FCRA 2026: ``சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு - மாணிக்கம் தாக்கூர்
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் (NGO), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்தல் சட்டம் (FCRA) கொண்டுவரப்பட்டது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்தல் (திருத்த) மசோதா 2026, வெளிநாட்டு நிதியைப் பெறுவது மற்றும் அந்நிதி மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களைப் நிர்வகிப்பதில் அரசுக்கு மேலும் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில், ``ஒன்றிய பாஜக அரசின் FCRA 2026 வெளிப்படைத்தன்மைக்கானது அல்ல; சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு! ஜனநாயக நாட்டின் தூண்களாக விளங்கும் சமூக அமைப்புகளையும் (NGOs), தொண்டு நிறுவனங்களையும் திட்டமிட்டு முடக்கும் நோக்கில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026 கொண்டுவந்துள்ளது.
இது வெளிப்படைத்தன்மைக்கான சட்டத்திருத்தம் அல்ல. மோடி - அமித் ஷா இரட்டையரின் நிர்வாக அதிகாரத்தைக் குவித்து, இந்திய அரசுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் இடையிலான உறவையே சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான நடவடிக்கையாகும். 2020 சட்டத்திருத்தம் மூலம் நிதி விநியோகத்தையும், நிர்வாகச் செலவுகளையும் முடக்கிய அரசு, தற்போது இந்த 2026 மசோதா மூலம் தொண்டு நிறுவனங்கள் கட்டியெழுப்பிய பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நிலங்களை நீதிமன்ற தலையீடின்றி அபகரிக்க வழிசெய்கிறது!
எண்கள் சொல்லும் கதை:
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடித் தரவுகளின்படி, FCRA பதிவுபெற்ற 52,000+ அமைப்புகளில் இதுவரை 22,496 அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; 15,226 அமைப்புகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாக்கப்பட்டுள்ளன.

2019-2021 காலகட்டத்தில் மட்டும் 1,811 அமைப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 218 தொண்டு நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன (தென்னிந்தியாவிலேயே அதிகப்படியான எண்ணிக்கை).
ஜி20 நாடுகளின் மொத்த NGOs எண்ணிக்கையில் 29.35% இந்தியாவில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால், அரசின் இந்த தொடர் கெடுபிடிகளால் தற்போது வெறும் 14,434 FCRA அமைப்புகள் மட்டுமே செயலில் உள்ளன!
FCRA 2020 vs 2026
1. நீதிமன்ற விசாரணை இன்றி சொத்துக்கள் அபகரிப்பு (Section 16A):
ஒரு அமைப்பின் FCRA புதுப்பித்தல் விண்ணப்பம் சிறிய தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ (Deemed Cessation), எந்த நீதிமன்ற உத்தரவுமின்றி, அரசு நியமிக்கும் Designated Authority அந்த அமைப்பின் பணத்தையும், வெளிநாட்டு நிதி மூலம் பகுதி அல்லது முழுமையாக உருவான சொத்துக்களையும் தற்காலிகமாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடியும்.
2. மக்களின் சொத்துக்களை விற்று அரசு கருவூலத்தில் சேர்ப்பதா? (Section 16A(6)):
பறிமுதல் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை விற்று, அந்தப் பணத்தை Consolidated Fund of India-இல் சேர்க்க இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்பட்ட சொத்துக்களை அரசு அபகரிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

3. சிறுபான்மையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மீதான தாக்குதல்:
கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல தலைமுறைகளாக இயங்கி வரும் கிறிஸ்துவச் சமூக நல அறக்கட்டளைகள், தொண்டு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சர்வதேச நிதியுதவியையும், உள்ளூர் நன்கொடைகளையும் இணைத்தே ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன. இந்தச் சட்டத்தின் மூலம் மருத்துவமனைகளின் உரிமங்களை இடைநிறுத்தம் செய்து, அவற்றின் சொத்துக்களைக் கைப்பற்றுவது எளிய மக்களின் நலனை நேரடியாகப் பாதிக்கும்.
4. FCRA விதிகளின் கீழ் எந்தவொரு அமைப்பின் மீதும் குற்றவியல் விசாரணை தொடங்குவதற்கு மத்திய அரசின் முன் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பாஜக ஆதரவு பெற்ற அமைப்புகளைப் பாதுகாக்கவும், அரசை விமர்சிக்கும் சிறுபான்மையினர் மற்றும் சமூக உரிமை அமைப்புகள் மீது மட்டும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவுமே பயன்படும்.
5. சமூக விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் NGOs, செய்திகள் எதுவும் வெளியிடவில்லை என RNI (Registrar of Newspapers for India)-இடம் "Not a Newspaper" சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய கெடுபிடி மூலம் கருத்துச் சுதந்திரமும் முடக்கப்படுகிறது. ஒன்றிய அரசு கூறும் "மேற்பார்வை மற்றும் சீரமைப்பு" என்ற சாக்குபோக்கு முற்றிலும் போலித்தனமானது.

வெளிப்படைத்தன்மை என்ற போர்வையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரம், சொத்துரிமை (Article 300A), வழிபாட்டுத் தலங்களின் சுயாட்சி (Article 26) மற்றும் சமூக நலக் கட்டமைப்புக்கே உலை வைக்கும் இந்த FCRA 2026 மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது நாடாளுமன்றக் கூட்டுத் தேர்வுக்குழுவின் (Select Committee) தீவிர பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் அடக்குமுறைகளை எதிர்த்து, சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கும் தொண்டு நிறுவனங்களின் சுயாட்சியைக் காக்க, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து உறுதியாகப் போராடும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


