Vijay Sethupathi: இசையமைப்பாளர் மிஷ்கினுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் - விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் புரொமோஷனுக்காக ட்ரெயின் வடிவில் ஒரு வாகனத்தைத் தயார் செய்து, அதனை தமிழகத்தின் முக்கியப் பகுதிகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. அதனைத் துவக்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

விஜய் சேதுபதி - ட்ரெயின்

விஜய் சேதுபதி இந்த நிகழ்வில் பேசுகையில், "இந்தப் படத்தின் மீது நான் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறேன். எதேச்சையாக ஒரு படத்தைப் பார்த்துப் பாராட்டும்போது ஏற்பட்ட நட்பு, இன்று இப்படிப்பட்ட ஒரு படத்திற்கான கூட்டணியாக மாறி நிற்கிறது.

எங்கள் இருவரின் பயணமும் மிகவும் அழகானது. இந்த டிரெயின் படத்தில் அது இன்னும் சிறப்பாக வெளிவந்திருக்கும் என்று நம்புகிறேன். அவர் சொல்வது போல, எங்கள் தயாரிப்பாளரின் பணப்பெட்டியும் நிரம்ப வேண்டும். அவரது மனப்பெட்டியும் நிரம்ப வேண்டும்.

ரயில் நிற்காமல் எவ்வளவு வேகமாகச் செல்லுமோ, அந்த அளவுக்குப் படம் பார்க்கும் அனைவருக்கும் துளியும் கவனச் சிதறல் இல்லாமல் வேகமாக நகரும் கதை இது. ஐந்து மணி நேரத்தில் நடக்கும் பல்வேறு உணர்வுகள் இதில் உள்ளன.

பழிவாங்கல், கோபம், அகால மரணம், அழகான காதல், குழந்தைப் பிறப்பு எனப் பல உணர்வுகள் இப்படத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் பார்வையாளர்களை முழுமையாகக் கட்டிப்போடும் என்று நம்புகிறேன்.

இவற்றையெல்லாம் தாண்டி, மிஷ்கின் சார் படங்களில் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்படும் பேரன்பும் மனிதாபிமானமும் நிறைந்த படமாக இந்த டிரெயின் இருக்கும்.

'Train' movie - Vijay Sethupathi
Train movie - Vijay Sethupathi

இசையமைப்பாளராக மிஷ்கின் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவருக்கு இனி நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்த ரயில் பயணம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து, உங்கள் சொந்த ரயில் பயண நினைவுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்." எனப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.