Delimitation: 39 பெரியதா? 59 பெரியதா? டிரோஜன் குதிரைக்குள் இருப்பது என்ன? | பிரின்ஸ் கஜேந்திர பாபு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனித்துவமிக்கது தமிழ்நாடு என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தளங்களிலும் நிரூபித்து வந்துள்ளோம்.

ஆதித் தமிழ்ச் சமூகம் தொடங்கி தமிழர் வாழ்வியலில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை இருந்துள்ளது. சமூக சமத்துவம் பின்னடைவை சந்தித்ததும், அதை சரி செய்ய பெரும் போராட்டம் இன்று வரை நிகழ்ந்து கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

அரசியல் தளத்தில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்பது, உருவாகும் சூழலுக்கு ஏற்ப, சிக்கலைப் புரிந்து கொண்டு நடைமுறை தந்திரத்தை வகுத்துக் கொள்வது. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அதைத்தான் சொன்னோம், அதையே செய்கிறோம் என்றெல்லாம் அவர் சமாதானம் சொன்னதில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும், தனது கட்சியின் நிலைப்பாடு மாறுகிற போது அதற்கு தேவையான அடிப்படை விளக்கத்தை அளித்துள்ளார்.‌

அதன் தொடர்ச்சியாக, அவசரகால அறிவிப்பை எதிர்த்து உறுதியுடன் நின்றவர் கலைஞர்.

நாட்டின் நலன் சார்ந்து உறுதியான நடவடிக்கை எடுக்கும் எந்த தலைமைக்கும் அரசியல் நெருக்கடியும், மிகப் பெரும் அச்சுறுத்தலும் வரச் செய்யும். அவ்வாறான சூழல்களை எதிர்கொள்வதே அரசியல் ஆளுமைத்திறன்.

இன்று, இந்திய மக்களாட்சி கோட்பாடு மிகப் பெரும் ஆபத்தைச் சந்திக்க‌ இருக்கிறது. புதிய உத்திகளும், புதிய வியூகங்களும் அமைக்கப்பட்டு நயவஞ்சக நாடகம் அரங்கேற்றப்படுகிறது. நேற்று கோரியது இன்று நிறைவேறிவிட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்க இத்தகைய நயவஞ்சகம் முயற்சி செய்கிறது.

கோரிக்கை நிறைவேறிவிட்டது என்று நம்பவைப்பது, எளிமையான கணக்கு மூலம் 39 பெரியதா? அல்லது 59 பெரியதா? என்று கேள்வி கேட்டு எண்ணிக்கை கூடினால் நல்லதுதானே, அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியையும் கேட்க வைக்கும். இந்த வாய்ப்பை தவறவிட்டால் நமது பிரதிநிதித்துவம் குறைந்துவிடும், நமது எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக கூடுவதை உறுதி செய்துவிட்டோம், இது நீண்ட கால நலன் சார்ந்தது. இதை எதிர்ப்பது அர்த்தமற்றது என்ற வாதத்தையும் முன்வைக்க தூண்டும்.

Delimitation அமித் ஷா, மோடி

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இந்த‌ எண்ணிக்கை மாறாது, அதுதான் நமது அன்றைய கோரிக்கை. எனவே, நாம் கேட்ட எண்ணிக்கை, நாம் கோரியபடி, கால் நூற்றாண்டிற்கு அந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. எனவே, அவ்வாறான சட்டத்தை ஆதரிப்பதில் என்ன தவறு? என்ற கேள்வியை முன் வைப்பவர்கள் மிகவும் கவனத்துடன் அதன் தாக்கத்தை ஆராய வேண்டும்.

உலகின் எந்த நாட்டிலும் ஒன்றரை மடங்காக மக்களவை எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதை அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டும். ஐம்பது சதவீதம் உயர்த்துவது விவாதம் இல்லாத அவையாக நாடாளுமன்றத்தை மாற்றும் சூழ்ச்சி என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற வெவ்வேறு வகை இருந்தாலும், இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மாநிலத்தின் மீதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்‌.‌

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி வலுவாக உள்ளது, எந்த தேர்தல் சீர்திருத்தமும் தமிழ்நாடு மாநிலத்தை ஒன்றும் செய்யாது, வட மாநிலத்தில் தேசியக் கட்சிகள் பலவீனமாக இருந்தால் அது அவர்கள் சந்திக்க வேண்டிய சவால், அதற்கு தமிழ்நாடு என்ன செய்யும் என்ற வாதம்; தனது மாநிலம், தனது மொழி என்றளவில் மட்டும் நிற்காமல் இந்தியா என்ற பன்முகப் பண்பாடு காக்கப்பட அரும்பாடுபட்ட தமிழறிஞர்களான பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்கள் வரை அனைவரின் வரலாற்றுப் பணிகளையும் மறுதலிக்கும் அரசியல் நடவடிக்கையாகும்.

