வேலை: ஆண்களுக்கு அவசியம், பெண்களுக்கு ஆப்ஷனா..? | அவளின் சிறகு

பொண்ணுங்க பசங்களோட டீ குடிக்கப் போறதே ஓசி டீ வாங்கி குடிக்கத்தானே? இந்தப் பொண்ணுங்க வேலைக்கு வர்றதே பார்லருக்கு, டிரெஸ்ஸுக்கு செலவழிக்கத்தான் பொண்ணுங்களுக்கு என்ன செலவு இருக்கப்போகுது வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார்... கால் ஆட்டிக்கிட்டு வீட்ல இருக்கலாம்.. என்னத்துக்கு வேலைக்கு வரணும்

பெண்கள் வேலைக்கு வருவது பற்றியும், பெண்களின் சம்பாத்தியம் பற்றியும் பொதுவான மதிப்பீடு இதுதான். தேய்ந்து போன ரப்பர் செருப்பு, ஜிப் அறுந்து ஊக்குகள் ஏறியிருக்கும் பை, பழைய வாட்டர் பாட்டில், சாயம் போன ஆடைகள், நம்பர் அழிந்த பட்டன் போன், முகத்தில் எப்போதும் வைராக்கியம் இவற்றுக்கெல்லாம் உயிர் கொடுத்தால் அவள்தான் என் கல்லூரி தோழி பொன்னி. காலையில் கல்லூரிப்படிப்பு, மாலையில் இரண்டு மணிநேரம் ஜெராக்ஸ் கடையில் பார்ட் டைம் வேலை, இரவு எட்டு மணி முதல் 10 மணி வரை டியூஷன் என எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவள். பஸ் பாஸ் புதுப்பிக்காத நாள்களில் 3 ரூபாய் பஸ் கட்டணம் கொடுப்பதற்கு பயந்து 5 கிலோ மீட்டர் நடந்தே வருவாள். வகுப்பறைக்கு ஆசிரியர்கள் வராத நாள்களில் கேன்ட்டீன் செல்லலாம் என்றால், மறுத்துவிடுவாள். அப்படியே வந்தாலும் எனக்கு பசிக்கல, டீ பிடிக்காது, பஃப்ஸ் பிடிக்காது என ஆயிரம் பொய்களைச் சொல்லி அமைதியாக இருப்பாள். ஏன்டி இப்படி இருக்க, உனக்கு வேணுங்கிறதை கூட நீ பண்ணிக்கமாட்டியா? ... வாழ்க்கையை என்ஜாய் பண்ணு என ஒரு நாள் கேட்டுவிட்டேன். வாதம் வந்த அம்மாவை விட்டுட்டு எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாருடி. அவரு பொண்டாட்டி வேண்டாம்னு போகலாம். எனக்கு அம்மா வேணும்ல... 9 வயசுல அக்கம் பக்கத்துல இருக்குறவங்க வீட்ல காய்கறி கடைக்குப் போறது, பாத்திரம் தேய்க்கிறதுனு சின்னச் சின்ன வேலைகள் பண்ணி கிடைக்கிற காசுல எங்க அம்மாவைப் பாத்துக்க ஆரம்பிச்சேன்.

ரேஷன் அரிசி வாங்க காசு இருந்தா போதும்னு தான் எங்க வாழ்க்கையைத் தொடங்குனோம். கஞ்சியும் ஊறுகாயும்தான் மூணு நேர சாப்பாடு. அம்மாவுக்கு வலது பக்க கை, கால் வராது. சேலையை கட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஒரு நைட்டி இருந்தா அம்மாவுக்கு வசதியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அந்த நைட்டிக்கான காசை சேர்த்துவைக்க எனக்கு 9 மாசம் ஆச்சு. திடீர்னு ஒருநாள் அம்மாவுக்கு காய்ச்சல் வந்துருச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போக பக்கத்து வீட்ல காசு கேட்டப்போ, நீயே சின்னப்புள்ள, உன்ன நம்பி எப்படி காசு கொடுக்குறது னு கேட்டாங்க. வீட்ல இருந்த என் பழைய நோட்டு புத்தகங்களை எடுத்துட்டுப் போயி எடைக்குப் போட்டேன். அப்பவும் 15 ரூபா தான் கிடைச்சுது. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போக முடியாம மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கிக்கொடுத்து சூழலை சமாளிச்சேன்.

