சபரிமலை: தமிழகத்திலிருந்து ஒரு மாதத்துக்குச் சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே திட்டத்தின் முழு விவரம்!

கேரள மாநிலம், சபரிமலை சீசனையொட்டி, ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சபரிமலை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு தென்னக ரயில்வே எர்ணாகுளம் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில் சேவையை இயக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ராஜபாளையம் ரயில் பயணிகள் அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பேசினர்.

"சபரிமலை செல்லும் பக்தர்கள் நலன் கருதி, 30.11.23 முதல் 28.12.23 வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எர்ணாகுளம் முதல் காரைக்குடி வரை செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் வழியாக சபரிமலை சிறப்பு ரயில் சேவை இயக்கத் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சபரிமலை சிறப்பு ரயில் - ஃபைல் படம்

அதன்படி, எர்ணாகுளம் - காரைக்குடி சிறப்பு ரயில் (06019), எர்ணாகுளத்திலிருந்து அதிகாலை 4:45 மணிக்குக் கிளம்பி, புனலூர், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, ராஜபாளையம் வழியாக மாலை 7 மணிக்குக் காரைக்குடி சென்று சேரும். மறுமார்க்கமாக, காரைக்குடி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06020) காரைக்குடியிலிருந்து இரவு 23:30 மணிக்குக் கிளம்பி மறுநாள் பகல் 11.40க்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில் மூலம் அச்சன்கோவில், ஆரியங்காவு, தென்மலை அருகில் உள்ள குளத்துப்புழா, புனலூர் - பம்பை, எருமேலி மற்றும் சபரிமலை ஆகிய ஐயப்பன் சந்நிதிகளுக்கு பக்தர்கள் எளிதில் சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள முடியும்.

ஆரியங்காவு - ஃபைல் படம்

கடந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு எர்ணாகுளம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் திங்கட்கிழமை தோறும் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டும் அதேபோல சபரிமலை சீசனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சனி மற்றும் திங்கட்கிழமையில் ஏற்கெனவே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருவதால், தற்போது கூடுதல் அம்சமாக வியாழக்கிழமைதோறும் காரைக்குடி - எர்ணாகுளம் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கத் தென்னக ரயில்வே முன்வந்துள்ளது. இந்த நிலையில், ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த ரயில் நிரந்தர ரயிலாக தினசரியும் எர்ணாகுளம் - ராமேஸ்வரம் இடையே இயக்கவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.