கதவை மூடும் தனியார் பால் நிறுவனங்கள்... கலக்கத்தில் பால் விவசாயிகள்!
தமிழ்நாட்டில் லிட்டருக்கு. ரூ. 5 வரை பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் குறைத்துள்ளதால் விவசாயிகளுக்கு மிக கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாமலேயே பால் கொள்முதலையும் நிறுத்தியுள்ளார்கள். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, "தமிழ்நாட்டில் தினசரி 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் 33 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. அதாவது மொத்த உற்பத்தியில் 15% மட்டுமே. மீதமுள்ள 85 சதவீத பால் உற்பத்தியை 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றன.
தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் கிடைக்கும்போது விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கும் கொடுப்பதில்லை, விலையும் கூடுதலாக கொடுப்பதில்லை. ஆனால், தற்சமயம் பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது என்ற காரணத்தை சொல்லி கொள்முதல் விலையை குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றன.

தமிழ்நாட்டின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவினுக்கு மட்டுமான அமைச்சராகவே செயல்பட்டு வருகிறார், பால்வளத்துறையும் அதே அடிப்படையில் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 85% பாலை கொள்முதல் செய்து வரும் தனியார் நிறுவனங்கள், தற்போது கொள்முதல் விலையை குறைத்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தனியார் நிறுவனங்களை அழைத்து எச்சரிக்க வேண்டும். குறைக்கப்பட்ட பால் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாட்டில் உள்ள 20 லட்சம் பால் விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களையும் தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு இல்லாமல் மூடி வருகின்றன.
தமிழக முதல்வரும், பால்வளத்துறை அமைச்சரும், பால் வளத்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான வாழ்வாதார சிக்கலில் உள்ள 20 லட்சம் பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை, தலைமைச் செயலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

பால் விவசாயிகளிடம் விசாரித்தபோது, "லிட்டருக்கு 1 ரூபாயிலிருந்து 5.50 ரூபாய் வரை தனியார் பால் நிறுவனங்கள் விலையை குறைச்சிருக்கு. தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பால் பவுடர் விற்பனையும், ஏற்றுமதியும் பாதிச்சிருக்காம். அதனால, விலையை குறைச்சிருக்கோம்னு சொல்றாங்க" என்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

