ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ டிரைவர் - அதிர்ச்சித் தகவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. வீட்டின் முன்பு பேசிக் கொண்டிந்த ஆம்ஸ்ட்ராங்கை பைக்கில் வந்த ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீஸார், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட எட்டு பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். இது போலீஸாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு ரத்தக்கறை படிந்த அரிவாள், கத்தியை ஆற்காடு சுரேஷின் படத்தின் முன்பு வைத்து பூஜை செய்ததாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. அதோடு ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு காரியத்தை கச்சிதமாக முடித்திருப்பதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு கூறியதாக இன்னொரு தகவல் வெளியானது. ஆனால் காவல்துறை ரெக்கார்டில் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் ஜனவரி என்கிறார்கள் போலீஸார்.

இப்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு கொலை செய்த தகவல் மட்டும் போலீஸார் உறுதிப்படுத்துகிறார்கள். ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் பகுதியில் பிரபலமானவர். மேலும் அவர், வீட்டிலிருக்கும் போதும் வெளியில் செல்லும்போதும் எந்நேரமும் ஆதரவாளர்களுடன்தான் இருப்பார். அதனால் ஆம்ஸ்ட்ராங்கை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்க முடியாது. இதனால்தான் ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை கடந்த சில தினங்களாக கொலை செய்த கும்பல் நோட்டமிட்டு வந்திருக்கிறது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரும் ரௌடியுமான திருமலை என்பவர் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு வந்திருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``ஆம்ஸ்ட்ராங், புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் கட்டுமான பணிகளை இரவு நேரத்தில் பார்க்க வருவார். அப்போது அவருடன் ஒருசிலர் மட்டுமே இருப்பார்கள். இந்தத் தகவலை எல்லாம் ஆட்டோ டிரைவர் திருமலை கண்காணித்து சொல்லியிருக்கிறார். சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரோடு ஒரு சிலர் மட்டுமே நிற்பதை பார்த்த திருமலை இந்தத் தகவலை போனில் தெரிவித்திருக்கிறார் . உடனடியாக ஆறு பேர் கொண்ட கும்பல் மூன்று பைக்குகளில் வந்து கொலை செய்திருக்கிறார்கள். அவர்களின் டார்க்கெட் ஆம்ஸ்ட்ராங் என்பதால் அவரை மட்டுமே சுற்றி வளைத்து வெட்டியிருக்கிறது. ஆனால் அதைத் தடுத்த வீரமணிக்கும் பாலாஜிக்கும் வெட்டு விழுந்துள்ளது. தற்போது திருமலையின் செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். திருமலையிடம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `` கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் கிடைத்த பதிவுகளின்படிதான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட எட்டுபேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தற்போது பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தக் கொலைக்குப் பின்னணியிலிருப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.