மதுரை மீனாட்சியம்மன் தெப்பத் திருவிழா: கடல் போன்ற கூட்டத்தில் கொண்டாட்டம்!

மதுரையில் மிக விமர்சையாக நடந்த மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம் வந்து மைய மண்டபத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சத்தால் வர முடியாத மக்கள், இந்தமுறை திருவிழாவுக்குக் கடல் போல் திரண்டு வந்திருந்தனர்.

சுவாமி-அம்மன்

மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத்திருவிழாவுக்காகக் கடந்த மாதம் 24 -ம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் காலையும் மாலையும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்மம், குதிரை, ரிஷபம், யாளி உள்ளிட்ட வாகனங்களில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்தனர்.

தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை சிந்தாமணி கதிரறுப்பு மண்டபத்தில் நேற்று கதிரறுப்புத் திருவிழா நடந்தது. அதைத்தொடர்ந்து தைப்பூச பௌர்ணமி தினத்தில் தெப்பத்திருவிழா கொண்டட்டமாகத் தொடங்கியது.

தெப்பத்திருவிழா

மீனாட்சியம்மன் அவுதா தொட்டி வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி மதுரையில் விளக்குத்தூண் கீழவாசல் வழியாக காமராஜர் சாலை வழியாக மக்களுக்கு அருள்பாலித்தபடி வந்து தெப்பக்குளம் அருகிலுள்ள மரகதவள்ளி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்தனர்.

மாலை மைய மண்டபத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலித்துப் பின்பு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒருமுறை வலம் வந்தனர். இந்த விழாவால் தெப்பக்குளம் பகுதியே ஒளிமயமாகத் திகழ்ந்தது.

மின்னொளியில் ஜொலிக்கும் தெப்பம்

தெப்பத்திருவிழாவைக் காணப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

தெப்பத்திருவிழாவில் சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் வரும்போது மீனாட்சியம்மன் மட்டும் வெள்ளி சிம்மாசனத்துடன் அவுதா தொட்டியில் வருவதற்கு என்ன காரணம் என்று கோயில் ஊழியர்களிடம் கேட்டபோது,

"ஹவ்தாஜ் என்ற அராபிக் வார்த்தை மருவி இந்தியில் ஹவ்தாவாக மாறிவிட்டது. அதற்கு அம்பாரி என்று பொருள். தொட்டிக்கும் இதே அர்த்தம் தான். மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா நாயக்க மன்னர் காலத்தில் ஏற்பட்டது. திருமலை நாயக்க மன்னர் இந்தத் தெப்பக்குளத்தை ஏற்படுத்தித் தன் பிறந்தநாளை முன்னிட்டு தெப்ப உற்சவத்தையும் ஏற்பாடு செய்தார். நாயக்கர்களுக்கு மீனாட்சி அம்மனின் ராஜ்ய பாரத்தின் மீதிருந்த பற்று காரணமாக நாயக்க மன்னர் பிறந்தநாளையொட்டி அம்பாரியில் ராணியாக மீனாட்சியை அமரச்செய்து புறப்பாடு நடத்தப்படுகிறது

சுவாமி- அம்மன்

இந்த ஓர் உற்சவத்தில் மட்டும்தான் சுவாமியைவிட அம்பாள் அதிகப்படியான ஒரு வாகனத்தில் உலா வருகிறார். அதாவது இருவருக்கும் வெள்ளி சிம்மாசனம்தான். ஆனால், அம்மனுக்கு சிம்மாசனத்தின் மேல் கூடுதலாக ஒரு அவுதா அமைந்துள்ளதன் மூலம் இந்த விழாவில் அன்னை மீனாட்சி பிரதானப்படுத்தப்படுகிறார்" என்றனர்.

(படங்கள் : த.லீனா, அ.மணிகண்டன்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.