Bajaj Freedom: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய பஜாஜ் - மைலேஜ் எவ்வளவு தெரியுமா?
ஒரு ஸ்விட்ச்சில் பெட்ரோல் ஆப்ஷனை சிஎன்ஜியாக மாற்றிக்கொள்ளலாம் என்பது நம்ப முடிகிறதா? இந்த சிஎன்ஜி பைக் 330 கிமீ ரேஞ்ச் தரும் எனச் சொல்லப்படுகிறது.
டூ-வீலர் பைக் விற்பனையில் தனியிடம் பிடித்துள்ள பஜாஜ் உலகின் முதல் CNG பைக்கை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பஜாஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாற்று எரிபொருளுக்கான தேடல்
க்ரூட் ஆயில் தட்டுப்பாடு மற்றும் உலகம் முழுவதும் அரசாங்கங்கள் சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிற நிலையில் மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவின் ஃபிளாக்ஷிப் டூ-வீலர் தயாரிப்பாளரான பஜாஜ் ஒரு ஸ்விட்ச்சில் பெட்ரோலில் இருந்து சிஎன்ஜியாக மாற்றிக்கொள்ளும் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஃப்ரீடம் 125 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கில் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ CNG டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இதில் ரிசர்வ் பயன்பாட்டுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.


இன்ஜின் எப்படி இருக்கு?
ஃப்ரீடம் 125 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஜின் 9.5 பிஎஸ் ஆற்றலையும் 9.7 என்எம் டார்க்கையும் கொடுக்கிறது. 125சிசி இன்ஜின் எரிபொருளுக்காக 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ CNG டேங்க் உள்ளது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் சேர்த்து 330 கி.மீ. தொலைவு வரை மைலேஜ் கொடுக்கும்.
CNG டேங்க் பாதுகாப்பாக இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கசிவோ அழுத்தத்தால் மாற்றமோ ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காக டிரக்கை பயன்படுத்தி ரன்-ஓவர் சோதனை உட்பட 11 பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சிஎன்ஜி - சுற்றுச்சூழலுக்கும் வாலட்டுக்கும் சேஃப்டி
சிஎன்ஜியைப் பயன்படுத்துவதன் மூலம் பைக்குக்காகும் செலவுகளை 50% வரை குறைக்க முடியும் என்று பஜாஜ் கூறுகிறது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ.75,000 வரை சேமிக்கலாம் என்கிறது பஜாஜ். பெட்ரோல் பைக்கோடு ஒப்பிடும்போது இந்த பைக் வெளியேற்றும் மாசும் குறைவு என கிளைம் செய்கிறார்கள். 26% குறைவான கார்பன் டை ஆக்சைடு (CO2) 85% குறைவான மீத்தேன் அல்லாத ஹைட்ரோ கார்பன் (NMHC) மற்றும் 43% குறைவான நைட்ரஜன் ஆக்ஸைட் (NOX) வெளியாகிறது.
ஃப்ரீடம் 125 பைக் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் உட்பட 3 வேரியண்டுகளில் 7 வண்ணங்களில் கிடைக்கிறது.

வலுவான டிரெல்லிஸ் பிரேம், மோனோஷாக் சஸ்பென்ஷன், சிஎன்ஜிக்கும் பெட்ரோலுக்கும் ஒரே டேங்க் கவர், ஸ்டைலிங், எல்இடி கன்சோல் என அசத்தும் இந்த பைக் இந்திய ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீயில் குறிப்பிடத்தகுந்த அறிமுகமாகப் பார்க்கப்படுகிறது.

சரி, விலையைச் சொல்லுங்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்திய மத்தியதர வர்க்கத்தை மனதில் வைத்து ரூ.95,000 முதல் ரூ.1,10,000 வரை எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

