Doctor Vikatan: 20 வயதிலேயே மூட்டுவலியா... இதையெல்லாம் செய்தால் All is Well!

Doctor Vikatan: என் மகளுக்கு 23 வயதாகிறது. அதற்குள் மூட்டுவலி வந்து அவதிப்படுகிறாள். 60 வயதுக்கு மேல் வந்துகொண்டிருந்த மூட்டுவலி, இப்போதெல்லாம் 20 ப்ளஸ் வயதிலேயே பாதிப்பது ஏன்... இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் தியாகராஜன் பாண்டியன்

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் தியாகராஜன் பாண்டியன்

ஒரு காலத்தில் குழந்தைகளும், பதின்ம வயதினரும் தங்களுடைய ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியை வெளியில் விளையாடுவதிலேயே செலவிட்டனர். கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவது என உடல் இயக்கம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது.

ஆன்லைன் வகுப்புகள், லேப்டாப்பில் வேலை செய்வது, மொபைல் போன்களில் மணிக்கணக்கில் செலவிடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஓடிடி (OTT) தளங்களில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்பது எனப் பெரும்பாலான நேரம் திரைகளுக்கு முன்னாலேயே கழிகிறது. 

இப்படி  உட்கார்ந்த நிலையிலேயே அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை (Sedentary Lifestyle), இளம் இந்தியர்களின் எலும்பு மற்றும் தசை மண்டல ஆரோக்கியத்தில் (Musculoskeletal Health) முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 20 வயதைக் கடந்த இளைஞர்கள் சிலர் படிக்கட்டுகளில் ஏறும்போதும், குத்துக்காலிட்டு அமரும்போதும், நாற்காலியிலிருந்து எழும்போதும் அல்லது நீண்ட தூரம் நடக்கும்போதும் முழங்கால் வலி ஏற்படுவதாகச் சொல்வதைப் பார்க்கிறோம்.

இளம் வயதிலேயே முழங்கால் வலி ஏற்படுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேநேரத்தில், முழங்கால் வலி இருப்பதால் ஒருவருக்கு மூட்டுவாதம் (Arthritis) இருக்கிறது என்றும் உடனடியாக முடிவு செய்துவிட முடியாது. வலிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதே முக்கியம்.

முழங்கால் என்பது உடலின் எடையைத் தாங்கக்கூடிய முக்கியமான மூட்டு (Weight-bearing Joint). இதற்கு தசைகள், தசைநார்கள் (Ligaments), தசைநாண்கள் (Tendons) மற்றும் குருத்தெலும்புகள் (Cartilage) ஆகியவை உறுதுணையாக இருக்கின்றன.

முழங்கால் என்பது உடலின் எடையைத் தாங்கக்கூடிய முக்கியமான மூட்டு (Weight-bearing Joint). இதற்கு தசைகள், தசைநார்கள் (Ligaments), தசைநாண்கள் (Tendons), குருத்தெலும்புகள் (Cartilage) ஆகியவை உறுதுணையாக இருக்கின்றன. தொடையின் முன்பகுதியில் உள்ள குவாட்ரிசெப்ஸ் தசைகள் (Quadriceps), பின்பகுதியில் உள்ள ஹாம்ஸ்ட்ரிங்ஸ் தசைகள் (Hamstrings), இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் ஆகியவை முழங்காலை நிலையாக வைத்திருக்கவும், அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

ஒருவர் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதுடன், போதிய உடல் இயக்கமும் இல்லாமல் இருந்தால், இந்தத் தசைகள் வலுவிழக்கலாம் அல்லது அவற்றின் செயல்திறன் குறையலாம். இதனால் முழங்கால் பகுதி (Kneecap) இயங்கும் விதம் பாதிக்கப்பட்டு, படிக்கட்டுகளில் ஏறுதல், ஓடுதல், குத்துக்காலிட்டு அமருதல் போன்ற செயல்பாடுகளின்போது முழங்காலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்.

உடல் எடை அதிகரிக்கும்போது முழங்கால் மூட்டுகள் தாங்க வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிக்கும்போது முழங்கால் மூட்டுகள் தாங்க வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால் ஏற்கெனவே முழங்கால் வலி உள்ளவர்களுக்கு அசௌகர்யம் அதிகரிப்பதுடன், அன்றாட இயக்கங்களும் சிரமமாக மாறலாம். ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் முழங்கால் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

வாரம் முழுவதும் பெரும்பாலும் உட்கார்ந்தே இருப்பவர்கள், திடீரென ஜிம்மில் கடுமையான பயிற்சிகள், ஓட்டப்பயிற்சி அல்லது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளைத் தொடங்குகின்றனர். 

