ரூ.3,000 மானியம்... தென்னந்தோப்பு, பழத்தோட்டத்தில் பசுந்தீவனத்தை பயிரிட்டு வருமானம் பார்க்கலாம்!
தீவன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அறிவித்துள்ளது.
பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம், ஒரு ஏக்கருக்கு ரூ.3,000/- வீதம் அரசு மானியம் பெற்று பயனடையலாம்.
தமிழகத்தில், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பழந்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.
நிபந்தனைகள் என்ன?
பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், சொந்தமாக கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். தங்களுடைய சொந்த நிலத்தில் பாசன வசதியுடன் (குறைந்தபட்சம் 0.5 ஏக்கர்) பராமரிக்கும் அல்லது வளர்க்கப்படும் தோட்டப்பயிர்கள் (அ) பழத்தோட்டங்களின் இடையே ஊடுபயிராக தீவனப்பயிர் வளர்க்க வேண்டும்.

இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிர் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நீர்பாசன வசதி/ அடுத்தடுத்து பயிரிடுவதற்கு பாசன வசதி உடைய ஒரு விவசாயிகளுக்கு 1 ஹெக்டேர் வரை வழங்கப்படும்.
திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை!
பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள், குறிப்பாக திட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் பட்டியலினத்தவர்/ பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில், நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர்களை உற்பத்தி செய்து வழங்கலாம். தேவைக்கு அதிகமாக உள்ள உபரி தீவனப்பயிர்களை, நிலமற்ற கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருமானம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு இதில் முன்னுரிமை தரப்படும்.

பசுந்தீவனப் பயிரை ஊடுபயிரிடும் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெறலாம். உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் பசுந்தீவன உற்பத்தி குறித்த அறிவிப்பினை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

