2.75 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாயம்... வெற்றிநடை போடும் குஜராத் விவசாயிகள்..!
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரம் இல்லாமல் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களுக்கு எப்போதும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பொதுமக்களும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.
குஜராத் மாநிலத்தில் இயற்கை விவசாயத்துக்கான வரவேற்பு குறித்து தெரிந்து கொண்ட விவசாயிகள் தற்போது படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் 50 சதவீத நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு புகையிலை, பருத்தி, நிலக்கடலை, நெல், கோதுமை, சோளம், பயறு வகைகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாநில அரசின் தீவிர முயற்சியால் விவசாயிகள் இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.
குஜராத்தில் 2.75 லட்சம் ஹெக்டேரில் சுமார் 9 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மாநில அரசு 2020-ம் ஆண்டு முதல் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் குறித்து விளம்பரப்படுத்த ஆரம்பித்தது. இதற்காக வேளாண் விஞ்ஞானிகளை மாநில அரசு பணியில் ஈடுபடுத்தியது. அவர்கள் விவசாயிகளிடம் சென்று இயற்கை விவசாயத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறி வருகின்றனர். கிர் சோம்நாத் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கம், முகாம்கள் நடத்தி இயற்கை விவசாயத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள், பொருளாதார பயன்கள் குறித்து எடுத்துக்கூறி வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி ஜிதேந்திர சிங் கூறுகையில்,விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கம் அளித்து வருகிறோம். மண்ணின் வளத்தை பாதுகாக்கும் இயற்கை விவசாயத்திற்கும், அதன் மூலம் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

லோட்வா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி பகவான் பாய் கூறுகையில்,இதற்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி விவசாயம் செய்தேன். இதனால் செலவுகள் அதிகரித்தன. அதோடு விளைச்சலும் குறைந்தது. மண்ணின் தரமும் கெட்டுப் போனது. கிரிஷி விக்யான் கேந்திரா மூலம் இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி எடுத்துக்கொண்டு இப்போது இயற்கை விவசாயம் செய்கிறேன். நான் விளைவித்த பொருள்களை நானே பேக்கிங் செய்து ஆன்லைனில் விற்பனை செய்கிறேன். முன்பு மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தேன். ஆனால் இப்போது ஆன்லைனில் விற்பனை செய்வதால் எளிதாக இருக்கிறது என்றார்.
பகவான் மகன் சந்தீப்பும் தனது தந்தையுடன் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இது குறித்து சந்தீப் கூறுகையில்,எனது தந்தை இயற்கை விவசாயத்திற்கு வராமல் இருந்தபோது, நான் நகரத்திற்கு சென்று நல்ல வேலையில் சேரவேண்டும் என்று நினைத்தேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து மூலம் விவசாயம் செய்யும்போது வருமானம் குறைவாக கிடைத்தது. எனது தந்தை இயற்கை விவசாயம் செய்ய தொடங்கியபோது அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். அதோடு விளைபொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும் உதவி செய்கிறேன் என்றார்.
இதே மாவட்டத்தில் உள்ள தியோலி என்ற கிராமத்தை சேர்ந்த ஜிது பாய் என்ற விவசாயி கூறுகையில், இயற்கை விவசாயம் செய்வதற்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு செல்ல திட்டமிட்டேன்.

எனது நிலம் முன்பு வளமில்லாததாக இருந்தது. இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு இப்போது எனது நிலத்தின் வளம் அதிகரித்து இருக்கிறது. முன்பெல்லாம் மண்ணானது கெட்டியாக இருக்கும். தண்ணீர் பாய்ச்சினால் மண்ணுக்குள் செல்லாமல் இருந்தது. தற்போது தண்ணீர் பாய்ச்சினால் பூமிக்கு அடியில் செல்கிறது என்றார்.
இம்மாவட்டத்தில் கொதினார் என்ற நகரத்தில் இயற்கை விவசாய பொருள்களை விற்பனை செய்யும் அங்காடி நடத்தி வரும் அமிபென் கூறுகையில்,இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நாங்கள் விவசாயிகளுடன் சேர்ந்து செயல்படுகிறோம் என்றார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

