Cinema Roundup: அந்நியன் ரீமேக் அப்டேட்; பிரமாண்ட இயக்குநரைப் பற்றிய ஆவணப்படம்- டாப் சினிமா தகவல்கள்
இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோகன் பாபுவை அரவணைத்த ரஜினி:
நடிகர் மோகன் பாபுவுடன் ரஜினி இருக்கும் அந்த அழகான புகைப்படம்தான் தற்போதைய சமூக வலைதள வைரல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் தொடங்கியது. கடந்த ஜூலை 2-ம் தேதி கூலி படக்குழு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்கிறார்கள் என்ற தகவல்கள் உலா வந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் வெளியாகின. இதன் பிறகு கடந்த ஜூலை 4-ம் தேதி ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுடன் ரஜினி உடனிருக்கும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. ரஜினி மோகன் பாபுவுடன் இணைந்து பெத்தராயடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தமிழில் வெளியான நாட்டாமை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் இசையில் சந்தோஷ் நாராயணன்!
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இத்திரைப்படத்திற்கும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான யுவனுடன் கைகோத்திருக்கிறார் இயக்குநர் ராம். இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இரண்டாவது சிங்கிளான ஏழேழு மலை பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். யுவன் இசையில் சந்தோஷ் நாரயணன் பாடுவது இதுவே முதல் முறை. இதே போல சந்தோஷ் நாராயணன் இசையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் யுவனும் தீக்குச்சி பாடலை சமீபத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாராகிறது பிரமாண்ட இயக்குநரின் பயோபிக்!
டோலிவுட்டின் உச்ச இயக்குநர்களில் ஒருவர் ராஜமெளலி. மகதீரா,பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரமாண்ட படைப்புகளை நமக்கு கொடுத்தவரைப் பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்த ஆவணப்படத்திற்கு , மார்டன் மாஸ்டர்ஸ் - எஸ். எஸ். ராஜமெளலி எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தில் இயக்குநர் ராஜமெளலியின் படங்களில் நடித்த நடிகர்கள் பலரும் அவரைப் பற்றி பேசியிருக்கிறார்களாம். இந்த ஆவணப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
.jpg)
அந்நியன் ரீமேக் இப்போது வரை கிடையாது!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா ஆகியோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு அந்நியன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கத் திட்டமிட்டார்கள். இதனை இயக்குநர் ஷங்கரே இயக்கவிருந்தார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த 2021-ல் வெளிவந்தது. ஆனால், அதன் பிறகு இத்திரைப்படம் குறித்தான எந்தவொரு அறிவிப்பும் வெளி வரவில்லை. தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் இது தொடர்பான கேள்வி ஒன்றி இயக்குநர் ஷங்கரிடம் கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், " அது இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தி ரீமேக்குக்கு முதலில் திட்டமிட்டோம். அதை விட பெரிய படத்தை நான் இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். அதனால் அந்தப் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் வெளியான பிறகு இது தொடர்பாக முடிவெடுக்க உள்ளோம்," எனக் கூறியிருக்கிறார்.

கல்கி இரண்டாம் பாகத்தின் ரிலீஸ்!
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. சிறிது நேரம் தோன்றினாலும் இந்த முதல் பாகத்தில் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியிருக்கிறார் , கமல் ஹாசன். இவருடைய கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் அதிக நேரம் பயணிக்கும் என்பதை முன்பே அறிவித்திருந்தனர். முதல் பாகம் பார்த்த பின் பலரும் இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்துப் பேசியிருக்கிறார். அவர், " இரண்டாம் பாகம் அடுத்தாண்டு வெளியாகும். அதில் கமல் ஹாசனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதன் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே இன்னும் எடுக்க வேண்டியுள்ளது." எனக் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