15 வயசுல பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பிச்சேன். மூணு நேரம் நானும் என் அம்மாவும் வயிறு நிறைய சாப்பிட ஆரம்பிச்சோம். இப்போ டியூஷன், பார்ட் டைம் வேலைனு வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்கு. இங்க கேன்ட்டீன்ல 25 ரூபா கொடுத்து பஃப்ஸ் சாப்பிடுறதுக்கு பதிலா, அரை லிட்டர் பால் வாங்குனா நானும் என் அம்மாவும் ரெண்டு நாள் சத்தான பாலை குடிச்ச திருப்தி கிடைக்கும். அம்பது பைசா மிச்சம் ஆச்சுனா, என்ன பண்ணலாம்னு யோசிக்கிறது வேற... அம்பது பைசாக்கு ஆயிரம் செலவுகள் இருக்கும்போது அதை எப்படி சம்பாதிக்கிறதுனு தெரியாம நிக்கிறது வேற... நான் என் சம்பாத்தியத்துல வாழுறேன் என அவள் சொல்லிக் கடந்து செல்லும்போது, அவளின் நிலைமை புரிந்தது. சம்பாதிக்க பாலினம் கிடையாது, உழைக்க வயது கிடையாது என்பதை 21 வயதில் மனதில் தீர்க்கமாக விதைத்தவள்.

படிப்பு முடிந்ததும் சென்னையில் தனியாக ஹாஸ்டல் தேட ஆரம்பித்தேன். சிறிய பாத்ரூம் அளவு அறையில் 4 பேர் ஷேரிங். 6000 ரூபாய் கட்டணம். வைஃபை தனி கட்டணம் என்ற விதிமுறைகளோடு எழும்பூரில் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். நான்கு பேரும் ஒரே நேரத்தில் நிற்க கூட இயலாத அறை. உள்ளாடைகளைத் துவைத்து அறைக்குள்ளேயே காயவைக்க வேண்டும்...எல்லா தேவைகளுக்கும் சேர்த்து காலை 7 மணிக்குள் இரண்டு பக்கெட் தண்ணீர் தருவார்கள். கொஞ்சம் தாமதமாக எழுந்தாலும் அன்று குளிக்க வழியில்லாமல் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்ல வேண்டியதுதான். எங்களுடன் சேர்ந்து  வாடகையே கொடுக்காமல் சில எலிகளும் ரூமை ஷேர் செய்து கொண்டன.  கால் சென்ட்டரில் வேலை செய்து மாதம் 9000 ரூபாய் சம்பளத்தில் தன் அக்காவின் கல்யாணத்துக்கு நகை சேர்க்கும் லட்சுமி, தம்பியின் படிப்புக்காக நர்ஸ் வேலை செய்யும்  திவ்யா, மண் வீட்டை ஓட்டு வீடாக மாற்ற பியூட்டி பார்லரில் 8000 ரூபாய்க்கு வேலை செய்யும் கீர்த்தி என எங்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கமிட்மன்ண்ட்.  காலை, மதியம் பெரும்பாலும் சாதம் சமைத்து தயிர் வாங்கிக்கொள்வோம். இரவுகளில் பெரும்பாலும் காய்ந்த பன் தான் உணவாக இருக்கும். சம்பளம் வந்ததும் அருகில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிடுவோம். மாதத்தில் ஒண்ணாம் தேதியைத் தவிர அனைத்து நாள்களும் நிறைவில்லாத நாள்கள்தான். பட்டினியாக இருந்தாலும் கடன் வாங்கவோ, வீட்டில் பணம் கேட்கவோ தன்மானம் இடம் தந்ததில்லை. பஸ் கட்டணத்தை மிச்சப்படுத்த எழும்பூரிலிருந்து அண்ணாசாலை நடந்து வந்த நாள்களும் உண்டு.

