திருப்பரங்குன்றம்: 144 தடை உத்தரவு; வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர் - பதற்றத்தில் மதுரை!

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் 25 ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசர சட்டம்-ஒழுங்கு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் திரண்டு வருவதால் பொதுமக்கள், மதுரை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

திருப்பரங்குன்றம்

இத்தகைய பதற்றம் மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளதாகவும் காவல்துறை தரப்பிலான அறிக்கையின்படியும் தற்போது நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டு, BNSS பிரிவு 163-ன் கீழ் பொது அமைதியைப் பாதுகாக்கவும், மனித உயிர்கள், பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியின் நலன் கருதியும், இத்தகைய கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணாக்கள் போன்றவைகள் தடை செய்யப்படுகின்றன. 

பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகள், திருமணம், இறுதிச் சடங்கு அல்லது அதுபோன்ற குடும்ப நிகழ்வுகளின் போது கூடும் கூட்டம் அல்லது ஊர்வலம், மத வழிபாட்டுச் சடங்குகளின் போது கூடும் கூட்டம் அல்லது ஊர்வலம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் பூஜைகள் மற்றும் திருவிழா சடங்குகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தொடர்புடைய வழக்குகள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் விதமாக  வழக்கமான இடங்களில் நடைபெறும் தற்போதைய மத வழிபாடுகள் மற்றும் மலை மீதுள்ள தர்கா மற்றும் பிற நிறுவனங்களின் சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகள், அணுகல் மற்றும் பயன்பாடுகள் காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் எனவும் இந்த உத்தரவு 23.11.2026 இரவு 21:00 மணி முதல் 25.11.2026 காலை 10:00 மணி வரை (அதற்கு முன்னதாகத் திரும்பப் பெறப்படாவிட்டால்) நடைமுறையில் இருக்கும்" என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இதையொட்டி இன்று காலை முதல் மதுரையில் உள்ள இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும்  தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 5000 போலீசார் திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் மதுரையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.