ஆம்ஸ்ட்ராங் கொலை: `தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை... சிபிஐ விசாரணை வேண்டும் - மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் அருகே கடந்த 5-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை ஆம்ஸ்டராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் படுகொலை குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, பேசிய அவர், ``புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் வாழ்ந்தவர் ஆம்ஸ்டராங். ஏழை எளியவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து செயலாற்றியவர். ஆம்ஸ்டராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். பகலில், அதுவும் அவருடைய வீட்டருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஆம்ஸ்டராங் கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கலாம். உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து தமிழ்நாடு அரசு கண்டுபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும். மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

எனவே தமிழ்நாடு அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். பட்டியலின மக்களுக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்டராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.