என் அலுவலக பெண் சீனியர் ஒருவர் எப்போது டீக்கடைக்குச் சென்றாலும் எல்லாருக்கும் சேர்த்து அவர்தான் கட்டணம் செலுத்துவார். ஒரு முறை காரணம் கேட்டபோது, பசங்க என்ன தான் ஃபிரெண்ட்ஸா இருந்தாலும், ஏதோ ஒரு இடத்துல ஓசி டீனு நம்மை பிராண்ட் பண்ணுவாங்க. இன்னும் சிலர் ஒரு டீ வாங்கிக்கொடுத்துட்டு நம்மகிட்ட இருந்து வேற எதையோ எதிர்பார்ப்பாங்க. அதனால நானே காசு கொடுத்துருவேன் என்றார். அதன் பின் அந்தக் கொள்கையை நானும் பின்பற்றத் தொடங்கினேன். அலுவலக நண்பர்கள் டீ குடிக்கப்போகலாம் என அழைக்கும்போது நானே எல்லாருக்கும் சேர்த்து பணம் செலுத்துவேன்.... உனக்கு என்ன, வீட்டுக்காரர் சம்பாதிக்கிறாரு,  பணத்திமிரு  என இப்போதும் வசை தொடரத்தான் செய்கிறது.

என் அலுவலகத்தில் நல்ல வேலையில் நல்ல ஊதியத்தில் இருக்கும் என் சீனியர் பெண் ஒருவர். அவரின் கண்ணாடி மங்கி, சில இடங்களில் கிராக் விட்டு இருந்தது. கண்ணாடி மாத்துங்க மேம் என்று சொன்னபோது, மாத்தணும், எங்க பிள்ளைங்க ஃபீஸ், பர்த்டே னு எதாவது ஒண்ணு வந்துருது’ என்று கண்ணாடியைத் துடைத்து மீண்டும் போட்டுக்கொண்டார். அறுந்த செருப்புடனும், கிழிந்த பனியனுடனும் சுற்றும் ஆண்களின் உழைப்பைக் கொண்டாடும் சமூகம், இதுவரை பெண்களின் உழைப்பையும் ஊதியத்தையும் ஆப்ஷனாகவே பார்ப்பது ஏன்..? பெரும்பாலான வீடுகளில் ஆண்களின் சம்பளம் குழந்தைகளின் கல்விக் கட்டணம், இன்வெஸ்ட்மென்ட் என ஒதுக்கப்படும்போது, பெண்களின் சம்பளம் வீட்டு வேலையாள்களுக்கு ஊதியம் வழங்க, காய்கறிகள் வாங்க, கூடுதல் செலவுகளைச் சமாளிக்க என்று கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து செல்லும் செலவுகளாக இடம்பெறுவது ஏன்..? இந்தச் சூழலில் பெண்கள் நிறுத்தப்படுவதால்தான்,  நீ வேலைக்குப் போயி தான் வீடு நிறையணும்னு இல்ல’ , ‘உன் சம்பளம் காசு யாருக்கு வேணும், உன் சம்பளத்தை வெச்சு கோட்டையா கட்டுறது என்பன போன்ற கேள்விகளையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