முறையான வார்ம்-அப் (Warm-up), சரியான உடற்பயிற்சி நுட்பம் மற்றும் தேவையான ஓய்வு இல்லாமல் இத்தகைய பயிற்சிகளை மேற்கொண்டால், தசைகள் மற்றும் மூட்டுகளில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு காயங்கள் உண்டாகலாம். இதனால் தசைநார் காயங்கள் (Ligament Injuries) அல்லது மூட்டுக்குள் இருக்கும் மெனிஸ்கஸ் குருத்தெலும்பு பாதிப்பு (Meniscus Injury) போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

குறிப்பாக, திடீரென திரும்புதல், குதித்தல், வேகமாகத் திசைமாறி ஓடுதல் போன்ற விளையாட்டுச் செயல்பாடுகளில் காயம் ஏற்படும் அபாயம் அதிகம்.

முழங்கால் வலி என்பது சாதாரண உடல் இயக்கத்தால் ஏற்படும் வலி மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் மருத்துவப் பிரச்னையின் அறிகுறியா என்பதைத் தெளிவாகக் கண்டறிவது அவசியம். தசைநார் காயங்கள், தசைநாண் பிரச்னைகள், அழற்சி சார்ந்த மூட்டு நோய்கள் (Inflammatory Joint Diseases) அல்லது அரிதாகச் சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய மூட்டுத் தேய்மானம் (Early Degenerative Changes) போன்ற காரணங்களாலும் முழங்கால் வலி ஏற்படலாம்.

தொடர்ச்சியான மூட்டு வீக்கம், காலையில் நீண்ட நேரம் நீடிக்கும் மூட்டு இறுக்கம் (Morning Stiffness), ஒன்றுக்கும் மேற்பட்ட மூட்டுகளில் வலி அல்லது காரணமின்றி ஏற்படும் உடல் சோர்வு ஆகிய அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். அறிகுறிகளைப் பொறுத்து மருத்துவர் உடல் பரிசோதனை செய்வதுடன், தேவைக்கேற்ப எக்ஸ்ரே (X-ray), எம்ஆர்ஐ (MRI Scan) அல்லது ரத்தப் பரிசோதனைகளையும் பரிந்துரைக்கலாம்.

நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

இளம் வயதினர்  பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும். வேலை அல்லது படிப்புக்கு இடையே அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவும். கால்களை அசைத்து உடல் இயக்கத்தைத் தொடர்ந்து பராமரிக்கவும்.

தினசரி உடற்பயிற்சியைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். பொழுதுபோக்கு நேரம் முழுவதையும் மொபைல் மற்றும் தொலைக்காட்சித் திரைகளுக்கு முன்னால் செலவிடுவதைத் தவிர்க்கவும்.

முழங்காலைத் தாங்கும் தசைகளை வலுப்படுத்துங்கள். தொடையின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் உள்ள தசைகள், இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வது முழங்காலின் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவும். ஏற்கெனவே வலி இருந்தால், பிசியோதெரபிஸ்ட்டின் (Physiotherapist) ஆலோசனையுடன் பயிற்சிகளைச் செய்வது நல்லது.

திடீரெனக் கடுமையான உடற்பயிற்சிகளைத் தொடங்காதீர்கள்.  உடற்பயிற்சியின் நேரத்தையும் தீவிரத்தையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். பயிற்சிக்கு முன்பு வார்ம்-அப் செய்யவும். உடலுக்குப் போதிய ஓய்வும் அளிக்க வேண்டும்.

சமச்சீரான உணவுப் பழக்கத்தையும் முறையான உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், முழங்கால் மூட்டுகளின் மீதான தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

ஏதேனும் உடற்பயிற்சியின்போது முழங்கால் வலி அதிகரித்தால், அந்தப் பயிற்சியை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்வதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவோ, முழங்கால் பட்டைகளை (Knee Supports) அணிவதையே நிரந்தரத் தீர்வாகக் கருதவோ கூடாது. வலிக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதே முக்கியம்.

சமச்சீரான உணவுப் பழக்கத்தையும் முறையான உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள்.

முழங்கால் வலி தொடர்ந்து நீடித்தாலோ, அடிக்கடி மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது அன்றாடச் செயல்பாடுகளை பாதித்தாலோ எலும்பியல் மருத்துவரை (Orthopaedic Specialist) அணுக வேண்டும். முழங்கால் வீக்கம், மூட்டு அசைவின்போது சிக்கிக்கொள்வது (Locking) அல்லது முழங்கால் திடீரென வலுவிழந்து உடலைத் தாங்க முடியாத உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை அவசியம். காய்ச்சலுடன்  மூட்டு சிவந்து போதல் மற்றும் வீக்கம், திடீரென ஏற்படும் கடுமையான வலி அல்லது காலில் உடல் எடையைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

ஆரோக்கியமான மூட்டுகளைப் பெறுவதற்கு உடற்பயிற்சி மட்டுமே போதாது. அன்றாட உடல் இயக்கம், தசைகளின் வலிமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைப் பழக்கங்கள் ஆகிய மூன்றும் அவசியம். இருபது வயதிலேயே இந்தப் பழக்கங்களை உருவாக்கிக் கொண்டால், எதிர்காலத்திலும் சுறுசுறுப்பான இயக்கத்தையும் மூட்டு ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

டாக்டர் தியாகராஜன் பாண்டியன்:

Senior Consultant in Orthopaedics and Joint Replacement, Gleneagles Hospital Chennai.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.