Economic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்!

பொருளாதார D-Day - ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம் இது. கடைசி அஸ்திரமாகக் கூட இருக்கலாம்.

நேற்று (அமெரிக்க நேரப்படி) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஒப்பந்தம் ஒன்றை எட்ட என்னை விடச் சிறந்த வாய்ப்பை வேறு யாருமே கொடுத்திருக்க முடியாது. ஆனால், துரதிஷ்டவசமாக, அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.

அதனால், எந்தவொரு நாட்டிற்கும் எதிராக இதுவரை எடுக்கப்படாத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை இன்று நான் அறிவிக்கிறேன்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஈரானுக்கு எந்த வகையிலாவது வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிதியமைப்புகள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் ‘மிகப் பெரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்பதையும் இன்று நான் அறிவிக்கிறேன்.

எண்ணெய் கடத்தல், ஸ்வாப் லைன்கள், பணப் பரிமாற்றங்கள், செலாவணி மையங்கள், கப்பல் பதிவுகள், போலி நிறுவனங்கள் என அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒரு பொருளாதார டி-டே (Economic D-Day) ஆக இருக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தொடங்கிய போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியைக் கொன்றுவிட்டால் போதும். அதன் பிறகு, தாங்கள் நினைத்த ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது தானாக நடந்துவிடும் என்று கணக்குப் போட்டன அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.

ஆனால், காமேனியின் மறைவிற்குப் பிறகு, விரைவாக அவரது இடம் அவரது மகன் மொஜ்தபா காமேனியால் நிரப்பப்பட்டது.

ஈரானின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலைவர்களும் மிகவும் வலுவாகவே இருந்தனர்... இருக்கின்றனர். ஈரானின் தாக்குதல்களும் பலமாக இருக்கின்றன.

ஏவுகணை
ஏவுகணை

பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகளையும், ராணுவத் தளவாடங்களையும் அமெரிக்கா பயன்படுத்தினால், ஈரான் சில ஆயிரம் டாலர் மதிப்பிலான ட்ரோன்களைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குப் பதிலடியைத் தருகிறது.

இந்தத் தாக்குதலால் அமெரிக்காவின் கையிருப்பில் இருக்கும் ஆயுதங்கள் தான் குறைகிறதே தவிர, ஈரானை முழுவதுமாக அடிபணிய வைக்க முடியவில்லை.

சமீபத்தில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியின் படி, “ஈரான் போரின் தொடக்கத்திலேயே அமெரிக்கா 850-க்கும் மேற்பட்ட டோமாஹாக் (Tomahawk) க்ரூஸ் ஏவுகணைகள், 1,000-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் (Patriot) மற்றும் தாட் (THAAD) ஏவுகணைகள், மற்றும் 1,300-க்கும் மேற்பட்ட ராணுவ தந்திர பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.

ATACMS ரக தந்திர ஏவுகணைகளின் இருப்பே தற்போது அமெரிக்காவிடம் இல்லை”.

இப்போது இந்த எண்ணிக்கைகள் மேலும் கூடியிருக்கும்.ஆனாலும், அமெரிக்க அரசு கையிருப்பில் இருக்கும் ஆயுதங்கள் குறைந்திருக்கிறது என்பதை ஓபனாக ஒப்புக்கொள்ளவில்லை.

அமெரிக்காவில் ஆயுத இருப்பு குறைகிறது என்றால், அது அந்த நாட்டின் அச்சுறுத்தலாகக் கூட மாறலாம்.

அமெரிக்காவே திணறுகிறது என்றால், ஈரான் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

ஈரான்
ஈரான்

இருந்தும், அது குறைந்த விலையிலான ட்ரோன்கள், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் மறைமுக உதவியால் ஓரளவு சமாளித்து வருகிறது.

இந்தப் போருக்கு முன்பு, அமெரிக்காவில் ஒரு கேலன் (Gallon) பெட்ரோல் 2.98 டாலருக்கு விற்பனையானது. ஆனால், இப்போது அதன் விலை உயர்ந்துள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் 2.4 சதவிகிதம் பணவீக்கம் இருந்தது. ஆனால், இப்போது அது 3.4 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

இதனால், அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி வருகிற நவம்பர் மாதம் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு (ட்ரம்பின் கட்சி) பாதகமாக முடியுமோ என்று சொந்தக் கட்சியினரே நினைக்கின்றனர்.

