உங்க Aadhaar, PAN, Password விவரங்கள் திருடு போகலாம்...! - எச்சரிக்கும் Local Circles ஆய்வறிக்கை?!

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ (Local Circles) எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஊடகத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நிதித்தரவுகளின் (Financial Data) பாதுகாப்பு பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அவர்களின் ஆய்வின்படி, 17% இந்தியர்கள், தங்களுக்குத் தேவையான முக்கிய பாஸ்வேர்டுகளை, ஸ்மார்ட்போன் நோட்ஸ் மற்றும் கான்டாக்ட் லிஸ்ட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இப்படி சேமித்து வைத்துள்ள மிக முக்கியமான விவரங்களை யாரும் எளிதில் அணுகிவிடலாம். இதனால்தான் ஒருவருடைய வங்கி கணக்கு விவரங்களும் மற்றும் அதற்கு தேவையான பாஸ்வேர்டுகள் எளிதில் திருட முடிகிறது என்றும், இந்தியாவில் 47% குடும்பங்கள் எதாவது ஒரு வகையில் நிதி மோசடிக்கு ஆளாகி விடுகின்றனர் என்றும் லோக்கல் சர்கிள் ஆய்வு சொல்கிறது.

Cyber Attack (Representational Image)

இந்தியா முழுவதும் 367 மாவட்டங்களில் இருந்து 48,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிதி மோசடிகள் தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு சொல்லும் முடிவு என்னவெனில், 34% மக்களும், தங்களுடைய பாஸ்வர்ட் மற்றும் மற்ற வங்கி கணக்கு பற்றிய விவரங்களை, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எளிதில் பகிர்ந்து விடுகின்றனர். இதனாலும் அவர்கள் நிதி மோசடிக்கு ஆளாகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் ஏறக்குறைய 53% மக்கள், இதனால் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு, யூ.பி.ஐ மற்றும் வங்கி கணக்கு மோசடிகள் அதிகளவில் நடைபெற்றுள்ளது.

நிதி மோசடிகள் எதனால் நிகழ்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்காக மற்றொரு கணக்கெடுப்பையும் லோக்கல் சர்கிள் நிறுவனம் நடத்தினர். அதன்படி, ஒருவரின் தனிப்பட்ட அடையாள ஆவணங்களின் பகிர்வு தற்போது அதிகமாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. 97% பேர் தங்களுடைய ஆதார் விவரங்களையும், 68% பேர் பான் கார்டையும், 38% பேர் ஓட்டுனர் உரிமத்தையும், பல்வேறு விண்ணப்பங்கள் மற்றும் முன்பதிவுகளுக்குப் பகிர்ந்துக் கொண்டதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, தனிப்பட்ட அடையாள ஆவணங்களை பகிரும்போது அதிகளவில் திருட்டு மற்றும் தவறான பயன்படுத்துதலுக்கு அது வழிவகுக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் வங்கி மோசடிகள் 300% அதிகரித்துள்ளதாகவும், டிஜிட்டல் மோசடிகள் 708% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக இருந்தாலும், 10-ல் ஆறு மோசடி சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும், 10-ல் ஒன்பது சிறிய மோசடிகள், அதாவது ரூ. 1000- க்கு குறைந்து நடைபெறக்கூடிய சம்பவங்கள், அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றடைவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இம்மாதிரியான மோசடிகள் மேலும் நடப்பதை தவிர்ப்பதற்கு இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் எடுத்துள்ள இந்த கணக்கெடுப்பை உடனடியாக ரிசர்வ் வங்கி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY)மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திடம் (Ministry of Consumer Affairs) உடனடியாக தெரியப்படுத்தி, மக்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவும், இதற்கு எதிராக நடக்கக்கூடிய மோசடிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்க பரிந்துரைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.