`படத்தில் நடித்த பெண்களுக்கு கொலை மிரட்டல்’ - Hamare Baarah திரைப்பட சர்ச்சையும் தடையும்!

பிரபல பாலிவுட் இயக்குநர் கமல் சந்திரா இயக்கத்தில், அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடிப்பில் உருவான ஹமாரே பாரா (Hamare Baarah) திரைப்படத்தின் டிரெய்லர், சில நாள்களுக்கு முன் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தத் திரைப்படம் வெளியான சூழலில், தற்போது கர்நாடக அரசு ’ஹமாரே பாரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. இந்தத் திரைப்படத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Hamare Baarah

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓர் இஸ்லாமிய உறுப்பினர் உள்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்து, திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

திரைப்படத்தை ஆராய்ந்த குழுவினர், சர்ச்சைக்குரிய இரண்டு வசனங்களை நீக்கிவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம் என பரிந்துரைத்தனர். இதனையடுத்து, குறிப்பிட்ட வசனங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னதாக ஹம் தோ ஹமாரே பராஹ் என்று பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படம், பின்னர் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உத்தரவின்படி, ஹமாரே பாரா (Hamare Baarah) என மாற்றப்பட்டது. திரைப்படம் வெளியாக ஜூன் 14 -ம் தேதிக்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் திட்டமிட்டபடி ஜூன் 7-ம் தேதியே வெளியிட்டனர்.

இதனையடுத்து, இந்தத் திரைப்படம் இஸ்லாமிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது எனவும், இதனை வெளியிட தடைவிக்க வேண்டும் என கர்நாடக மாநில சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ் ஹமாரே பாரா திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

Banned

அந்த உத்தரவில், ’தயாரிப்பாளரும், இயக்குநரும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருக்கும் வாசகங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு வன்முறையான கருத்துகளை திரைப்படத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அவமதிக்கும் வகையில் சிததிரிக்கும் காட்சிகள், அதே வேளையில் மற்ற சமூகத்தினர்களுக்கிடையே வன்முறையைத் தூண்டிவிட முயற்சிக்கும் காட்சிகளும் உள்ளன.

இந்தத் திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால் மாநிலத்தில் அமைதி பாதிக்கப்படும். மேலும், மதக் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும்வரை கர்நாடகத்தில் திரையிடக்கூடாது’ என அம்மாநில அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.

Hamare Baarah திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்த நடிகர் மனோஜ் ஜோஷி, "எந்த மதத்தையும் குறிவைத்து இத்திரைப்படம் எடுக்கப்படவில்லை. எந்த ஒரு சமூகத்திலும் பெண்களை அவமரியாதை செய்யக்கூடாது என்பதுதான் திரைப்படத்தின் கருத்து. பெண்களுக்கான கல்வி, வளர்ப்பு, வேலைவாய்ப்பு, சுயமரியாதை, அதிகாரமளித்தல் மற்றும் நாட்டின் மக்கள் தொகை உள்ளிட்டவற்றை பேசும் இந்தத் திரைப்படத்தை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

Hamare Baarah

நடிகர் அன்னு கபூர், ’’ஹமாரே பாரா திரைப்படத்தின் எழுத்தாளர் ஓர் இஸ்லாமியர். இந்த படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் கண்டு அவர் மிகவும் வருத்தப்படுகிறார். இந்தப் படத்தில் நடித்த பெண்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. படத்தில் நடித்த நடிகர்களின் வீடுகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் சிலர் வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக முன்னெச்சரிக்கையாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.