Elephant Death: புதைக்குழியாக மாறிய வாழைத் தோட்டம், மூச்சுத்திணறி துடிதுடித்து இறந்த ஆண் யானை!

நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர். உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு யானைகள் இடம்பெயர‌ முடியாமல் தவித்து வருகின்றன. குடியிருப்புகள், விளை நிலங்கள் போன்றவற்றை கடக்கும் சூழலில் எதிர்கொள்ளல்கள் நிகழ்கின்றன. டிரோன் கேமிராக்கள் முதல் யானை கண்காணிப்பு குழு வரை 24 மணி நேரமும் யானைகளை கண்காணிக்கும் பணியில் கூடலூர் கோட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த யானை

இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள தனியார் வாழைத் தோட்டத்தில் இன்று காலை யானை ஒன்று அசைவில்லாமல் கிடப்பதைக் கண்ட விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் சென்று பார்க்கையில் ஆண் யானை ஒன்று சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை கூறாய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யானை இறப்பு குறித்து தெரிவித்த வனத்துறை, "முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று நடமாடி வந்தது. தேன்வயல் அருகில் உள்ள பராமரிப்பில்லா வாழைத் தோட்டத்தில் நுழைந்திருக்கிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் வாழை தோட்டத்தின்‌ சில இடங்களில் புதைக்குழி போல மாறியிருக்கிறது.

உயிரிழந்த யானை

நேற்றிரவு அந்த வழியாக சென்ற யானையின் கால்கள் , தந்தம், தும்பிக்கை ஆகிய உறுப்புகள் சேற்றில் புதைந்திருக்கிறது. இரண்டு தந்தங்களுக்கு இடையே தும்பிக்கையும்‌ சேற்றில் சிக்கி புதைந்ததால் மூச்சு விட முடியாமல் தவித்த யானை, திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்திருக்கிறது. உடல் பாகங்களை ஆய்வுக்காக சேகரித்துள்ளோம். இந்த வழியாக வேறு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் " என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.