இன்று, எங்கள் மாநிலத்திற்கு சிக்கல் இல்லை. உங்கள் மாநிலத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது அந்தந்த மாநிலத்தில் மொழி சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பேசுவதாக கருத்தில் கொள்ள முடியும்.

தமிழ்நாடு மாநிலத்திற்கு நன்மை என்பது ஒரு மாயத் தோற்றம். கானல் நீர். அதிகரிக்கும் எண்ணிக்கை ஒரு டிரோஜன் குதிரை. வெளி உருவத்திற்கு அது குதிரை பொம்மை. உள்ளே புதைந்திருப்பதோ பெரும் ஆபத்து. கால் நூற்றாண்டிற்கு எண்ணிக்கை மாறாது என்ற வாதம், தூங்கும் முதலை இப்போதைக்கு எழுந்திருக்க வாய்ப்பில்லை, அதற்குள் ஆற்றை கடந்து விடலாம் என்பது போன்றது‌.

எண்ணிக்கையில் மாற்றம் இல்லை, தமிழ்நாடு கூடுதல் பிரதிநிதிகளை பெறும் என்ற இரண்டு வாதங்களும் தமிழ்நாடு நலன் சார்ந்தது அல்ல!

உண்மையை மறுதலித்து, பொய்யை உண்மை என்று நம்பவைப்பதுடன், ‌மனதளவில் இதுவரை நமக்கு இருந்த உறுதியை குலைத்து, தீங்கு விளைவிப்பவரை நமக்கு நல்லது செய்பவர் போல நம்ப வைக்கும் உளவியல். இரண்டு படுபாதகமான உளவியல் செயல்பாட்டின் கலவையையே இன்று அரசியல் தளத்தில் அரங்கேற்றுகின்றனர். (It is an interplay of post-truth and gaslighting psychology in political sphere)

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு...

ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் பாஜக செய்யும் சூழ்ச்சிக்கு பிற மாநிலத்தில் உள்ள‌ கட்சிகள் இரையாகி வருவதுபோல், தமிழ்நாடு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் இரையாக தங்களை தயார்படுத்திக் கொள்வது பெரும் வீழ்ச்சியின் தொடக்கம்.

தீமையை நன்மை என்று உணரச் செய்து, தீங்கு செய்பவரையே நமக்கு நல்லது செய்பவர் என்று நம்பவைத்து, நமது நலன் சார்ந்து இயங்கும் அனைவரையும் நமது விரோதியாக கருதச் செய்யும் உளவியலுக்கு பெயர்தான் காஸ் லைட்டிங்.

நம்மை அடிமைப்படுத்த கையாளப்படும் தந்திரத்தை உணராமல் அரசியல் கட்சிகள் நடந்து கொள்வது மிகப் பெரும் வரலாற்றுப் பிழை என்பதை மக்கள் உணர வேண்டும். தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் கட்சி நலனை விட இந்திய நாட்டின் நலனையே பெரிதென கருதி செயல்பட வேண்டும் என்று இறுதி இறையாண்மையை தங்களிடம் கொண்ட இந்திய மக்கள் வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 132வது திருத்த மசோதா, 2026 (The Constitution (One Hundred and Thirty-Second Amendment) Bill, 2026) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா, 2026

(The Delimitation (Second) Bill, 2026) இரண்டும் மக்களிடம் இருக்கும் இறுதி இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்யும் மிகப் பெரும் சதித்திட்டம்.

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள், அதே அளவில் சட்டம் இயற்றும் அவையிலும் இடம் பெற‌வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு கோரப்படுகிறது. சரிபாதி என்று இல்லாமல், 33% என்று நிர்ணயிக்கப்பட்ட போதும், அதையாவது நடைமுறைப்படுத்துங்கள் என்பதே இன்றையக் கோரிக்கை. இன்று உள்ள அவையின் எண்ணிக்கை அடிப்படையில் 33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் 179 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாக கட்டாயம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இன்றுள்ள 543 உறுப்பினர்களில் 179 பெண்கள் என்கிறபோது நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இன்றுள்ள எண்ணிக்கை அடிப்படையில் 33% இட ஒதுக்கீடு தருவதற்கு பதிலாக, எண்ணிக்கையை 850 என்று உயர்த்தி, அதன் பின்னர் பெண்களுக்கு 33% தருகிறோம் என்பது பெண்களைக் காலம் காலமாக வழிபடும் நிலைக்கு உயர்த்தி, அடிமையாகவே வைத்திருக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடு.

பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையுடன் இணைக்கப்படுவதற்கு நியாயமான எந்த காரணமும் இல்லை. வெவ்வேறான இரண்டு செயல்பாடுகளை இணைப்பதற்கு தர்க்கரீதியாக எந்த வாதத்தையும் வைக்க இயலாத காரணத்தால், தொகுதி மறுவரையை எதிர்ப்பவர்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள்.

Women

எண்ணிக்கையைக் கூட்டி, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பது கானல் நீர்!

எண்ணிக்கை கூடுவதால் மட்டுமே பெண்கள் உரிமைகள் காக்கப்படாது, வலுவாக தங்களின் கருத்தை முன்வைக்க அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். தங்களின் வாதத்தை முன் வைக்க போதிய அளவு நேரம் கிடைக்க வேண்டும். பெரும் எண்ணிக்கைக் கொண்டு, காலக்கெடுவுடன் கூடும் அவையில், கூடுதல் நேரம் பெண்களுக்கு கிடைக்க சாத்தியம் இல்லை. எனவே, எண்ணிக்கையைக் கூட்டி, பெண்களுக்கு 33% என்பது கானல் நீர். கண்ணுக்கு எண்ணிக்கை பெரிதாக தெரியலாம், ஆனால் விவாதிக்க வேண்டிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் கூடுதலாக பெண்கள் அவையில் அமர்ந்திருப்பதால் என்ன பயன்? பெண்களை அடிமையாக வைத்திருக்க காலம் காலமாக கையாளப்படும் சூழ்ச்சியின் நீட்சிதான் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட 33% பெண்கள் இட ஒதுக்கீடு.

மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் என்பது டிரோஜன் குதிரை!

543 எண்ணிக்கையில் 39 சாதிக்க முடியாததை 850 எண்ணிக்கையில் 59 சாதிக்கும் என்ற வாதம் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் முயற்சி. அதிக எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் பெற்றாலும், மாநில உரிமைகள், மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடத்துவதற்கு போதிய நேரம் கிடைக்காது என்பதுடன், ஒரு மாநிலத்தைவிட இன்னொரு மாநிலம் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது, அத்தகைய மாநிலங்கள் ஒன்றுகூடி, நியாயத்தின் குரல் ஒலிக்கவிடாமல் தடுக்கக் கூடும். அத்தகைய மாநிலங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற‌ துணை நிற்கும் போது, தடுக்க வாய்ப்பில்லாமல் மற்ற மாநிலங்களின் பிரதிநிதிகள் தவிக்கும் சூழலையே உருவாக்கும்.

டிரோஜன் குதிரைக்குள் இருப்பது என்ன?

இன்று உள்ள மக்களாட்சி குடியரசு கட்டமைப்பைத் தகர்த்த தேவையான அடித்தளத்தை அமைப்பதே முதன்மையான நோக்கம். இன்று உள்ள நாடாளுமன்றத்தில் துறைசார் வல்லுனர்களை உறுப்பினர்களாக கொண்டதுடன், முதிர்ந்த அனுபவம் வாய்ந்த அரசியல் ஆளுமைகளின் அவையாக மாநிலங்களவை திகழ்கிறது. பல்வேறு மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலுசேர்க்க, மாநில உரிமைகள் காத்திட வலுவான குரலெழுப்பும் அவையாக மாநிலங்களவை திகழ்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதா நிறைவேறாமல் போனால், மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஒன்றாகக் கூடி விவாதித்து வாக்கெடுப்பு நடத்தி, மசோதா ஏற்கப்படலாம், நிராகரிக்கப்படலாம். தாக்கலாக இருக்கும் இரண்டு மசோதாக்களும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறித்து எதையும் பேசவில்லை. இதன் விளைவு, மாநிலங்களவையின் தனிப்பட்ட உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு குறைவதுடன், மாநிலங்களவை தனது முக்கியத்துவத்தை பெரிதும் இழக்கும்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

மக்களவை காலக்கெடுவுடன் தனது நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும். 850 உறுப்பினர்கள் என்பது உறுப்பினர்களை எண்ணிக்கையாக மட்டுமே கருதும் நிலையை உருவாக்கும். ஆழமான, ஆக்கப்பூர்வமாக விவாதத்திற்கு பதிலாக, வாக்கெடுப்பில் கலந்து கொள்வதுதான் பிரதான பணியாக கருதப்படும். அரசிற்கு ஆதரவாக உள்ள எண்ணிக்கையைப் பயன்படுத்தி ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிக் கொள்வார்கள்.

