Teenz Issue: `ஏமாற்றியது யார்? கிராபிக்ஸ் விவகாரத்தில் பார்த்திபன் - சிவபிரசாத் சொல்வது என்ன?
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற டீன்ஸ் திரைப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தில் யோகி பாபுவுடன் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு கோவையைச் சேர்ந்த ரியல் வொர்க்ஸ் என்ற கிராபிக்ஸ் நிறுவனத்தின் சிவபிரசாத்திடம் ஒப்படைத்திருக்கிறார் பார்த்திபன். இந்த கிராபிக்ஸ் பணிகளுக்கு முதலில் மொத்தமாக ₹68,54,400 செலவாகும் எனக் கூறியிருக்கிறார் சிவ பிரசாத். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்டு கூறியபடி படத்தின் கிராபிக்ஸ் பணிகளை செய்து கொடுக்காமல் கூடுதலாக பணம் கேட்கிறார் என ரியல் வொர்க்ஸ் சிவபிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்த்திபன் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில்,சிவபிரசாத் ஒப்புக்கொண்ட நேரத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை. அதை முடிக்க ஏப்ரல் 19 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஒரு சிறிய பகுதியைதான் அவர் முடித்திருக்கிறார். மேலும் மே மாதத்தில் படத்தின் முக்கிய பகுதியை அவரால் முடிக்க முடியவில்லை. ஆனால், மெயில் மூலமாக கிராபிக்ஸ் பணிக்காக ரூ.88.38 லட்சம் கேட்டுள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் ரியல் வொர்க்ஸ் சிவபிரசாத் தன் தரப்பு நியாயத்தை விளக்கும் வகையில் ஒரு காணொளியை அவரின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ரியல் வொர்க்ஸ் சிவபிரசாத்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், " முதல்ல நான் இவ்வளவு பணம் ஆகும்னு சொல்லும்போது எத்தனை ஷாட்டுக்கு வேலைப் பார்க்கப்போறோம்னு இறுதியாகல. நான் இத்தனை ப்ரேம்களுக்கு இவ்வளவு செலவாகும்னு கணக்கிட்டு சொன்னேன். அப்போ பார்த்திபன் சார் மீடியம் தரத்துக்கு எவ்ளோ செலவாகும்னு கேட்டாங்க. நான் தோராயமாக இத்தனை ப்ரேம்கள் வரும்னு கணக்கு போட்டு ₹68, 54,400 ரூபாய் நான் சொல்லியிருந்தேன். மீடியம் தரத்துல எங்களுக்கு கொடுத்த 4 மாசத்துல எந்தளவுக்கு வேலை பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு வேலை பார்த்தோம். அப்போ அதிகமான வேலைகள் கொடுத்தாங்க. அதே சமயத்துல குவாலிட்டியும் பெஸ்ட்டாக வேணும்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
நாங்க பண்ணின வேலைகள்ல நிறைய மாற்றங்கள் சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல ஒருத்தர் பார்ப்பாரு. அதுக்குப் பிறகு இன்னொருத்தர் பார்த்து வேற மாதிரி பண்ணுங்கன்னு சொல்வாரு. நாங்க 10 நாள்ல செஞ்சு முடிச்ச வேலையை மறுபடியும் முதல்ல இருந்து பண்ண சொன்னாங்க. இதுனால தாமதமானதைக் காரணம் காட்டி எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வச்சுட்டாங்க. இதுவரைக்கும் 37 லட்ச ரூபாய் எங்களுக்கு கொடுத்திருக்காங்க. ஆனா, புகார்ல 42 லட்சம்னு குறிப்பிட்டிருக்காங்க. நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மேற்பார்வை பார்க்கப் போவோம். அதுக்கு அவங்க எங்களுக்குத் தனியாக பணம் கொடுக்கணும். அது எங்க வேலைக்கான பணம் கிடையாது. மேற்பார்வை ஆகஸ்ட் மாசத்துலேயே முடிஞ்சிடுச்சு.
நாங்க புட்டேஜ் டெலிவரி கொடுக்கலனு சொல்றாங்க. டெலிவரி பண்ணாம இப்போ ரிலீஸுக்குத் திட்டமிட முடியாது. நாங்க வேலை பார்க்கும்போது பார்த்திபன் சார்கிட்ட எங்க வேலைக்கான பணத்தைக் கேட்டோம். அவர் வேலையை முடிச்சதும் தர்றதாகச் சொன்னார். நாங்க வேலையை முதல்ல முடிச்சு கொடுத்ததும் ஒரு 60 ஷாட்ல சில மாற்றங்கள் சொன்னாங்க. அப்போ பணம் நமக்குக் கிடைக்காதுனு பயத்துல அந்த 60 ஷாட்ல வாட்டர்மார்க் வச்சு கொடுத்தேன். அந்த நேரத்துலகூட வேலையெல்லாம் முடிச்சு தயாராகதான் இருக்கு. நீங்க பணத்தைக் கொடுத்திட்டா வாட்டர்மார்க் நீக்கிட்டு கொடுத்திடுறேன்னு சொன்னேன். அப்போ பார்த்திபன் திட்டி எனக்கு வாய்ஸ் மெசேஜ்லாம் பண்ணினாரு.

