The Odyssey : 20 ஆண்டுகால கனவு; 91 நாட்கள் படப்பிடிப்பு - தி ஒடிஸி பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்!
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
இந்தச் சினிமா நோலனின் 20 ஆண்டுகால கனவு. சொல்லப்போனால், தி ஒடிஸி கதையைப் படமாக்க, ஹாலிவுட்டின் இயக்குநர்கள் பலரும் முயற்சித்திருக்கிறார்கள்.
இறுதியாக நோலன் அந்த முயற்சியை கையிலெடுத்து சாத்தியப்படுத்தித் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். இப்படம் முழுமையாகவே ஐமேக்ஸ் ஃபிலிம் கேமரா பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
இப்படிக் கேமராவிலிருந்து தொடங்கி தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் சவால்களை எதிர்கொண்டு, இப்படத்தை எடுத்திருக்கிறது படக்குழு.
இப்படம் பற்றிய சில முக்கியமான தகவல்களை இங்கு பார்ப்போமா....
1. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக இயக்கியிருந்த ஓப்பன்ஹைமர் திரைப்படம் 3 மணி நேரம், திரை நேரம் கொண்டிருந்தது. ஆனால், தி ஒடிஸி படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 52 நிமிடங்களுக்குள் நோலன் சுருக்கியிருக்கிறார். நீளத்தைக் குறைத்ததற்குப் பின்னால் தொழில்நுட்பக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இப்படம் முழுக்க முழுக்க 70mm IMAX ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஐமேக்ஸ் தியேட்டர்களில் உள்ள IMAX ப்ரொஜெக்டர் பிளேட்டுகளால் 3 மணி நேரத்திற்கு மேல் உள்ள ஃபிலிம் சுருள்களைத் தாங்க முடியாது. இதனால்தான் நோலன், படத்தொகுப்பில் படத்தின் நீளத்தை 3 மணி நேரத்திற்குள் குறைத்திருக்கிறார்.
2. தி ஒடிஸி திரைப்படம், நோலனின் 20 ஆண்டுகால கனவு. பிராட் பிட் நடித்த புகழ்பெற்ற டிராய் (Troy - 2004) திரைப்படத்தை முதலில் நோலன்தான் இயக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அவர் அப்படத்தை இயக்கவில்லை. அப்போதிருந்தே, இதுபோன்ற வரலாற்றுப் படத்தை எடுக்க வேண்டும் என்பது நோலனின் கனவாக இருந்தது. 20 வருடங்களுக்குப் பிறகு அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

3. நோலன் படங்களில் பின்னணி இசைக்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. இந்தத் திரைப்படத்தின் மூலம் கிறிஸ்டோபர் நோலன் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் எண்ட் கிரெடிட்ஸில் வரும் பாடலின் வரிகளை இவரே எழுதியுள்ளார்.
4. கிரீன் மேட் எதையும் பயன்படுத்தாமல் நிஜப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். கடற்கரையில் நடக்கும் காட்சிகளை, நடுக்கடலுக்குள் சென்றே படக்குழுவினர் ஷூட் செய்திருக்கிறார்கள். 115 அடி மரக்கப்பலை நடுக்கடலுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட அலைகளால் கப்பல் ஆடி, ஒரு மணி நேரத்திற்குள் பல நடிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படியான விஷயங்கள்தான் காட்சிகளின் எதார்த்தத்திற்கு உதவும் என அதனையும் நோலன் படம்பிடித்திருக்கிறாராம்.

5. எப்போதுமே திட்டமிட்ட நாட்களுக்குள்ளாகவே தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை நோலன் முடித்துவிடுவார். இப்படத்திற்கு பிரம்மாண்ட பட்ஜெட், 6 நாடுகளில் கடினமான வானிலைக்கு மத்தியில் படப்பிடிப்பு என 100 நாட்கள் ஷெட்யூல் போட்டிருக்கிறார் நோலன். ஆனால், திட்டமிட்ட நாட்களுக்குள்ளாகவே, அதாவது 91 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார். ஓப்பன்ஹைமர் படத்தையும் 57 நாட்களில் நோலன் முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதிக எடை கொண்ட அத்தகைய கேமராக்கள், பயங்கரமான சத்தத்தையும் எழுப்பக்கூடியவை. இதனால் நடிகர்கள் பேசும் வசனங்களை நேரடியாகப் பதிவு செய்ய முடியாது. இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஐமேக்ஸில் மட்டுமே எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்ட நோலனுக்காக மிகவும் எடை குறைவான, சத்தம் எழுப்பாத புதிய ஐமேக்ஸ் கேமரா தொழில்நுட்பம் உருவாக்கிக் தரப்பட்டிருக்கிறது.
7. நோலன் வழக்கம் போல இப்படத்திலும் கிராபிக்ஸைத் தவிர்த்திருக்கிறார். ஒடிசியஸின் கப்பல் புயலில் சிக்கும் காட்சிகளுக்காக, ராட்சத நீர் விசிறிகள் மற்றும் அலை உருவாக்கும் இயந்திரங்கள் கொண்டு நிஜக் கடலிலேயே ஆபத்தான முறையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதே போல சில ஃபேண்டஸி கதாபாத்திரங்களுக்காகப் பிரமாண்டமான அனிமேட்ரானிக்ஸ் பொம்மைகள் வைத்துப் படமாக்கியிருக்கிறார்.

8. முழுக்க முழுக்க இயற்கை ஒளியமைப்பை வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாய், கடலில் நடக்கும் இரவுக் காட்சிகளை 70mm IMAX கேமராவில் துல்லியமாகப் படம்பிடிக்க, பிரத்யேகமான ஃபிலிம் சுருள்கள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை வைத்துதான் இரவு நேரக் காட்சிகளையும் படக்குழுவினர் படம்பிடித்திருக்கிறார்கள்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


