ஷீர்டி சாயிபாபா: `கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்த பக்தர்கள் வருகை- கோயிலில் ரூ.900 கோடி வருமானம்!

மகாராஷ்டிராவில் உள்ள ஷீர்டி சாயிபாபா கோயில் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகும். வார விடுமுறை நாள்களில் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பக்தர்களின் வருகைக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் கோயிலுக்கு வரும் உண்டியல் வருமானமும் வெகுவாகக் குறைந்தது. ஆனால் 2022-23 - ம் ஆண்டில் கோயில் உண்டியல் வருமானம் 900 கோடியை தாண்டியிருக்கிறது. இது குறித்துக் கோயில் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜாதவ் கூறுகையில், "கொரோனாவிற்கு முன்பு கோயிலுக்கு ஆண்டுக்கு 800 கோடி அளவுக்குக் காணிக்கையாக கிடைத்தது. கொரோனா காலத்தில் 2021,22 - ம் ஆண்டுகளில் கோயில் காணிக்கை வருமானம் 400 கோடியாகக் குறைந்தது.

ஷீர்டி சாயிபாபா

கொரோனா காலத்தில் அதிகமான நாள்கள் கோயில் மூடப்பட்டு இருந்தது. 2022-23-ம் ஆண்டில் தினமும் சராசரியாக 60 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதல் கடந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் உண்டியல் காணிக்கை மட்டும் 200 கோடி ரூபாய் அளவுக்குக் கிடைத்தது.

இது தவிர பக்தர்கள் உண்டியலில் போடும் தங்க ஆபரணங்கள், ஆன்லைன் மூலமும், உண்டியல் அல்லாமல் நேரடியாகவும் பக்தர்கள் அலுவலகம் மூலம் காணிக்கை செலுத்தியுள்ளனர். இது தவிர கோயிலுக்கு பல்வேறு வங்கிகளில் 2,500 கோடி அளவுக்கு வைப்பு நிதி இருக்கிறது. இதன் மூலமும் வட்டி கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் அனைத்து வருமானத்தையும் சேர்த்து 900 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதியை மீண்டும் அதே வங்கிகளில் டெபாசிட்டாக வைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 800 கோடி ரூபாய் அளவுக்கு செலவாகி இருக்கிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு அதிகப்படியான செலவு பிடிக்கிறது. இது தவிர இரண்டு மருத்துவமனைகள் நடத்தி வருகிறோம். அதற்கும் அதிக அளவில் செலவாகிறது. மேலும் கோயில் நிர்வாகத்தில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். நான்கு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தையும் பராமரிக்க அதிக அளவில் செலவாகிறது" என்று தெரிவித்தார். சமீபத்தில் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவு தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டத்தையும் ஷீர்டி கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.