Doctor Vikatan: சூடாக காபி, டீ குடித்தால் உணவுக்குழாய் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டா?
Doctor Vikatan: எனக்கு எப்போதும் காபி, டீ எதுவானாலும் ஆவி பறக்கும் சூட்டில் குடித்துதான் பழக்கம். ஆனால் இப்படி மிகவும் சூடாகக் குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் (Food Pipe Cancer) ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருண் ரமணன்
உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் இப்படியொரு பழக்கம் இருக்கிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பானங்களைத் தொடர்ந்து குடிப்பது நாக்கு அல்லது தொண்டையில் ஏற்படும் எரிச்சலைத் தாண்டி, வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
மிகவும் சூடான டீ அல்லது காபியைத் தொடர்ந்து குடிப்பது உணவுக்குழாய் புற்றுநோய் (Oesophageal Cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மிகவும் சூடான பானங்கள் உணவுக்குழாயை எப்படி பாதிக்கின்றன?
உணவுக்குழாய் (Oesophagus) என்பது வாய்வழியாக நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் திரவங்களை இரைப்பைக்குக் கொண்டுசெல்லும் தசையால் ஆன குழாய் போன்ற அமைப்பு. இதன் உட்புறத்தில் மியூகோசல் லைனிங் (Mucosal Lining) எனப்படும் பாதுகாப்பான செல்களின் அடுக்கு உள்ளது.
மிகவும் சூடான திரவங்களை, தொடர்ந்து குடிக்கும்போது, அவற்றின் வெப்பம் உணவுக்குழாயின் இந்த மென்மையான உட்புற அடுக்கைப் பாதிக்கலாம். பாதிக்கப்பட்ட செல்களை உடல் இயற்கையாகவே சரிசெய்யும். ஆனால், இதுபோன்ற பாதிப்பு மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, செல்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அவை குணமடைவதும் நடைபெறுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வீக்கமும் (Inflammation) ஏற்படலாம்.

காலப்போக்கில், இத்தகைய தொடர் பாதிப்புகள் உணவுக்குழாயின் உட்புற செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு இந்த மாற்றங்கள் அசாதாரண செல்களின் வளர்ச்சிக்கும் (Abnormal Cell Growth), பின்னர் புற்றுநோய் உருவாகும் அபாயத்திற்கும் வழிவகுக்கலாம். இருப்பினும், மிகவும் சூடான பானங்களைக் குடிக்கும் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படும் என்று இதற்கு அர்த்தம் அல்ல.
இதற்கு அறிவியல் ஆய்வுகளிலும் சில ஆதாரங்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization ) ஒரு பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (International Agency for Research on Cancer – IARC), 65°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் அருந்தப்படும் பானங்களை மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள காரணியாக (Probably Carcinogenic) வகைப்படுத்தியுள்ளது.
மிகவும் சூடான பானங்களைத் தொடர்ந்து குடிப்பது உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பாக, உணவுக்குழாயின் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (Oesophageal Squamous Cell Carcinoma) எனப்படும் புற்றுநோய் வகையுடன் இதற்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில் முக்கியமான விஷயம், தேநீர் அல்லது காபி அல்ல. அவற்றின் அதிகப்படியான வெப்பநிலைதான் கவலைக்குரியது. இருப்பினும், ஆய்வுகள் இந்தத் தொடர்பைக் காட்டுகின்றனவே தவிர, மிகவும் சூடான பானங்கள் மட்டுமே புற்றுநோய்க்குக் காரணம் என்று உறுதிப்படுத்தவில்லை.

யாருக்கு ரிஸ்க் அதிகம்?
மிகவும் சூடான பானங்களைக் குடிப்பது மட்டுமே உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணி அல்ல. புகையிலைப் பயன்பாடு மற்றும் மது அருந்துவது ஆகியவை இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான ஆபத்துக் காரணிகளாகும்.
வயது அதிகரிப்பது, நீண்ட காலமாக அமிலம், உணவுக்குழாய் வழியாக மேலேறுதல் (Acid Reflux) பிரச்னை இருப்பது, உணவுக்குழாயில் நீண்டகாலமாக இருக்கும் சில பாதிப்புகள் போன்றவையும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இந்த ஆபத்துக் காரணிகள் இருப்பதால் ஒருவருக்குக் கட்டாயம் புற்றுநோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல. இருப்பினும், புகையிலையைத் தவிர்ப்பது, மது அருந்துவதைக் குறைப்பது மற்றும் தொடர்ந்து இருக்கும் செரிமானப் பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை பெறுவது உணவுக்குழாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
இதையெல்லாம் பின்பற்றுங்கள்:
அன்றாடப் பழக்கங்களில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உணவுக்குழாய் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். தேநீர் அல்லது காபி தயாரித்த உடனேயே குடிக்காமல், சிறிது நேரம் ஆறவிட வேண்டும். குடிப்பதற்கு ஏற்ற அளவுக்கு வெதுவெதுப்பான பிறகே அருந்த வேண்டும்.
வாய் அல்லது தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு சூடாக இருக்கும் பானங்களைக் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.
ஒரு நாளைக்குச் சில முறை மட்டுமே தேநீர் அல்லது காபி குடித்தாலும், அவற்றை அதிக வெப்பநிலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இதனுடன் புகையிலையைத் தவிர்ப்பதும், மது அருந்துவதைக் குறைப்பதும் பிற முக்கிய ஆபத்துகளைக் குறைக்க உதவும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
உடலில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கவனிப்பதும் முக்கியம். உணவை விழுங்குவதில் சிரமம் (Difficulty Swallowing) ஏற்படுவது, குறிப்பாக அந்தச் சிரமம் நாளடைவில் அதிகரிப்பது.
ஆரம்பத்தில் திட உணவுகளை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டு, பின்னர் திரவ உணவுகளையும் விழுங்க முடியாமல் போவது.
காரணமின்றி உடல் எடை குறைவது (Unexplained Weight Loss).
மார்பெலும்புக்குப் பின்புறம் தொடர்ந்து வலி ஏற்படுவது (Pain Behind the Breastbone).
அடிக்கடி வாந்தி வருவது (Repeated Vomiting).
வாந்தியில் ரத்தம் வருவது (Blood in Vomit).
இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இவை அனைத்தும் புற்றுநோயின் அறிகுறிகள் என்று அர்த்தமல்ல. வேறு பல உடல்நலப் பிரச்னைகளாலும் இவை ஏற்படலாம்.

அறிகுறிகளைப் பொறுத்து, உணவுக்குழாய் மற்றும் இரைப்பையின் உட்புறத்தைப் பரிசோதிக்க மேல் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி (Upper Gastrointestinal Endoscopy) செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம். தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சிறிய திசு மாதிரி எடுக்கப்பட்டு, திசுப் பரிசோதனை (Biopsy) செய்யப்படும்.
உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக டீ அல்லது காபி குடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அவற்றை மிகவும் சூடாகக் குடிப்பதைத் தவிர்த்து, சிறிது ஆறிய பிறகு குடிப்பதே முக்கியம். அன்றாடப் பழக்கங்களில் செய்யும் சிறிய மாற்றங்கள், புகையிலையைத் தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதைக் குறைப்பது போன்றவை நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
டாக்டர் அருண் ரமணன்:
புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் Gleneagles Hospital Chennai.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


