நிலமோசடி வழக்கு: நீதிமன்ற நடவடிக்கை.. எம்.ஆர் விஜயபாஸ்கர் உறவினருக்கு வீடியோகாலில் லைவ் செய்த இளைஞர்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இதற்கிடையில், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின், அடிப்படையில், தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்தை, அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு மேற்கொண்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
அதோடு அந்த புகாரில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த்தன், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரப்பன், செல்வராஜ் ஆகியோர் மீது மோசடி செய்து கிரைய பத்திரம் பதிவு செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அதோடு இந்த வழக்கில் நில மோசடி செய்ததாக சாட்சியங்களின் விசாரணை அடிப்படையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோரது பெயர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை கரூர் நகர காவல் துறை ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தன்மீது இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட இருப்பதை உணர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
அதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் தலைமறைவானார்கள். இதனிடையே, தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 18-ஆம் தேதி, இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் கரூர் நகர காவல் நிலையத்தில், மேல கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படவில்லை.
அதற்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதனிடையே, 24 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்.
அதனால், இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கரூர் அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால முன்ஜாமீன் மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் கடந்த 4 - ம் தேதி தள்ளுபடி செய்தார். அதேபோல், நேற்று மற்றுமொரு முன்ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இரண்டு தரப்பிலும் நடைபெற்ற இந்த விவாதங்களை விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்ற இளைஞர் லைவ்வாக (வீடியோ கால்) வீடியோ அனுப்பிக் கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த நீதிமன்ற ஊழியர்கள் தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வை வீடியோ எடுத்த அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற எழுத்தர் அளித்த புகாரின் அடிப்படையில் வீடியோ எடுத்த தமிழினியனை தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