அவளின் சிறகு

ஆண்கள் வேலைக்குச் செல்ல குடும்பமே அவனுக்காக சுழலும். ஆனால், ஒரு பெண் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால், சம்பாதிக்க வேண்டுமென்றால் அவள்  குடும்பத்திற்காகவும், தனக்காகவும் சுழல வேண்டும். காலை 4 மணிக்கு எழுந்து சமைத்து ஈரத்தலையை துவட்டியும் துவட்டாமலும் காலை ரயில் ஏறவும், பஸ் ஏறவும் ஓடி வரும் பெண்ணுக்குள்ளும் பார்லர் கனவுகளும், ஆடம்பர ஆடைக் கனவுகளும் இருப்பதில்லை... தன் ஊதியம் குடும்பத்திற்கு தரவேண்டிய கட்டாயம், அவசியம் இல்லாத சில பெண்கள் தனக்காக பார்லர், ஆடை என செலவழிப்பதை வைத்து ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் அளவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அப்படி செலவு செய்வதாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?அதைத்தாண்டி குடும்ப பொறுப்பு, தேவை, ஆசை, இலக்கு என ஏதோ ஒன்று பெண்களுக்கு இருக்கிறது என்பதை சமூகம் எப்போது புரிந்து கொள்ளும்?

நீ ஏன் வேலைக்குப் போகணும் என கேட்கும் போதெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது என் அம்மாவின் முகம்தான். படித்த பெண். குடும்பத்திற்காக, எங்களுக்காக, தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டாள். வேலையை விட்டபின் தாத்தாவை பார்க்கச் செல்வது தொடங்கி, புதிதாக ஒரு புடவை வாங்குவது வரை எல்லாவற்றுக்கும் அப்பாவைச் சார்ந்து இருக்கும் சூழலை அவள் எதிர்கொண்டதை அருகில் இருந்து பார்த்தவள்நான்.

அவளின் சிறகு

அப்பா வெளியூர் செல்லும் நாள்களில் சாமி படத்தின் அருகில் பத்து ரூபாயை வைத்துவிட்டுச் செல்வார். அம்மாவிற்கு அந்த பத்து ரூபாய்க்கு ஓராயிரம் செலவுகள் காத்திருக்கும். ஆனால், அப்பா கேட்கும் கணக்குகளுக்கு பயந்து அந்தப் பத்து ரூபாயை எடுக்காமல் இருப்பாள். அப்படியே எடுத்தாலும், அந்தக் காசு சாமி படத்திலிருந்து உளுந்து டப்பாவிற்கோ, அரிசி வாளிக்கோதான் போகும். ஒரு முறை தாத்தாவிற்கு உடல் நிலை மிக மோசமாக இருந்தது. அப்பாவிடம் ஊருக்குப் போக காசு கேட்டிருக்கலாம். ஆனால், மாதக் கடைசி என்பதால் அம்மா அப்பாவிடம் காசு கேட்கத் தயங்கி அமைதியாக இருந்துவிட்டாள். அம்மா அன்று முழுவதும் அழுதது இப்போதும் மனதில் நெருடலாகத் தான் நிற்கிறது. உழைப்பு என்பது பணம் மட்டுமல்ல.... அது  வைராக்கியம், சுயமரியாதை, அடையாளம்... அதையெல்லாம் ஆண்களுக்கு அவசியமாகவும், பெண்களுக்கு ஆப்ஷனாகவும் இருக்கும் நிலைமை மாற வேண்டும்.

இனியாவது ஒரு பெண்ணிடம், நீ வேலைக்குப் போணுமா, உனக்கு என்ன ஜாலியா வேலைக்குப் போயிட்டு ஜாலி பண்ணிட்டு வர்ற என்ற கேள்விகளை முன் வைப்பதைத் தவிர்த்து உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்போம். கேள்விகள் நிறுத்தப்படும்போது, பதில்கள் தேவையில்லாததாகிவிடும். பெண்கள் பதில் சொல்லியதெல்லாம் போதும்... அவளுக்கும் செய்து முடிக்க ஆயிரம் கடமைகள் இருக்கின்றன. அமைதியாக இருங்கள், அவளின் சிறகுகள் விரியும் சத்தம் கேட்கட்டும்...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.