இத்தாலியும், ஜெர்மனியும் அனுபவித்த பாசிச கொடுங்கோன்மையை இந்தியா அனுபவிக்கும். சமூக நீதியை, சமதர்மத்தை குழிதோண்டி புதைக்கும் மக்கள் விரோத கோட்பாடுதான் பாசிசம் என்பதை உணரும் வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு உணரும் காலத்தில், அதை எதிர்த்துப் போராட வலுவில்லாமல் அரசியல் கட்சிகள் நிற்கும்.

ஒரு தலைமுறை பாதிப்புக்குள்ளாகி, அடுத்தத் தலைமுறை போராடி, பல்வேறு தியாகங்கள் புரிந்து மீண்டும் மக்களாட்சி மலரவைக்க வேண்டிய சூழல் உருவாகும்.

மக்களின் வரிப்பணம் விரையமாகும்!

விவாதிக்க வாய்ப்பில்லாத உறுப்பினர்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஊதியம், கட்டணமில்லா தங்கும் வீடுகள், கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்ய பணம் இல்லை என்று கை விரிக்கும் அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளுக்கு கூடுதலாக பலகோடி ரூபாய் செலவு செய்யும். இந்த பயனற்ற செலவு யாருடைய நன்மைக்கு என்பதே கேள்வி. மக்களவையில் கூடுதல் எண்ணிக்கை என்பது சர்வாதிகார ஆட்சியை‌ கட்டமைக்கவே பயன்படும்.

தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழுவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தனக்கு சாதகமான நபர்களை நியமித்துக் கொள்வார்கள். தனது கொள்கைக்கு மாற்றாக உள்ள எவரையும் வெற்றிபெற வாய்ப்பில்லாத வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும். இந்த சிக்கலை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பது உண்மையை மறைத்து, தவறு நடக்க பகிரங்கமாக வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அதிகாரத்தைத் தந்துவிட்டு, அது பயன்படுத்தப்படும் போது அதை எப்படித் தடுக்க முடியும்? முதலில் கடலில் குதிக்கட்டும் அதன் பின்னர் நீச்சலடிக்க கற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தி ஒரு நபரை‌ ஆழ்கடலில் தள்ளிவிடும் ஏற்பாடுதான், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறட்டும், அதன் பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்பது‌.‌

மொழியால், வழிபாட்டு முறையால், பழக்கவழக்கங்களால் சிறுபான்மையாக உள்ள மக்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் கண்ணியத்துடன், முழுச் சுதந்திரத்துடன் வாழத் தகுதியற்றவராக மாற்றும் பெரும் சூழ்ச்சியே 132வது சட்டத் திருத்த மசோதாவும், தொகுதி மறு வரையறை மசோதாவும்.

மக்களிடம் இறுதி இறையாண்மை என்ற கோட்பாடு அழிக்கப்பட்டு, மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே கருதும் நீர்த்துப்போன மக்களாட்சியாக இந்திய மக்களாட்சி மழுங்கிவிடும் பெரும் ஆபத்தை இந்தியா எதிர்நோக்கி உள்ளது.

39ல் இருந்து 59ஆக உயரப் போகிறது, வேறென்ன வேண்டும்? என்று கேட்பதும், தொகுதி‌ மறு வரையறை என்ற அடிப்படையில் மக்களின் கண்ணியமிக்க வாழ்க்கை பாதிக்கப்படும் என்றால், அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பதும், பாசிசத்தை பாயாசம் போன்று எளிமையாக கடந்து போவதும் இந்தியாவிற்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் செய்யும் மிகப் பெரும் துரோகமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இத்தகைய பின்னடைவை இந்தியா சந்திக்கும் என்பதை‌ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்த உரிமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் சதிக்கு துணைபோவது; பெற்ற பிள்ளைகளே தாயைக் கொல்லுவதற்கு சமமாகும்.

அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் வாய்விட்டு சிரிக்கும் புகைப்படம் ஒன்று உண்டு. நவம்பர் 30, 2026 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 132வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறு வரையறை மசோதா, 2026 தாக்கல் ஆகும் போது அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் கதறி அழும் குரல் நாடு முழுவதும் கேட்கும். காதைப் பொத்திக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதா தாக்கல் ஆவதை அனுமதிக்கப் போகிறார்களா? அல்லது தங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி பெரும் ஆபத்தை தடுக்கப் போகிறார்களா என்று உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம் என்பதை உணர்ந்து இரண்டு மசோதாக்களையும் அறிமுக நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

மக்களுக்கு கல்வியை, வேலை வாய்ப்பை, கண்ணியமிக்க வாழ்க்கையை உரிமையாக தர சொல்லும் இன்றைய‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை புதைக்குழிக்குள் அனுப்பும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 132வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறு வரையறை மசோதா, 2026 ஆகிய இரண்டு மசோதாக்களையும் தடுத்து நிறுத்த இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.‌

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.