தன்னுடைய சம்பளத்தில் 600 பள்ளி மாணவர்களுக்கு உதவும் அதிகாரி: உதவிக்குப் பின்னால் இப்படியொரு சோகமா?!
பெங்களூருவில் அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் லோகேஷப்பா. இவர் 2019 மார்ச் 5 அன்று கப்பன் பார்க் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபுளாக பணிபுரிந்து வந்த சமயத்தில் அவரின் மனைவி சுதாமணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த போன் காலில் அவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது. சிவாஜிநகரில் இருந்த போலீஸ் குவாட்டர்ஸ் தீப்பிடித்து எரிய, உள்ளே இருந்த அவர்களுடைய மூன்று வயது மகள் ஹர்ஷாலி தீ விபத்தில் சிக்கியிருக்கிறார்.
மீட்கப்பட்ட அவர்களின் மகளை தூக்கிக் கொண்டு விக்டோரியா மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இந்தச் செய்தி அவரின் இதயத்தை உலுக்கியது. மீண்டு விடுவாள் என்று நினைத்தபோதும் எட்டு நாள்களுக்குப் பிறகு மார்ச் 13 அன்று பிஞ்சு உடல் வலி தாங்க முடியாமல் உலகை விட்டுப் பிரிந்தது.
இந்தத் துயரத்தை யாராலும் எளிதில் கடந்து விட முடியாது. ஆனால், தன் மகள் இருந்திருந்தால் அவளுக்கென்று பள்ளியில் சேர்க்க அவளின் தேவையைப் பூர்த்தி செய்ய செலவாகுமல்லவா… அந்தத் தொகையை நான் மற்ற குழந்தைகளுக்குத் தருகிறேன் என்று லோகேஷப்பா முடிவெடுத்தார்.
தற்போது சிவாஜிநகர் பெண்கள் காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் பள்ளிச் செலவுகளுக்குக் கொடுக்கிறார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் எனப் படிப்புக்குத் தேவையான பொருள்களுக்குச் செலவு செய்கிறார்.
மாணவர்களின் வருகை குறையும், தொலைதூர பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்த உதவியைச் செய்து வருகிறார். முதலில் ஒரு பள்ளியில் இந்த உதவியைச் செய்து வர, தற்போது ஆறு பள்ளிகளில் உள்ள சுமார் 600 மாணவர்கள் இவரால் பயன்பெற்று வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் லோகேஷப்பாவின் மனைவியும் தன் ஆசிரியர் வேலையை விடுத்து, மகளின் பெயரில் என்ஜிஓ ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
``இன்னும் பல கிராமங்களில் கல்வியின் முக்கியத்துவம் குறைவாக மதிப்பிடப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்திற்காகவே பள்ளிக்குச் செல்கிறார்கள். அரசாங்கம் பாடநூல்களை வழங்கும்போது, கூடவே நோட்டு புத்தகங்களையும் பிற பொருள்களையும் வழங்க வேண்டும் என்று லோகேஷப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

