63 வயது பெண்ணைக் காதல் திருமணம் செய்த 75 வயது முதியவர்; முதியோர் இல்லத்தில் சுவாரஸ்யம்!
வயதான காலத்தில் பெற்றோரைக் கவனித்துக்கொள்வது பிள்ளைகளுக்கு மிகப்பெரிய பாரம் என்று அதிகமானோர் நினைக்கின்றனர். பெற்றோர் தங்களது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த பிறகு அவர்களைச் சரியாகக் கவனிப்பதில்லை. அன்றாட தேவைக்கு பணமும் கொடுப்பதில்லை.
இது போன்ற சூழ்நிலையில் சில பெற்றோர் தங்களது மகனுக்கு எழுதிக்கொடுத்த வீட்டை கோர்ட் மூலம் திரும்பப் பெற்ற சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. இமாச்சலப் பிரதேச மாநிலம் பர்மனாவைச் சேர்ந்த கன்ஹையா லால்(75), சோலனைச் சேர்ந்த சபீனா(63) ஆகியோர், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காகஸ் பகுதியில் உள்ள அப்னா கர் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தனர்.
அவர்கள் இருவரும் குடும்பத்தினரால் துரத்தி விடப்பட்டவர்கள். அவர்கள் அந்த இல்லத்தில் தங்கி இருந்தபோது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். இதுவே அவர்களுக்குள் காதலாக மாறியது.
எனவே இருவரும் திருமணம் செய்து கொண்டு எஞ்சிய வாழ்க்கையை ஒன்றாகக் கழிப்பது என்று முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு முதியோர் இல்லத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சள் வைக்கும் சடங்குகள் நடந்தன. இதில் மணமக்கள் இருவரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, சக முதியவர்களுடன் இணைந்து பாரம்பர்ய இமாச்சலப் பிரதேச நாட்டுப்புறப் பாடல்களை ரசித்தனர். இந்து முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்வில், மாலை மாற்றிக்கொள்ளுதல், அக்னியை ஏழு முறை வலம் வருதல், பாரம்பர்ய விருந்து (தாம்) ஆகியவை இடம்பெற்றன.
விழாவில் பிலாஸ்பூர் துணை ஆணையர் கிரண் பதானா திருமணத்தில் கலந்துகொண்டு, புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பரிசு வழங்கினார்.
முதியோர் இல்ல நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் சக முதியவர்கள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்து, முதியோர் இல்லத்தையே ஒரு மகிழ்ச்சியான திருமண மண்டபமாக மாற்றி தம்பதிகளை ஆசீர்வதித்தனர்.
இது குறித்து அப்னா கர் நிறுவனரும் வழக்கறிஞருமான பிரகாஷ் சந்த் பன்சால் கூறுகையில், 2022ம் ஆண்டு ஒரு குகையிலிருந்து கன்ஹையா லாலைத் தங்களது அமைப்பினர் மீட்டனர். அவர் முன்பு தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால், அவரது மனைவி இறந்த பிறகு, தனது சொத்துக்களைத் தனது சகோதரர்களின் பெயருக்கு எழுதிக்கொடுத்தார்.
பின்னர் அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு குகையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மண்டி மாவட்டத்தின் ஜஞ்சேலி பகுதியிலுள்ள துனாக் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா லால் மீட்கப்பட்ட பிறகு இந்த முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, அன்றிலிருந்து இங்கேயே வசித்து வருகிறார்.
இதே போன்று கொல்கத்தாவைச் சேர்ந்த சபீனா, தனது வீட்டை விட்டு வழிதவறிச் சுற்றித் திரிந்து இமாச்சலப் பிரதேசத்தை வந்தடைந்தார். சிம்லாவிற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் 2025-ஆம் ஆண்டில் பிலாஸ்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
இருவரும் ஒரே இல்லத்தில் வசித்து வந்தபோது, அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டு, இறுதியில் தங்களது எஞ்சிய வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க முடிவெடுத்தனர் என்றார்.
திருமணத்தைத் தொடர்ந்து, கன்ஹையா லால், சபீனா ஆகியோர் இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள நலகரில் அமைந்துள்ள புதிய முதியோர் இல்லத்திற்குக் குடிபெயர உள்ளனர். அங்கு அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குவார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


