திருப்பரங்குன்றம்: `இதனால் தான் தூணில் தீபம் ஏற்றவில்லை; வருத்தம்.! - ஆட்சியரின் 17 பக்க அறிக்கை

தீபத் தூணில் தீபம் ஏற்றத் தேவஸ்தானம் குழு அமைத்துப் பெயர்களைப் பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 20-ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், 21-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருடனும், காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தாசில்தார் மற்றும் பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு பத்தி வாரியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்

தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து நபர்களுக்கு மிகாமல் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தீபத்தைப் பொறுத்தவரை கோயில் வழக்கப்படி செயல் அலுவலரால் விளக்கு ஏற்றும் முறை தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.

CRPF படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்றும், தமிழகக் காவல்துறை படைகளை நிலை நிறுத்தும் திட்டம் தயாராக உள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

24-ஆம் தேதி தீபம் ஏற்றும் பணியானது தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கொண்ட குழுவினரால் மட்டுமே பிரத்தியேகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையை எடுக்கத் தேவஸ்தான செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் அணி திரளுவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் நம்பகத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றது.

அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காகவும், போராட்டங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கும் எந்த ஒரு நபருக்கும் தடை விதிக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் பி.என்.எஸ்.எஸ்  பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவானது 25-ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிஷாந்த் கிருஷ்ணா

இதனை அடுத்து 24-ஆம் தேதி காலை முதல் நண்பகல் 12.30 மணி வரை நேரடியாகத் திருப்பரங்குன்றம் சென்று அந்த இடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறை ஆணையருடன் கலந்துரையாடப்பட்டது.

தீபம் ஏற்றும் நிகழ்வு நேரமான மாலை 6 முதல் 6.30 மணி வரைக்குள்ளாக தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான காலகட்டத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்ற வரவில்லை.

தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கு அதிகாரம் அளித்து, கோயில் தேவஸ்தானம் எந்த ஒரு கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவில்லை.

தேவஸ்தானத்திற்கு விளக்கேற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு அமைத்து அதன் நபர்களின் பெயர்களைத் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சல் நினைவூட்டல் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் செய்யப்பட்டன.

ஆனால், குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்தது.

உச்சநீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாகத் தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டுத் திருக் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

தேவஸ்தானம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்துப் பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்றவில்லை; அதே வேளையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எடுத்ததாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோயில்  அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் விளக்கு ஏற்ற முடிவு எடுத்தது, ஆனால் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.

தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்தது." என மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.