செங்கல்பட்டு : மாமியாரைக் கொலை செய்த மருமகள் - சிக்கியது எப்படி?

செங்கல்பட்டில் பெரியநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பெருந்தேவி (61). இவரின் மகன் வெங்கடேசன் (34). அவரின் மனைவி இந்துஜா (28). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். செப்டம்பர் 13-ம் தேதி மாலை பெருந்தேவி, தன்னுடைய வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்தார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் மருமகள் இந்துஜா. அங்கு பெருந்தேவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த பெருந்தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்தும் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் பெருந்தேவியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கழுத்து நெரிக்கப்பட்டு பெருந்தேவி உயிரிழந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனால் பெருந்தேவியை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

மருமகள் இந்துஜா

போலீஸாரின் சந்தேகப் பார்வை மருமகள் இந்துஜா மீது விழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று குளியலறையில் மயங்கி கிடந்த மாமியார் பெருந்தேவியை நான்தான் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றேன் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது மாமியார் பெருந்தேவிக்கும் மருமகள் இந்துஜாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் என்ற தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. அதனால் மீண்டும் இந்துஜாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் மாமியார், குளியலறையில் விழுந்ததில் இறந்துவிட்டார் என்று கூறினார். அதைத் தொடர்ந்து பி.எம். ரிப்போர்ட் குறித்து இந்துஜாவிடம் போலீஸார் கூறியபோது அவரின் முகம் மா

றியது. அதன்பிறகே அவர் மாமியாரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் மருமகள் இந்துஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் கூறுகையில், ``மாமியார் பெருந்தேவிக்கும் மருமகள் இந்துஜாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மாமியார் மீது கடும் ஆத்திரத்திலிருந்திருக்கிறார் மருமகள் இந்துஜா. சம்பவத்தன்று குளியலறையில் மாமியார் பெருந்தேவி மயங்கி விழுந்ததும் அவரை அடித்து உதைத்திருக்கிறார் இந்துஜா. அதன்பிறகும் ஆத்திரம் தீராததால் மாமியாரின் கழுத்தை நெரித்திருக்கிறார். அதன்பிறகு தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் பிரேத பரிசோதனை (பி.எம்) ரிப்போர்ட்டால் மருமகள் இந்துஜா எங்களிடம் சிக்கிக் கொண்டார். ஆனால் விசாரணையின் போது கொலையை மறைக்க இந்துஜா கதறி அழுது நாடகமாடினார். ஆனால் அவரால் நீண்ட நேரம் நடிக்க முடியவில்லை. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து மாட்டிக் கொண்டார். தன்னுடைய அம்மாவை மனைவியே கொலை செய்த தகவல் தெரிந்ததும் காவல் நிலையத்திலேயே வெங்கடேசன் கதறி துடித்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். இந்தக் கொலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.