத்தில் ஆசிரமம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாமியார் இங்கு வந்து திறந்து வைக்கவில்லை. இதனால் ஆசிரமம் காலியாகவே இருக்கிறது. ஆசிரமத்திற்கு உயர் அதிகாரிகள் வருவதாகவும், அவர்கள் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுப்பதாகவும் ஆனால் யாரும் தங்களது பெயர் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

