Scene: 12 வருஷத்துக்குப் பிறகு நான் நடிக்கும் தமிழ் படம் இது! - சீன் பட விழாவில் நஸ்ரியா
சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பேரழகன் படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இப்படத்தின் நிகழ்வு துபாயிலுள்ள ஒரு மாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நஸ்ரியா பேசுகையில், " 12 வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி இயக்குநர் ஜித்து மாதவன்.
என்னுடைய சினிமா பயணத்தில் நான் கடந்து வந்த மிகவும் அற்புதமான அனுபவங்களில் ஒன்றாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருந்தது. சூர்யா சார், நஸ்லென் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நவம்பர் 6-ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று சீன் திரைப்படத்தைப் பாருங்கள். படம் அடிப்பொலியாக வந்திருக்கிறது.

நாங்கள் சினிமாக்களை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே சூர்யா சாரைக் பார்த்து வளர்ந்திருக்கிறோம். நாங்களும் இதுபோன்று தீவிரமாக சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு சூர்யா சாரும் ஒரு முக்கியக் காரணம்.
அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன் நேரத்தைச் செலவழித்து இந்தப் படத்தில் பணியாற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி." என்றார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