அவங்க முதல்ல சொன்ன பணத்தைவிட அதிகமாக கேட்கிறாங்கனு குற்றச்சாட்டு வைக்கிறாங்க. முதல்ல நான் ஒரு பில் போட்டுக் கொடுத்தேன்ல. அதன் அடிப்படையில நான் வேலைப் பார்த்திருக்கேன். ப்ரேம்களை வச்சு கணக்கிட்டு பார்க்கும்போது 88 லட்ச ரூபாய் வருது. அவங்க இத்தனை ப்ரேம்களுக்கு இவ்வளவு செலவாகும்னு முதல்ல கணக்கிட்டு சொன்னதுக்கு அவங்க ஒப்புக்கொண்டதிற்கான விவரங்களும் என்கிட்ட இருக்கு. இந்த வேலைகளுக்காக நான் செலவுகள் பண்ணியிருக்கேன். அதுக்காக நான் வெளில கடன் வாங்கியிருந்தேன். நான் நகையெல்லாம் அடமானம் வச்சு அந்த கடனை நான் அடைச்சிட்டேன். மே 19-ம் தேதி காவல் நிலையத்துல கூப்பிட்டு பேசும்போது படக்குழுவுல இருந்து புதுசா ஷாட்ஸ் கொடுத்து வேலை பார்க்கச் சொன்னாங்க. காவல் அதிகாரியும் முடிச்சுடுங்க அப்போதான் பேச முடியும்னு சொன்னாரு. நான் அதையும் மே மாசத்துல முடிச்சு கொடுத்துட்டேன். " என்றார்.
இது தொடர்பாக விகடனுக்கு பார்த்திபன் அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அவர், ஒரு வி.எஃப்.எக்ஸ் மோசடி மன்னன்தான் படம் தாமதமானதுக்குக் காரணம். போன வருஷம் ஜூன் மாசத்துல இந்தப் படத்தை எடுத்து முடிச்சிட்டோம். அக்டோபர் மாசத்துல எடிட் வேலையெல்லாம் முடிச்சிட்டு அவர்கிட்ட வரைகலை வேலைகளுக்கு கொடுத்திட்டேன். அவர் பிப்ரவரி மாசம் வரைக்கும் டைம் கேட்டாரு. அப்போகூட என்னுடைய இணை இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி அவர்கிட்ட நீங்க ஜனவரி மாசத்துல முடிச்சு கொடுத்தாதானே நாங்க மாற்றங்கள் பார்த்து சொல்லி பிப்ரவரில முடிக்க முடியும்னு கேட்டாரு. ஆனா, அவர் எந்த மாற்றங்களும் வராது சரியாக பண்ணித் தர்றேன்னு சொன்னாரு. ஆனா பிப்ரவரி மாசத்துல அவர் டைம் வேணும்னு பத்து பத்து நாட்களாக கேட்டுட்டே இருந்தாரு. அந்த நேரத்துல நான் டென்ஷனாகி கத்த ஆரம்பிச்சுட்டேன். அப்போ அவர் என் இணை இயக்குநர்கிட்ட நான் பண்ணதெல்லாம் தப்புதான்னு சொல்லியிருக்காரு. அவர் இந்தப் படத்துக்கு வேலை பார்க்கும்போது அயலான் படத்துல வேலைப் பார்த்திருக்காரு.

அவர் அந்த வேலையை பிப்ரவரிக்குள்ள பண்ணல. ஏப்ரல் மாசம் ரிலீஸ் வச்சுதான் நான் விநியோகஸ்தர்கள்கிட்ட கமிட் பண்ணேன். ஏப்ரல் மாசம் 19-ம் தேதி நான் எதை முக்கியமாக கொடுத்தேனோ அந்த வேலையையே அவர் பண்ணல. அதுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாகிட்ட பேசி வேற இடத்துல வேலைக்குக் கொடுத்திட்டேன். ஏப்ரல் 25-ம் தேதியே நான் போலீஸ்ல புகார் கொடுத்திட்டேன்.
அப்போவே அவரைக் கைது செய்யுற மாதிரி இருந்துச்சு. அப்போ நான் இவர்கிட்ட சில வேலைகள் இருக்கு. முக்கியமானதெல்லாம் நான் வேற இடத்துல கொடுத்து வாங்கிடுறேன்னு சொன்னேன். அந்த சமயத்துல நான் மீடியாவைக் கூப்பிட்டு இந்த ரியல் வொர்க்ஸ் சிவபிரசாத் மிக கேவலமானவர். அவராலதான் என் படம் தாமதமாகுச்சுனு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா, அப்படி தரம் தாழ்த்துறது நம்ம வேலை கிடையாது. நமக்கு நிறைய வேலைகள் இருக்குனு விட்டுட்டேன். அவர் ஒத்துகிட்ட வேலைகள் இன்னும் எதுவுமே கொடுக்கல.

அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகும்போது நான் பண்ணினதெல்லாம் தப்புனு ஒத்துகிட்டாரு. அவர்கிட்ட யாரோ பணம் இன்னும் அதிகமாக கேளுனு சொல்லியிருக்காங்க. ஆனா, நான் கொடுத்த பணத்துக்கு இன்னும் அவர் வேலைகள் பண்ணிக் கொடுக்கல. அவர் நேரத்துக்கு பண்ணாததுனால எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் வழக்கு போடனும்னு நினைச்சுட்டு இருக்கேன். ஆனா, அவர் இப்போ வழக்கு போட்டிருக்காரு. அவர் வீடியோலாம் போட்டு படத்தைத் தடுத்து நிறுத்தணும்தான் பண்றாரு. " எனக் கூறினார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

