Happy Teeth: பற்களின் நடுவே இடைவெளி இருந்தால் பணம் சேருமா?

சிலருக்கு பற்களுக்கு நடுவில் இடைவெளி இருப்பதைப் பார்த்திருப்போம். அதற்கு என்ன காரணம், இடைவெளி இருந்தால் அதிர்ஷ்டம் வருமா என்பது போன்ற பல்வேறு பொதுவான சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி. பற்களுக்கு நடுவில் இடைவெளி இருப்பதை மருத்துவச் சொற்களில் டையஸ்டிமா (Diastema) என்பார்கள்.

முன்பற்களில் மட்டுமல்லாமல், கீழ் முன்பற்களிலும், பிற முன்பற்களின் இடையேயும் இடைவெளி இருக்கலாம்.

பெரும்பாலும் பலருக்கு முன்வரிசையில் உள்ள இரண்டு பெரிய பற்களுக்கு இடையில் இருக்கும். இதை Midline Diastema என்பார்கள். முன்பற்களில் மட்டுமல்லாமல், கீழ் முன்பற்களிலும், பிற முன்பற்களின் இடையேயும் இடைவெளி இருக்கலாம். பெரும்பாலும் மேல் பற்களின் நடுவில்தான் அதிகமானோர்களுக்கு இடைவெளி இருக்கும்.

உதடுகள் ஈறுகளுடன் இணைந்து இருப்பதற்கு ஒரு தசை (Frenum) உதவுகிறது. மேல் உதட்டையோ கீழ் உதட்டையோ விரல் வைத்து லேசாக இழுத்துப் பார்த்தால் அந்தத் தசையின் மெலிவான அடுக்கைப் பார்க்க முடியும். அந்தத் தசையானது இருக்கும்போது சிலருக்கு அதனருகில் இருக்கும் பற்கள் நகர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல வராது.

முன்பற்களில் மட்டுமல்லாமல், கீழ் முன்பற்களிலும், பிற முன்பற்களின் இடையேயும் இடைவெளி இருக்கலாம்.

பற்களில் கிளிப் (Braces) போடுவதன் மூலம் அந்த இடைவெளியை நீக்க முடியும். கிளிப் போடுவதற்கு முன்பாக குறிப்பிட்ட தசையை நீங்கும் சிறிய அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அதைச் செய்து தசையை அகற்றினால்தான் பற்களில் போடப்படும் க்ளிப் சரியாகப் பொருந்தும். மேலும் தசையை நீக்கவில்லை என்றால் கிளிப்பை நீக்கிய பிறகு மீண்டும் அந்த இடைவெளி உருவாகும்.

தசையை நீக்கிவிட்டு க்ளிப் போடும்போது இயற்கையாகவே பற்கள் நகர்ந்து இடைவெளி நீங்கிவிடும். சில மாதங்கள் க்ளிப் அணிந்திருந்தாலே இதற்குத் தீர்வு கிடைத்துவிடும். பற்களில் ஏற்படும் இடைவெளிக்கு இதுதான் மிகச்சிறந்த சிகிச்சையும்கூட. அறுவை சிகிச்சை வேண்டாம் என்பவர்களுக்கு, Veneering என்ற சிகிச்சை அளிக்கப்படும். பற்களை அளவெடுத்து அதற்கு மேல் செராமிக் பூச்சு செய்யப்பட்ட லேமினேஷன் செய்யப்படும். இது பற்களின் இடைவெளியை மறைத்துவிடும்.

பற்களில் கிளிப் (Braces) போடுவதன் மூலம் அந்த இடைவெளியை நீக்க முடியும்.

மிகச்சிறிய இடைவெளிதான் இருக்கிறது என்றால் பல்சொத்தையை நீக்கிவிட்டு பல்லை அடைப்பதுபோல இந்த இடைவெளியையும் அடைத்துவிடலாம். பற்களின் இயற்கையான நிறத்திலேயே அதனை அடைக்கவும் முடியும்.

உணவு சிக்குமா?

முன் இரண்டு பெரிய பற்களில் இடைவெளியில் உணவுத்துகள் சிக்குவதற்கு வாய்ப்பில்லை. பக்கவாட்டில் உள்ள பற்களில் இடைவெளி இருந்தால் சிலருக்கு உணவு சிக்கலாம்.

இது பார்ப்பதற்கு வெளியே தெரியும் பகுதி என்பதால் சாதாரண பிரஷ்ஷிங், வாய்க் கொப்பளிப்பது மூலமாகவே சிக்கும் உணவுத்துகளை நீக்கிவிடலாம். மிக அரிதாக சிலருக்கு பின்பக்க பற்களின் நடுவே இடைவெளி இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் பற்கள் ஆரோக்கியத்தை சரியாகப் பின்பற்ற வேண்டும். அந்த இடைவெளியில் உணவுத்துகள்கள் சிக்கும் பிரச்னை இருந்தால் அவர்களுக்கு பல் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது.

Dr. Suresh Velumani

சிகிச்சை அவசியமா?

சிலருக்கு பற்களில் இடைவெளியுடன் இருக்கும் தோற்றம் மிகவும் பிடிக்கும். இயற்கைப் பற்களை இழந்து செயற்கைப் பற்களைப் பொருத்தும்போதுகூட பழையது போல இடைவெளியுடன் பல் வேண்டும் என்பார்கள். பற்களின் நடுவே இடைவெளி இருந்தால் கட்டாயம் சிகிச்சை எடுக்க வேண்டும், இடைவெளியை நீக்க வேண்டும் என்பது கிடையாது. இது முழுக்க முழுக்க அழகியல் சார்ந்த விஷயம். தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இடைவெளியை நீக்க வேண்டும் என்று நினைத்தால் சிகிச்சை எடுக்கலாம்.

பெற்றோருக்கு பற்களின் நடுவில் இடைவெளி இருந்தால் சில நேரங்களில் பிள்ளைகளுக்கும் அப்படி ஏற்படலாம். ஆனால், பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு கட்டாயம் இடைவெளி ஏற்படும் என்றும் சொல்ல முடியாது.

அதிர்ஷ்டசாலியா? பணம் சேருமா?

பற்களின் நடுவே இடைவெளி விழுவது என்பது உடலியல் (Physiology) சார்ந்த ஒரு விஷயம். எனக்குப் பிடித்த ஹீரோவுக்கு பற்களில் இடைவெளி இருக்கிறது. எனக்கும் அதே போல மாற்ற வேண்டும் என்று சிலர் கேட்பார்கள், சிலர் பற்களில் இடைவெளி இருந்தால் நிறைய பணம் சேரும், அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். இதெல்லாம் நம்பிக்கைகள்தானே தவிர, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயம் அல்ல.

பற்களின் நடுவே இடைவெளி விழுவது என்பது உடலியல் (Physiology) சார்ந்த ஒரு விஷயம்.

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.