முக்கியமாக, ஈரான் போருக்கு எதிராக அமெரிக்காவின் செனட்டில் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

மேலும் ட்ரம்ப் மேலே குறிப்பிட்டுள்ள பதிவில், “ஈரானின் அச்சுறுத்தலைத் தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்குத் தேவைப்படும் இந்த முயற்சியில் எங்களின் அனைத்து நட்பு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டும்” என்கிற வரியை இணைத்திருக்கிறார்.

இதுவே ஈரானை அமெரிக்காவால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

மேலும், ட்ரம்பினால் ராணுவ ரீதியாகப் பணிய வைக்க முடியாமல், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு வந்திருப்பதே அமெரிக்கா மற்றும் ட்ரம்பின் பின்னடைவு என்று உலக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

us dollar - usd - அமெரிக்க டாலர்
us dollar - usd - அமெரிக்க டாலர்

சரி... ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் மட்டும், அந்த நாட்டைக் கட்டுப்படுத்திவிடலாமா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் பதில்.

ஈரானுக்குப் பொருளாதாரத் தடை ஒன்று புதிதல்ல.1979-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா ஈரான் மீது தடை விதித்துக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் பார்த்தால், 2018-ம் ஆண்டு, தன் முதல் ஆட்சிக்காலத்தில் ட்ரம்ப் ஈரான் எண்ணெய் மீதும் வங்கிப் பரிவர்த்தனைகள் மீதும் தடை விதித்தார்.

கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் ஈரான் சொத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது. இவை அமெரிக்காவின் வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட்களில் இருக்கின்றன.

அமெரிக்காவின் தரவின் படி, இந்தத் தடைகளுக்கு முன், ஈரான் ஒரு நாளுக்கு 2.231 மில்லியன் பேரல் எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்திருக்கிறது.

ஆனால், தடைக்குப் பின், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று பல நாடுகள் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டன. இதில் இந்தியாவும் அடங்கும்.

ஆனால், சீனா தொடர்ந்து ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துகொண்டேதான் இருந்தது... இருக்கிறது. எந்தத் தடையும் சீனாவையும், ஈரானின் வர்த்தக உறவையும் பிரிக்க முடியவில்லை.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

மேலும், சில நாடுகளும் மறைமுகமாக ஈரானிடம் வர்த்தகம் செய்துதான் வருகிறது.

ட்ரம்ப் தன்னுடைய பதிவிலேயே, “எண்ணெய் கடத்தல், ஸ்வாப் லைன்கள், பணப் பரிமாற்றங்கள், செலாவணி மையங்கள், கப்பல் பதிவுகள், போலி நிறுவனங்கள் என அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அந்த நாடுகளைத்தான்.

அமெரிக்காவால் தங்களது வர்த்தகம் பாதிக்கும் என்று ஈரான் தன்னுடைய வர்த்தகத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவதில்லை. அதனால், 2018-க்குப் பின்னான ஈரானின் தரவுகள் கிடைக்கவில்லை.

என்னதான் ஈரான் அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டாலும், உலக வர்த்தகத்திற்கு ஈரானுக்கு அமெரிக்க டாலர்கள் தேவை. அதைக் கருப்புச் சந்தை மூலம் பெற்றுவிடுகிறது ஈரான்.

ஹவாலா, ப்ரோக்கர்கள் நெட்வொர்க், ஷெல் கம்பெனிகள், பண்டம் பரிமாற்றும் வகை மூலம் டாலரைப் பெற்றுவிடுகிறது ஈரான். இதன் மூலம், அது மற்ற வணிகங்களுக்கு ஈரான் பயன்படுத்திக்கொள்கிறது.

இதனால், இந்தப் பொருளாதார D-Day-யாலும் ட்ரம்பால் ஈரானை வழிக்குக் கொண்டுவர முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.